Published : 21 Jun 2016 12:06 PM
Last Updated : 21 Jun 2016 12:06 PM

மேக்டலின் செய்யும் மேஜிக்

செயல்திட்ட வழி கற்றல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பா.மேக்டலின் பிரேமலதா இம்முறையில்தான் தனது மாணவர்களுக்கு அனுபவக் கல்வியைக் கற்றுத்தருகிறார்.

2005-ல் களமிறங்கிய பிரேமலதா, தன்னுடைய மாணவர்களுக்குக் கொடுத்த தலைப்பு ‘குழந்தைத் தொழிலாளர் முறை’. ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குக் குழந்தைத் தொழிலாளர்கள், அவர்களின் சூழல் போன்ற தகவல்களைத் திரட்ட மாணவர்களுக்குச் செயல் திட்டம் கொடுக்கப்பட்டது.

பிரேமலதா தயாரித்துத் தந்திருந்த கேள்விகளை எடுத்துக்கொண்டு களத்துக்குச் சென்று பார்த்து ஆய்வறிக்கையை மாணவர்கள் சமர்ப்பித்தார்கள். இவர்களுடைய முயற்சியால், 9 பிள்ளைகள் மீண்டும் பள்ளிக்குப் பயணப்பட்டார்கள்.

அடுத்து, ‘புகையிலை பயன்பாட்டின் தீமைகள்’ என்ற தலைப்பில் ஒரு கிராமத்தில் ஆய்வு நடத்த, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் புகையிலையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டார்கள்.

“புகையிலைப் பொருட்களை யாருக்கும் வாங்கித்தர மாட்டோம்” என இன்றைக்கும் இறைவழிபாட்டின்போது உறுதிமொழி எடுக்கிறார்கள் இந்தப் பள்ளியின் மாணவர்கள். இப்படிப் பல விஷயங்கள்!

புரிந்து படித்தால்…

“தியரியாகக் கொடுப்பதைவிட நேரடிச் செயல்திட்டமாகக் கொடுத்தால் அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை மாணவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறார்கள். நினைவாற்றலால் படித்ததை அப்படியே எழுதிவிடலாம். பாடத்தை எப்படிப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதை செயல்திட்ட வழி கற்றல் முறையில்தான் தெரிந்துகொள்ள முடியும்” என்கிறார் மேக்டலின் பிரேமலதா.

தொடர்புக்கு: 94435 54078

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x