Published : 07 Oct 2013 05:07 PM
Last Updated : 07 Oct 2013 05:07 PM

மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப் பணியாக மாவட்ட கல்வி அதிகாரி பதவி உள்ளது.

இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது. பதவி உயர்வைப் பொருத்த வரையில், 40 சதவீத இடங்களை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டும், மீதமுள்ள 35 சதவீத இடங்களை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்புகிறார்கள்.

மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித் தேர்வு நடத்தும். காலி பணியிடங்களில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு என ஒவ்வொரு பாடத்துக்கும் இடங்கள் ஒதுக்கப்படும். சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை படிப்பும், பி.எட். பட்டமும் பெற்றிருப்பவர்கள் டி.இ.ஓ. நேரடித்தேர்வு எழுதலாம்.

முன்பு நேரடித் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து முதுகலை பட்டப் படிப்பு தகுதியில் ஆப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் கேள்விகள் கேட்கப்படும். அண்மையில், டி.என்.பி.எஸ்.சி. ஒட்டுமொத்தமாக குருப்-1, குரூப்-2, குரூப்-4 என அனைத்து தேர்வுகளையும் மாற்றியமைத்தது. அதில் டி.இ.ஓ. தேர்வும் மாற்றத்துக்குள்ளானது.

புதிய தேர்வு முறையில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகள் கொண்ட முதல்நிலைத் தேர்வு, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வில் மொத்தம் 3 தாள்கள். பொது அறிவு சம்பந்தப்பட்ட 2 தாள்களும் விரிவான முறையில் பதில் அளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

3-வது தாளில் கல்வி மற்றும் கல்வி உளவியல் தொடர்பாக ஆப்ஜெக்டிவ் முறையிலான வினாக்கள் இடம்பெறும். கடைசியில் முன்பு இருந்து வந்ததைப் போல் நேர்முகத்தேர்வு உண்டு. இந்த நிலையில், மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்புவதற்கு பாடவாரியான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி.க்கு பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது.

நேரடியாக டி.இ.ஓ. பணியில் சேருவோர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (சி.இ.ஓ.), இணை இயக்குநர், இயக்குநர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.

பணி அனுபவத்துடன் தகுதியும் திறமையும் இருந்தால் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பதவி உயர்வு பெறவும் வாய்ப்பு இருக்கிறது. பதவி உயர்வில் வருவாய்த் துறை அல்லாத பிரிவின் கீழ் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வருவோரில் பலர் பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x