Published : 02 May 2017 10:30 AM
Last Updated : 02 May 2017 10:30 AM
அரசுப் பள்ளிகள் குறித்த நெடுநாள் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அங்கு பணிபுரியும் ஆசிரியர் வருகைப்பதிவு பற்றியது. ஆனால் இந்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை சரியாகவே உள்ளது என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு. 2.5 சதவீதத்துக்கும் குறைவான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே நியாயமான காரணங்கள் இன்றி விடுப்பு எடுக்கிறார்கள் எனச் சொல்லும் இந்த ஆய்வை பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை மேற்கொண்டது.
தேவையற்ற விடுப்பு எடுப்பதாக அடையாளம் காணப்படும் ஆசிரியர்களும் புறச் சூழலின் காரணமாகவே இதைச் செய்வதாக இந்த ஆய்வில் தெரியவந்ததுள்ளது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கள ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவை வெளியிட்டுள்ளதாக அந்த ஆய்வுக் குழு தெரிவிக்கிறது.
பொதுவாகவே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன்தான் கற்பிக்கிறார்கள் என கள ஆதாரங்களை முன்வைக்கிறது அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை. உதாரணமாக, கர்நாடகாவில் உள்ள யாத்கிரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அங்கேயே தங்கியிருந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் வாழ்வியலை புரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு உதவ முயன்றிருக்கிறார்கள். அதேபோல ராஜஸ்தான் டோங்கைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் தினந்தோறும் பலவிதமான போக்குவரத்து வாகனங்களை மாறி மாறிப் பிடித்துப் பள்ளிக்கு வந்து பாடம் கற்பிக்கிறார்கள்.
இப்படியாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுகூலமான பணிச் சூழலோ, போதுமான ஒத்துழைப்போ இல்லை என்பதே பிரதான பிரச்சினை. குறிப்பாக சீரான போக்குவரத்து வசதியும் - வாகனங்களும் இல்லாததும், மோசமான உள்கட்டமைப்பும், சொற்பமான ஆசிரியர் எண்ணிக்கையும்தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொண்டுவரும் மிகப் பெரிய சிக்கல்.
ஏற்கெனவே இது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை ஏன் ஆசிரியர்கள் சரியாகப் பள்ளிக்கு வருவதில்லை என்பதற்காக மூல காரணங்களை ஆராயவில்லை. இன்னும் பல பள்ளிகளில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களே இல்லாதபோது, ஆசிரியர் வருகைபதிவு குறித்து மட்டுமே இத்தனை காலம் விமர்சித்துவருவது நியாயமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT