Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு இணையாக, இன்னும் சொல்லப்போனால் அவற்றைவிட அதிகமாகவே அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அது குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் பெற்றோரிடமும் குறைவாகத்தான் உள்ளது. பிளஸ் டூ முடித்துவிட்டு அறிவியல் படிப்புகளில் சேர வேண்டுமானால் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. அதன்பிறகு எம்.எஸ்சி. பட்டம் பெறலாம். இது ஒரு வழி.
மற்றொரு வகை, பிளஸ் டூ முடித்துவிட்டு நேரடியாக ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. படிப்பில் சேருவது.
அந்த வகையில், மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Science Education and Research-NISER), மும்பை பல்கலைக்கழகத்தில் அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையம் (Centre for Excellence in Basic Science), மேற்கு வங்கம் விஸ்வ பாரதி உயர்கல்வி மையத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (Integrated Science and Education and Research) ஆகிய கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. (உயிரியல், வேதியியல், கணிதம்) படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளின் சிறப்பம்சம் என்னவென்றால், இங்குப் படிப்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என்பதே. இதுதவிர, புராஜெக்ட் பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் தனியாக வழங்குகிறார்கள்.
மத்திய அரசின் "இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்" திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அதிநவீன ஆய்வகங்கள், கணினி வசதிகளுடன் படிப்பதற்கும் ஆராய்ச்சிக்கும் உகந்த நல்ல சூழல் அமைந்திருப்பது, இந்தக் கல்வி நிறுவனங்களின் சிறப்பு அம்சம்.
மேற்கண்ட ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. படிப்புகளில் சேருவதற்கு NEST (National Entrance Screening Test) என்று அழைக்கப்படும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். 2014 - 2015ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நெஸ்ட் நுழைவுத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை எழுதப் பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களை எடுத்துக் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் என்றால் 55 சதவீத மதிப்பெண் போதும்.
2012, 2013ஆம் ஆண்டுகளில் பிளஸ் டூ முடித்தவர்களும், இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 22.7.1994 அன்று அல்லது அதற்குப் பின்னர்ப் பிறந்திருப்பவராக இருக்க வேண்டியது அவசியம்.
நுழைவுத்தேர்வில் ஆப்ஜெக்டிவ் முறையில் அறிவியல், கணிதப் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொதுவாகச் சி.பி.எஸ்.இ. பிளஸ் ஒன், பிளஸ் டூ பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். நெஸ்ட் நுழைவுத்தேர்வுக்கு www.nestexam.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மார்ச் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மே மாதம் 31ஆம் தேதி சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் 45 நகரங்களில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வு முடிவு ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. நுழைவுத்தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் உள்பட அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் அறிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT