Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM
மருத்துவப் படிப்பு பலரது கனவு. இதனால், இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கு கடும் போட்டி நிலவுகிறது. நம் நாட்டில் 380 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 49 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. தமிழகத்தில் 19 அரசுக் கல்லூரிகளில் 2,172 இடங்களும், 12 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 914 இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டில் 646 இடங்களும் உள்ளன. மிகக் குறைந்த இடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டியிடுவதால், உச்ச மதிப்பெண் பெறுபவர்களுக்கே அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.
வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்களில் மிகச் சிறந்த மதிப்பெண் பெறுபவர்களுக்கே மருத்துவப் படிப்பு கைகூடும். நடப்பாண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓ.சி. பிரிவினருக்கு 198; பி.சி-க்கு 197; எம்.பி.சி-க்கு 196; எஸ்.சி-க்கு 192.5 என கட் – ஆஃப் வந்தன.
மேலும், 199 மதிப்பெண் கட் - ஆஃப் பெற்றவர்கள், தரவரிசையில் 237-வது இடத்தில் இருந்தனர். 198 பெற்றவர்கள் 984-வது இடத்துக்கும், 197 பெற்றவர்கள் 1,885-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். இதிலிருந்தே மருத்துவப் படிப்புக்கு நிலவும் கடும் போட்டியை உணரலாம். போட்டியில் வெல்ல சிறந்த கட் - ஆஃப் முக்கியம். அப்போதுதான் அரசுக் கல்லூரியில் குறைந்த செலவில் படிக்க இயலும்.
தமிழகத்தில் 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நடப்பாண்டு இக்கல்லூரிகளில் ஓ.சி. பிரிவினருக்கு 196.5; பி.சி-க்கு 195.75; எம்.பி.சி-க்கு 194.25; எஸ்.சி-க்கு 188.5 கட்-ஆஃப் வந்தன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க விடுதி, கல்வி, இதரக் கட்டணம் என ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும்.
வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்புவோர் ஒருமுறைக்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். எந்த நாட்டில் மருத்துவம் படிக்க விரும்புகிறீர்களோ அந்நாட்டுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளித்திருக்க வேண்டும். அந்நாட்டில் மருத்துவம் படித்து முடித்து வந்தாலும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தேர்வில் வெற்றி பெற்றால்தான் இங்கு மருத்துவம் பார்க்க முடியும். தவிர, மருத்துவ பட்ட மேற்படிப்புக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் தேவை. வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர், இந்திய மருத்துவக் கவுன்சிலின் தேர்வில் தேர்ச்சி பெறாமல் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். எனவே, மருத்துவப் படிப்பை இந்தியாவில் படிப்பதே சிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT