Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

வெளிநாடுகளில் பட்டம் படிக்க விருப்பமா?

வெளிநாடுகளில் பட்டப் படிப்பு படிக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், அதற்கான திறனாய்வு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அது சாத்தியம். பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவோர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளை தேர்வு செய்யலாம். மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ், சீனா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளை தேர்வு செய்யலாம். ஏனெனில், இங்கெல்லாம் மருத்துவப் படிப்புக்கு திறனாய்வு தகுதித் தேர்வு கிடையாது. அதேசமயம், வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவம் பார்க்க இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தனித் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அமெரிக்காவில் பட்டப் படிப்பு படிக்க விரும்புவோர் மருத்துவம் தவிர, பிற படிப்புகளுக்கு SAT-1, SAT - 2, TOEFL ஆகிய திறனாய்வுத் தகுதித் தேர்வுகளில் வெற்றிப் பெற வேண்டும். பட்ட மேற்படிப்பில் எம்.இ. படிக்க GRE தேர்விலும், எம்.பி.ஏ. படிக்க GMAT தேர்விலும் வெற்றி பெற வேண்டும். வெளிநாடுகளில் படிக்க செல்பவர்கள் ஆங்கில மொழித் திறனுக்கான TOEFL, IELTS ஆகியவற்றில் ஒன்றில் வெற்றி பெறுவது அவசியம். அமெரிக்காவில் இதர பட்டப் படிப்புகளைப் படிக்க SAT-1 தேர்விலும், அறிவியல் சார்ந்த பட்டப் படிப்பை படிக்க SAT-1, 2 ஆகிய இரு தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும்.

தற்போது இந்தியாவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர். வெளிநாடுகளில் படிக்க விரும்புவோர் அவர்களது குடும்பச் சூழல், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வெளிநாடுகளில் பட்டப் படிப்பு படிக்க ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை செலவாகும். தற்போது டாலர் மதிப்பு கூடியிருப்பதால் பட்டப் படிப்பை இந்தியாவில் முடித்துவிட்டு மேற்படிப்புக்கு மட்டும் வெளிநாட்டுக்குச் செல்வதே புத்திசாலித்தனம். வெளிநாடுகளில் படித்தவர்களுக்கும் உள்நாட்டில் படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனாலும், வெளிநாடுகளில் படித்ததை சில நிறுவனங்கள் கூடுதல் அனுபவமாக எடுத்துக்கொள்கின்றன. அதேசமயம், வெளிநாடுகளிலும் எளிதாக வேலைவாய்ப்பு பெறலாம். ஆனால், எங்குப் படித்தாலும் திறமையின் அடிப்படையில் மட்டுமே முன்னேற முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x