Published : 07 Oct 2013 06:46 PM
Last Updated : 07 Oct 2013 06:46 PM
ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய வீரர்களுக்கு பட்டப் படிப்பு தகுதிக்கு இணையான வேலையை மற்ற மாநிலங்கள் வழங்கும் நிலையில், தமிழகம் மட்டும் மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.
முன்னாள் ராணுவத்தினர்
நாட்டைக் காக்கும் பணியில் இரவு பகல் பாராமல் பசி நோக்காமல் பணியாற்றி ஒய்வுபெறும் முப்படை வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மத்திய-மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடும் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது.
ராணுவ வீரர்களைப் பொருத்தவரையில், பெரும்பாலானவர்கள் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.
பட்டப் படிப்புக்கு இணையான வேலை
மற்ற அரசு பணியைப் போன்று வேலையில் இருந்துகொண்டு தபால் வழியில் மேற்படிப்பை தொடர்வது மிகவும் சிரமமமான காரியம். 24 மணி நேர பணி ஒருபுறம் காரணமாக இருந்தாலும் அடிக்கடி தொலைதூர பகுதிகள், மலைப்பிரதேசங்களில் பணியாற்றக்கூடிய சூழலும், அடிக்கடி சந்திக்கும் இடமாற்றமும் மற்றொரு காரணம்.
இத்தகைய சூழ்நிலைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான் ராணுவத்தில் 15 ஆண்டு பணியாற்றிய எஸ்.எஸ்.எல்.சி. தகுதி கொண்ட வீரர்களை பட்டப் படிப்பு தகுதிக்கு இணையான வேலைகளுக்கு பரிசீலிக்கலாம் என்று மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை கேரளா, புதுச்சேரி, குஜராத், மகராஷ்டிரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.
தமிழகம் மறுப்பது ஏன்?
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைம் (யு.பி.எஸ்.சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) ஆகிய தேர்வாணையங்களும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், வங்கிகளும் மேற்கண்ட ஆணையை கடைப்பிடித்து வேலை வழங்குகின்றன.
இப்படி இதர மாநில அரசுகளும், மத்திய பணியாளர் தேர்வாணையங்களும் ராணுவத்தினரின் தியாகத்தை போற்றி வேலை வழங்கி வரும் நிலையில், தமிழக அரசு மட்டும் அவர்களை அவமரியாதை செய்வது போன்று வேலைக்கு பரிசீலிக்க மறுப்பது ஏன் என்று முன்னாள் ராணுவத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
5 சதவீத இடஒதுக்கீடு
தமிழக அரசு பணியில் முன்னாள் ராணுவத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ரூ.5,200 அடிப்படை சம்பளம் உடைய பதவிகளுக்கும் பட்டப் படிப்பு கல்வித்தகுதி உடைய கிரேடு சம்பளம் ரூ.4,400 வரையுள்ள 9,300 அடிப்படைச் சம்பளம் கொண்ட பதவிக்கும் மட்டுமே இந்த இடஒதுக்கீடு பொருத்தும்.
ரூ.9,300 அடிப்படை சம்பள பணிகள் அனைத்துமே பட்டப் படிப்பு கல்வித்தகுதியை அடிப்படையாக கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
15 ஆண்டு பணிக்காலம்
மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவின்படி, 15 ஆண்டு கால ராணுவ பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பட்டப் படிப்பு தகுதிக்கான வேலைகளுக்குத் தங்களை பரிசீலிக்க வேண்டும் என்பது முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கை.
ஆனால், அதுபோன்று 15 ஆண்டு கால பணிக்காலத்தை வைத்து பட்டப் படிப்பு கல்வித்தகுதியிலான பணிகளுக்கு பரிசீலிக்க முடியாது என்று தமிழக அரசு மறுத்துவிட்டது.
வேலை கிடைக்காமல் பாதிப்பு
இதனால், குருப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் உரிய கல்வித்தகுதி இல்லை என்று அரசு நிராகரித்ததால் 250-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாநில அரசுகளைப் போல தமிழக அரசும், மத்திய பணியாளர் நலத்துறையின் உத்தரவை பின்பற்றி 15 ஆண்டு கால பணிக்காலத்தை பட்டப் படிப்பு தகுதியான வேலைகளுக்கு பரிசீலிக்க வேண்டும் என்பது முன்னாள் ராணுவத்தினரின் வேண்டுகோள். நாட்டை காக்கும் வீரர்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT