Published : 14 Feb 2017 12:26 PM
Last Updated : 14 Feb 2017 12:26 PM
தமிழக அரசில் நீடிக்கும் சிக்கல்
பிப்ரவரி 5 அன்று, தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அரசியல் கட்சியான அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்துவந்த ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவுக்கு அனுப்பிவைத்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக ஆளுநரும் தெரிவித்துவிட்டார். ஆளுநர் சென்னை திரும்பியதும் சசிகலாவின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்ற சூழல் நிலவியது. இதற்கிடையே பிப்ரவரி 7 அன்று இரவு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்துவிட்டு, நாற்பது நிமிடங்கள் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பினரின் நிர்பந்தம் காரணமாகவே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தேவைப்பட்டால் ராஜினாமாவை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தப் பேட்டி காரணமாக தமிழக அரசியலில் குழப்பான சூழல் உருவானது. இந்நிலையில், பிப்ரவரி 9 ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பினார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் அவரைச் சென்று பார்த்து தத்தமது ஆதரவு நிலையை எடுத்துரைத்தனர். ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக ஆளுநர் இதுவரை தனது முடிவைத் தெரிவிக்கவில்லை.
ஒடிசாவில் அருகிவரும் ஐராவதி ஓங்கில்கள்
ஒடிசா மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அந்த மாநிலத்தில் வாழும் ஓங்கில்கள் பற்றிய 2016-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. அந்தக் கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் 181 ஐராவதி ஓங்கில்கள் உள்ளன. 2015-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 450 ஆக இருந்துள்ளது. சிலிகா ஏரியில் ஐராவதி ஓங்கில்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 145 ஆக இருந்து, 2016-ம் ஆண்டில் 134 ஆகக் குறைந்திருக்கிறது. அருகிவரும் இனமான ஐராவதி ஓங்கில்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் காணப்படுவதாக அந்தக் கணக்கெடுப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஐராவதி ஓங்கில்கள் என்பவை உண்மையில் ஆற்று நீரில், அதாவது நன்னீரில் வாழும் ஓங்கில்கள் அல்ல. அவை கடற்கரையோரப் பகுதிகளில் உவர் நீரிலும், கழிமுகப் பகுதிகளிலும் வாழ்கின்றன. சுற்றுலாவின் பொருட்டும், அணைக் கட்டு போன்றவற்றை உருவாக்குவதற்காகவும் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் போன்ற காரணங்களால் இவை அருகிவருகின்றன.
அறுவை சிகிச்சை நிபுணருக்கு பி. சி. ராய் விருது
இந்திய மார்பக அறுவை சிகிச்சைக் கழகத்தின் தலைவராகச் செயல்படுபவர் டாக்டர் பி. ரகு ராம். இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட மார்பக நோய்களுக்கான அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் இவர் 2016-ம் ஆண்டுக்கான, மருத்துவத் துறையின் உச்ச விருதான, டாக்டர் பி.சி. ராய் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆண்டுதோறும் மருத்துவத் துறையில் ஆறு பிரிவுகளில் பி.சி. ராய் விருது வழங்கப்பட்டுவருகிறது. 2016-ம் ஆண்டில் சமூக- மருத்துவ நிவாரணத் துறையில் இவரது மேன்மையான பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் இந்த விருது இவருக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்திய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படும், டாக்டர் பி.சி.ராயின் பிறந்த நாளான ஜூலை 1 அன்று நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் இந்த விருது டாக்டர் ரகு ராமுக்கு வழங்கப்படும். ஆந்திரா, தெலங்கான மாநிலங்களிலேயே மிகவும் இள வயதில் இந்த விருதைப் பெறும் அறுவை சிகிச்சை நிபுணர் இவர்தான். இந்த மாநிலங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் டாக்டர் ரகு ராமின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப அறிவு தரும் புதிய திட்டம்
கிராமப்புறத்தில் வாழும் குடும்பங் களுக்குக் கணினிசார் தொழில்நுட்ப அறிவூட்டுவதற்காக பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஷர்தா அபியான் என்னும் பெயரில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் செயல்படும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மார்ச் 2019-க்குள் சுமார் ஆறு கோடிக் கிராமப்புறக் குடும்பங்களுக்குக் கணினிசார் தொழில்நுட்ப அறிவூட்டப்படும். உலகத்தில் கணினிசார் தொழில்நுட்ப அறிவை வழங்கும் மிகப் பெரிய திட்டங்களில் இத்திட்டமும் ஒன்று. 2016-17-ம் ஆண்டுகளில் 25 லட்சம் பேருக்கும் அடுத்த நிதியாண்டில் 2.75 கோடி பேருக்கும், இறுதியாக 2018-19-ம் ஆண்டுகளில் 3 கோடி பேருக்கும் கணினிசார் பயிற்சி அளித்து, அவர்களை கணினிசார் தொழில்நுட்ப அறிவுபெற்றவர்களாக மாற்றும்வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவு பெற்றவர்களால் கணினியை இயக்கவும் கைபேசி உள்ளிட்ட மின்னணுக் கருவிகளைக் கையாளவும் இணையத்தைப் பயன்படுத்தவும், இணையம் தொடர்பான அரசு சேவைகளைப் பெறவும் முடியும் என்பதே இதன் சிறப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT