Last Updated : 21 Jun, 2016 11:56 AM

 

Published : 21 Jun 2016 11:56 AM
Last Updated : 21 Jun 2016 11:56 AM

இனியும் வேலைக்கு லிங்க்டுஇன்னை நம்பலாமா?

சமூக வலைப்பின்னல் உலகில் லிங்க்டுஇன் (Linkedin.com) தளம் ஒரு அழகான முரணாகவே இருக்கிறது. ஃபேஸ்புக், டிவிட்டர் போல லிங்க்டுஇன் தளமும் முன்னணி சமூக வலைப்பின்னல் சேவைதான். ஆனால், ஃபேஸ்புக், டிவிட்டர்போல அது பரவலாக அறியப்படவில்லை. அதற்காக லிங்க்டுஇன் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. தொழில்முறை வட்டாரத்தில் அதுதான் ராஜா. தொழில்முறை வல்லுநர்கள் பரஸ்பரம் தொடர்புகொள்வதற்கும், வேலைவாய்ப்பு நாடுபவர்களுக்குப் பாலமாகவும் அது விளங்குகிறது. வேலை தேடுபவர்கள் மட்டும் அல்ல, தங்கள் நிறுவனத்துக்குப் பொருத்தமான ஊழியர்களைத் தேடும் தொழில்முறை நிர்வாகிகள் வலைவீசும் இடமாகவும் அது இருக்கிறது. ஒருவிதத்தில் லிங்க்டுஇன் சேவையை வேலைவாய்ப்புக்கான ஃபேஸ்புக் எனலாம். சொல்லப்போனால் ஃபேஸ்புக்குக்கு முன்னரே 2002-ல் ரீட் ஹாப்மன்னால் லிங்க்டுஇன் தொடங்கப்பட்டது.

இதுவரை இந்தச் சேவையை அதிகம் அறியாதவர்கள்கூட, தற்போது அந்நிறுவனம் மீது ஆர்வம் காட்டுகின்றனர். காரணம், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் லிங்க்டுஇன் நிறுவனத்தை 2,600 கோடியே 20 லட்சம் (26.2 பில்லியன்) டாலர்கள் விலைக்கு வாங்குவதாக அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகில் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் இந்தச் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப வரலாற்றில் மூன்றாவது பெரிய பேரமாக இது கருதப்படுகிறது. இந்தியரான சத்யா நாதெள்ளா மைக்ரோசாஃப்ட்டின் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்ற பிறகு அந்நிறுவனம் மேற்கொள்ளும் மிகப் பெரிய ஒப்பந்தம் இது.

லிங்க்டுஇன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியது ஏன்? இதனால் மைக்ரோசாப்ட்டுக்கு என்ன பலன்? இதனால் லிங்க்டுஇன்னுக்கு என்ன லாபம் என்பது போன்ற கேள்விகள் எழுவதோடு, லிங்க்டுஇன் பயனாளிகள் மத்தியிலும் பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.

சமூக நோக்கம்

தொழில்நுட்ப உலகில் கையகப்படுத்தல் என்பது வழக்கமான உத்திதானே! வளர்ந்துவரும் நிறுவனங்களைப் பெரிய நிறுவனங்கள் பல விலைக்கு வாங்கியிருக்கின்றன. ஸ்கைப், மைன்கிராப்ட் உட்பட பல நிறுவனங்களை ஏற்கெனவே மைக்ரோசாப்ட் கையகப்படுத்தியுள்ளது. இவ்வளவு ஏன், லிங்க்டுஇன் நிறுவனமேகூட கடந்த ஆண்டு இணையக் கல்வி வழங்குவதில் முன்னோடியான லிண்டா.காம் தளத்தைக் கையகப்படுத்தியது. இப்போது அந்நிறுவனமே மைக்ரோசாஃப்ட் வசமாகியிருக்கிறது.

லிங்க்டுஇன் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கக் காரணம் அதன் சமூகத்தன்மையே. லிங்க்டுஇன் 43 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளோடு செல்வாக்கு மிக்க தொழில்முறை சமூக வலைப்பின்னலாக இருக்கிறது. ஃபேஸ்புக்கின் பயனாளிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், லிங்க்டுஇன் பயனாளிகள் அனைவரும் தொழில்முறையாளர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இளம் ஊழியர்களும், கார்ப்பரேட் நிர்வாகிகளும், தொழில் வல்லுநர்களும் அங்கம் வகிக்கும் மாபெரும் தொழில்முறை சமூகமாக அது விளங்குகிறது. அதனால்தான் மைக்ரோசாஃப்ட் அதைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. இதன் மூலம் மைக்ரோசாஃப்ட்டுக்குச் சமூக வலைப்பின்னல் உலகில் இருந்த வெற்றிடம் நீங்கியிருக்கிறது என்பதோடு, லிங்க்டுஇன் சமூகம் அதன் ஆதார வர்த்தகத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது.

மாறும் அணுகுமுறை

ஒரு காலத்தில் சாஃப்ட்வேர் உலகில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் செலுத்தியது. விண்டோஸ் தவிர, இமெயில், சர்வர் டேட்டாபேஸ் போன்ற சாஃப்ட்வேர் சேவைகள் மூலம் டெஸ்க்டாப் உலகில் மைக்ரோசாஃப்ட் கொடிகட்டிப் பறந்தது.

ஆனால் 2000-த்துக்குப் பிறகு இரண்டு முக்கியப் போக்குகள் இதற்கு எதிராக அமைந்தன. முதலில் கூகுள் முன்னெடுத்த இணையச் செயலி சார்ந்த சேவைகள் காரணமாக ஜிமெயில், கூகுள் டாக்ஸ் போன்றவை செல்வாக்கு பெற்றன. டெஸ்க்டாப் சார்ந்த சேவைகளின் மவுசு குறைந்தது. இரண்டாவதாக, ஸ்மார்ட்ஃபோன் எழுச்சி காரணமாக ஐ.ஒ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு முதன்மையான இயங்குதளங்களாக உருவெடுத்தன. இந்தப் போட்டியைச் சமாளிக்க முயன்ற மைக்ரோசாஃப்ட் திணறியது. அதனால் கிளவுட் சார்ந்த சேவைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டண சேவைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தது.

தற்போது சத்யா நாதெள்ளா பொறுப்பேற்ற பிறகு இந்த திசையில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்டின் நோக்கத்துக்கு, லிங்க்டுஇன் கச்சிதமாகப் பொருந்துகிறது. இதன் மூலம் ஆபீஸ் 365 சேவையைத் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகிகளுடன் மைக்ரோசாஃப்ட் இனி சிறப்பாக ஒருங்கிணைக்க முடியும்.

தற்போது சத்யா நாதெள்ளா பொறுப்பேற்ற பிறகு இந்த திசையில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்டின் நோக்கத்துக்கு, லிங்க்டுஇன் கச்சிதமாகப் பொருந்துகிறது. இதன் மூலம் ஆபீஸ் 365 சேவையைத் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகிகளுடன் மைக்ரோசாஃப்ட் இனி சிறப்பாக ஒருங்கிணைக்க முடியும்.

செயற்கை அறிவு

வர்த்தக வாடிக்கையாளர்களிடம் அதிக கவனம் செலுத்த உள்ள நிலையில் லிங்க்டுஇன் வசம் உள்ள தொழில்முறை சமூகம் மைக்ரோசாஃப்ட்டுக்கு வரப்பிரசாதமாக அமையலாம். மேலும் நுகர்வோர்போல வர்த்தக வாடிக்கையாளர்கள் அடிக்கடி சேவை மாறுவதில்லை. எனவே, இன்று மைக்ரோசாஃப்ட் மென்பொருள் சார்ந்துள்ள நிறுவனங்கள் வருங்காலத்திலும், அதே திசையில் பயணிக்கலாம். நிறுவனமும் தனது கூடுதல் சேவைகளை விற்க எளிதாக இருக்கும். அது மட்டுமல்லாமல், தற்போது ஃபேஸ்புக்கும் வேலைக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது. கூகுளும் இது தொடர்பாக ஆர்வம் காட்டுகிறது. இந்தக் காரணங்களை வைத்துப்பார்த்தால் மைக்ரோசாஃப்ட்டுக்கு லிங்க்டுஇன் தகவல் சுரங்கமாக இருக்கும்.

என்ன பலன்?

ஃபேஸ்புக்கின் நியூஸ்பீட் சேவை போலவே, இப்போது லிங்க்டுஇன்னும் செய்திச் சேவையை பெற்றிருக்கிறது. இதன் மூலமாக மைக்ரோசாஃப்ட் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக முயற்சிக்கும். இதே போல, தனது தானியங்கி உதவியாளர் சேவையான கார்ட்டனாவையும் இந்த வலைப்பின்னலுடன் ஒருங்கிணைக்கும். இணையத் தேடலின்போது, கார்ட்டனா, பயனாளிகளின் தொழில்முறை தொடர்புகளை உணர்ந்துகொண்டு அதற்கேற்ற பரிந்துரைகளைச் செய்யும் வாய்ப்புள்ளது.

கார்ட்டனா போன்ற செயற்கை அறிவு சார்ந்த சேவைகள் எதிர்காலத்தில் பெரும் செல்வாக்கு பெறும் என பரபரப்பாகப் பேசப்படுவதால், மைக்ரோசாஃப்ட்டுக்கு இது வலுவான அடித்தளமாக அமையும்.

லிங்க்டுஇன்னை மைக்ரோசாஃப்ட் வாங்கியதால் இத்தனை பலன்கள் காணப்பட்டாலும் நடைமுறையில் என்னவாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காரணம், ஸ்கைப் மற்றும் யாம்மர் உள்ளிட்ட மென்பொருள் சேவைகளை ஏற்கெனவே மைக்ரோசாஃப்ட் வாங்கியும் அதனால் இதுவரை பெரிய ஆதாயம் இல்லை.

லிங்க்டுஇன் சேவையைப் பொறுத்த வரை இது பலன் தரக்கூடிய முடிவே. தொழில்முறை வலைப்பின்னலாக அது வளர்ச்சியைக் கண்டுவந்தாலும் லாப விகிதம் குறித்த கேள்விகள் இருக்கின்றன. எல்லாம் சரி, இதனால் லிங்க்டுஇன் பயனாளிகளுக்கு என்ன பயன்? அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்குமா? லிங்க்டுஇன் பயனாளிகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே இரண்டாவதாக அதிக அளவில் பயனாளிகளைக் கொண்டிருப்பதால் நம்மவர்களுக்கு இந்த முடிவின் தாக்கம் பற்றி அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால், கையகப்படுத்தலுக்குப் பின் லிங்க்டுஇன் சுயேச்சையான நிறுவனமாகத் தொடரும் என்றும் அதன் சி.இ.ஒ ஜெப் வெய்னர், சத்யா நாதெள்ளாவின் கீழ் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, ஸ்கைப் சேவைபோலவே லிங்க்டுஇன்னும் தொடர்ந்து எந்த பாதிப்பும் இல்லாமல் செயல்படும். மைக்ரோசாஃப்ட்டுக்கு லிங்க்டுஇன் சமூகம் தேவை என்பதால் பயனாளிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x