Published : 17 Jun 2017 12:17 PM
Last Updated : 17 Jun 2017 12:17 PM
ஆற்றங்கரை நாகரிகம் முதல் கடந்த நூற்றாண்டுவரை மனித இனம் தனக்குத் தேவையான உணவை, அன்றன்றைக்கு சமைத்தே சாப்பிட்டு வருகிறது. ஆனால் குளிர்பதனப் பெட்டியின் அதிரடி வருகைக்குப் பின்னர், முந்தைய நாளில் சமைத்த உணவை சற்று அதிகமாக சாப்பிடத் தொடங்கிவிட்டோம். இதன் காரணமாக உடல்நலத்தைக் குறித்து வைத்துத் தாக்குவதற்கு, கிருமிகளின் பெரும்படையுடன் நோய்கள் ஆயத்தமாகிவிடுகின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் மீந்த பழைய உணவு கழனிப் பானைக்குச் செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக, மீதமான பழைய உணவு குளிர்பதனப் பெட்டிக்குள்ளும், பிறகு நம் இரைப்பைக்குள்ளும்தான் அடிக்கடி தஞ்சமடைகிறது. ஆழ்ந்து யோசித்தால், மீந்த உணவுப் பொருட்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கழனிப் பானையாக நம் இரைப்பை மாறியிருப்பதை உணரலாம்.
அமுதெனினும் வேண்டாம்
நோய் நம்மை நெருங்காமல் இருக்க, ’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்ற கருத்தை வலியுறுத்துகிறது சித்த மருத்துவர் தேரையரின் கூற்று. ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டதாக கூறப்படும் ‘திரிகடுகம்’ எனும் நூலும், பழைய உணவை சாப்பிடாமல், நாள்தோறும் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.
பணிச் சுமை, நேரமின்மை, அவசர வாழ்க்கை என செயற்கை காரணங்களுக்காக நேற்றைய உணவை பத்திரமாகப் பாதுகாத்து இன்று சாப்பிடுகிறோம். ஆனால், இந்தப் பழக்கம் தொடரும்போது வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை, தோல் நோய், வாந்தி என பல்வேறு நோய்களுக்கு வழி அமைத்துக் கொடுத்துவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. சிறுதுளி பெருவெள்ளமாய், நஞ்சானது நமக்கே தெரியாமல் சிறிது சிறிதாக நாளடைவில் பெரிய நோய் அறிகுறிகளை உருவாக்கும்.
மாறுபடும் இயற்கைத் தன்மை
‘நேற்றைய உணவை இன்று சூடேற்றித்தானே சாப்பிடுகிறோம், அதில் கிருமிகள் இருந்தாலும் அழிந்துவிடுகின்றன, வேறு என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது?’ என்பதே பெரும்பாலோரின் கேள்வி. ஆனால், பாதிப்பு உறுதியாக இருக்கிறது என்பதே இதற்கு பதில். ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் நோய் தீர்க்கும் குணம் உண்டு. ஒரு உணவுப் பொருளின் சுவை, தன்மை, ஆயுட்காலம், சமைக்கப்படும் முறை, செரிமானத்துக்கு பின், அதில் உண்டாகும் மாறுபாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே, அதன் நோய் போக்கும் தன்மை அமையும்.
அதிகமாகச் சூடேற்றி அல்லது குளிர்மைப்படுத்தி, ஒரு உணவுப் பொருளை அதன் இயற்கை தன்மையிலிருந்து மாற்றும்போது, அதன் நோய் தீர்க்கும் பண்பும் மாறுபட்டு, நோய் உண்டாக்கும் காரணியாகிவிடும். அரிசியை அதிகக் கொதியில் சமைக்கும்போது குழைந்தோ, நசிந்தோ இயற்கை குணத்திலிருந்து மாறுபடுகிறது. அதைப்போல, ஒரு உணவை ஒரு முறை சமைத்து மறுநாள் சூடேற்றும்போது, உணவின் இயற்கைத் தன்மை மாறுபடும். அதில் ஒளிந்துக்கொண்டிருக்கும் கிருமிகள் முழுவதுமாக அழிந்துவிடுமா என்றால், அதுவும் இல்லை.
பதப்படுத்தப்பட்ட உணவு
இன்றைய காலகட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் காரணமாக காலையில் சமைத்த சில வகை உணவு, அடுத்த வேளையே கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் அதை மறுநாள்வரை வைத்திருந்து சாப்பிடுவது உகந்ததல்ல. குளிர்பதன வசதி கொண்ட மிகப்பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவை (Canned and Tinned foods) முடிந்தவரை தவிர்த்துவிட்டு, தினமும் கிடைக்கும் கீரை, காய்களால் தயாரிக்கப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் நஞ்சு உண்டாவதற்கான சாத்தியம் மிக அதிகம். ’சில நிமிடங்களில் ரெடி’ என விளம்பரப்படுத்தப்படும் சிற்றுண்டி வகைகளையும், அடைக்கப்பட்ட ’ரெடிமேட்’ சூப் ரகங்களையும் சாப்பிடும்போது உடலில் அடிக்கடி விஷ உணவு அறிகுறிகள் உண்டாவது கவனத்துக்குரியது.
விபரீதமாகும் பழைய அசைவம்
சைவ உணவைவிட அசைவ உணவைப் பதனப்படுத்தி சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். கெட்டுப்போன அசைவ உணவில் கிருமிகள் மறைந்திருந்து, உடல் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். வீட்டுக்கு அருகே வாழும் கோழியையோ ஆட்டையோ அப்போதைக்குப் பிடித்து, யாரும் இன்றைக்கு அசைவ உணவைத் தயாரிப்பதில்லை.
மாறாக அதிக அறிமுகம் இல்லாத உணவகங்களில் சுவைத்துச் சாப்பிடும் இறைச்சி உணவு, எப்போது சமைக்கப்பட்டது என்பதிலும் நம்பகத்தன்மை இருப்பதில்லை. கெட்டுப்போன உணவின் மூலம் பூஞ்சைகளையும் (Mycotoxins), பாக்டீரியாவையும் இலவசமாக நம் உடலுக்குள் நுழைய அனுமதிக்கும்போது, உடனடியாகவோ சில நாட்கள் கழித்தோ விபரீத பாதிப்புகள் உண்டாகலாம். பழைய மீன் குழம்பு சுவையானது என்பதற்காக, ஒருவாரம்வரை வைத்திருந்துப் பயன்படுத்துவது அறிவுடைமை அல்ல.
தேவையின்போது மட்டும்
வாரம் ஒரு முறையாவது உணவகங்களில் சாப்பிடப் பழகிவிட்ட மேல்தட்டுக் குடும்பங்கள், சுகாதாரமான மற்றும் நம்பகமான உணவகங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தேவை இருக்கும்போது மட்டும் உணவகங்களை நாடிச் செல்வது உசிதம். பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே போதுமான அளவு சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. வீட்டிலேயே சமைக்கப்படும் உணவில் என்னென்ன பொருட்கள் சேர்கின்றன, அவற்றின் பயன்கள் என்ன என்பதை உணர்ந்து சாப்பிடுவது மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்கின்றன உளவியல் ஆய்வுகள். இதுவே நமது உணவுக் கலாசாரத்தின் பெருமை. அதை விடுத்து உணவகங்களில் சாப்பிடும் உணவில் என்ன கூறுகள் சேர்கின்றன என்பது தெரியாமல், வயிற்றுக்குள் அனுப்புவது திருப்திகரமான, முழுமையான உணவாக மாறாது.
நோய்களின் தொடக்கப் புள்ளி
சமைத்து பக்குவப்படுத்தப்பட்டு குளிர்ந்து பின்பு மீண்டும் சூடாக்கப்பட்ட உணவு, வயிற்றில் ஆமத்தை உண்டாக்கி பலவித நோய்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறது சித்த மருத்துவம். பழைய உணவைத் தொடர்ந்து சாப்பிடும்போது, செரிமான ஆற்றல் பாதிக்கப்படும். உணவைச் செரிப்பதற்கு தேவையான செரிமான அக்கினி (Digestive fire), கெட்டுப் போன உணவில் விஷமாக்கினியாக மாறாமல் இருக்க, தினமும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.
நசிந்த பழைய உணவை உட்கொள்ளும்போது, நுண்கிருமிகளின் ஆதிக்கத்தால் விஷ உணவின் அறிகுறிகளான (Food poisoning) வாந்தி, சுரம், பேதி, மயக்கம் போன்றவை உண்டாகும்.
சேமிப்புக் கிடங்கு அல்ல
அறிவியல் வளர்ச்சியான குளிர்பதனப் பெட்டியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதையே உணவின் சேமிப்புக் கிடங்காக நெடு நாட்களுக்குப் பயன்படுத்துவதுதான் பிரச்சினை.
சாப்பிடத் தகுந்த ஒரே பழைய உணவு எதுவென்றால், இரவில் சாதத்தோடு நீர் சேர்த்து, மறுநாள் காலையில் நலம் பயக்கும் பாக்டீரியாவுடன் உண்ணத் தயாராக இருக்கும் ’நீராகாரம்’ மட்டுமே. தேவைக்குப் போக மீந்த உணவை குளிர் பதனப் பெட்டியில் அடைத்து வைக்காமல், பசியால் வாடுபவர்களுக்கு அன்றே தானம் செய்யலாம். அதிகளவில் மீந்த உணவைப் பெற்றுக்கொள்ள நிறைய தொண்டு நிறுவனங்களும் உள்ளன.
ஆயுட்கால நிர்ணயம்
கம்பு, சோளம், நெல் வகைகள் போன்ற மூலப்பொருட்களை பதனப்படுத்தும் முறைகள் நம் பாரம்பரியத்தில் அதிகம். ஆனால் சமைக்கப்பட்ட உணவை நீண்ட நாட்கள் பதனப்படுத்திப் பயன்படுத்துவது, நமது பாரம்பரிய உணவு முறைக்கு எதிரானதே. நாம் சாப்பிடும் உணவின் ஆயுட்காலத்தை தரநிர்ணயம் செய்தால், உணவு நமது ஆயுட்காலத்தை நிர்ணயம் செய்யும். வயிற்றின் மென்தசைகளுக்கும், அதன் செரிமானச் சுரப்புகளுக்கும் கெட்டுப் போன கழிவு உணவுக்குப் பதிலாக, புதிதாகச் சமைத்த உணவைப் பரிசளித்தால் உடல்நலமும் புத்துணர்ச்சியும் புத்துயிரும் பெறும்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT