Published : 09 May 2017 10:41 AM
Last Updated : 09 May 2017 10:41 AM
பொதுவாகச் சுட்டெரிக்கும் வெயிலின்போது உருப்பெருக்கிக் கண்ணாடிக்குக் கீழே மெல்லிய காகிதத்தை வைத்தால், சற்று நேரத்துக்குப் பிறகு அது எரிவதைக் காணலாம். இதேபோல வீட்டு ஜன்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி வழியாக ஊடுருவும் சூரியக் கதிர்வீச்சு தீயை உருவாக்குமா?
கேட்பதற்கு நம்ப முடியாதது போலத் தோன்றினாலும், கொள்கை அளவில் கண்ணாடி குவி ஆடியாக மாறும்போது சூரியக் கதிர்வீச்சு தீவிபத்தை ஏற்படுத்த சாத்தியமிருக்கிறது. தடித்த கண்ணாடியால் ஆன மீன் தொட்டிகள், ஜாம் பாட்டில்கள், ஏன் கண்ணாடிக் கதவுகளின் பிடியில் உள்ள தடித்த கண்ணாடிக் குமிழ்கள் சூரிய ஒளியை ஓரிடத்தில் குவிக்கலாம். இதனால் எரியக்கூடிய பொருட்களில் தீயற்ற புகை உருவாக ஆரம்பிக்கும். பிறகு தீப்பிடிக்கவும் செய்யலாம்.
சாத்தியம் உண்டு
இப்படி நடப்பதற்குக் காரணம் என்னவென்றால், பூமியின் ஒவ்வொரு சதுர மீட்டரிலும் சூரியக் கதிர்வீச்சு தொடர்ச்சியாக வெப்ப ஆற்றலை உமிழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த வெப்பக் கதிர்வீச்சு காகிதம், மரம், அல்லது எரியக்கூடிய பொருட்களில் தீ மூட்டப் போதுமானதில்லை. அதேநேரம் இந்த வெப்பக் கதிர்வீச்சு குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடர்ச்சியாகக் குவிமையப்படுத்தப்படும்போது, எரிவதற்கான புள்ளியைத் தொட்டுவிடும் சாத்தியம் உண்டு.
உருப்பெருக்கிக் கண்ணாடிகள் இதையே திறன் மிகுந்த வகையில் செய்கின்றன. சிதறும் ஒளியை ஒரு புள்ளியில் குவிப்பதன் மூலம் தீயை உருவாக்குகின்றன. அதேநேரம் உருப்பெருக்கி அல்லாத வேறு கண்ணாடித் துண்டுகளும் சில நேரம் இதேபோன்று செயல்படலாம். ஒரு பகுதியில் சூரியக் கதிர்வீச்சைக் குவிப்பதன் மூலம், இவை ஆபத்தை ஏற்படுத்தக் கொள்கை அளவில் சாத்தியம் உண்டு. லண்டனில் இதுபோல உண்மையிலேயே நடக்கவும் செய்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT