Published : 25 Apr 2017 10:57 AM
Last Updated : 25 Apr 2017 10:57 AM
புத்தகங்களின் பின்னட்டையின் கீழ்ப்புறத்தில் பார்கோடு இருப்பதைப் பார்த்திருக்கலாம். அந்த பார்கோடு விலையைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமா பயன்படுகிறது?
இல்லை. அந்த பார்கோடுக்கு மேலும் கீழும் சில எண்கள் இருப்பதைப் பார்க்கலாம். அந்த எண்கள் சர்வதேசத் தரப் புத்தக எண்ணை (International Standard Book Number - ISBN) குறிக்கின்றன.
இந்த எண் உலகெங்கும் உள்ள புத்தகங்களுக்கு வழங்கப்படுகிறது. ஐ.எஸ்.பி.என். அமைப்பில் இணைந்துள்ள பதிப்பகங்கள் பதிப்பிக்கும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒவ்வொரு பதிப்புக்கும் தனித்துவமான எண் வழங்கப்படுகிறது.
இதில் முதல் பகுதி நாடுக்கான குறியீடு, அடுத்ததாகப் பதிப்பாளர் குறியீடு, மூன்றாவதாகக் குறிப்பிட்ட புத்தகத்துக்கான குறியீடு, கடைசியாக இருக்கும் எண் ஒரே எண், திரும்ப வழங்கப்படுவதைத் தடுப்பதற்காக வழங்கப்படும் பரிசோதனை எண்.
இந்திய நடைமுறை
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் மதிப்புறு புள்ளியியல் பேராசிரியராக இருந்த கார்டான் பாஸ்டர் 1966-ம் ஆண்டு இந்த எண்ணிடும் முறையை உருவாக்கினார்.
நம் நாட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், உயர்கல்வித் துறையின் கீழ் ஐ.எஸ்.பி.என். எண்ணை வழங்குவதற்காக ராஜா ராம்மோகன் ராய் தேசிய அமைப்பு செயல்பட்டுவருகிறது. ஐ.எஸ்.பி.என். எண்ணைப் பெறுவதற்கு இந்தியாவில் எந்தக் கட்டணமும் கிடையாது.
அதேநேரம் இந்த ஐ.எஸ்.பி.என். எண்ணை உலகின் பெரும்பாலான அரசுப் பதிப்பகங்கள் பின்பற்றுவதில்லை. ஐ.எஸ்.பி.என். எண்ணுக்கும் நூலகத்தில் புத்தகங்களை வகைப்படுத்தி வைப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. நூலக வகைப்பாட்டு எண் ஐ.எஸ்.பி.என். எண்ணிலிருந்து வேறுபடும்.
ஐ.எஸ்.பி.என். எண்ணைப் போலவே சர்வதேசத் தரத் தொடர் எண் (ISSN), இதழ்களைப் போன்று குறிப்பிட்ட காலத்தில் வெளிவரும் புத்தகங்களை அடையாளம் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT