Published : 01 Jan 2014 03:12 PM
Last Updated : 01 Jan 2014 03:12 PM
பைலட்டாக வேண்டும்.. வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டு. பைலட் கோர்ஸ் படிக்க விரும்புபவர்கள் வசதி படைத்த வராக இருக்கவேண்டியது அவசியமாகிறது. அரசுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பைலட் கோர்ஸ் கற்பிக்கப்படுகிறது. ஸ்டூடன்ட் பைலட் லைசன்ஸ், பிரைவேட் பைலட் லைசன்ஸ், கமர்ஷியல் பைலட் லைசன்ஸ் என 3 கட்டங்களைக் கொண்டிருக்கிறது விமான ஓட்டுநர் படிப்பு.
பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவை எடுத்தவர்கள் முதல்கட்டமாக ஸ்டூடன்ட் பைலட் லைசன்ஸ் வகுப்பில் சேர முடியும். 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஏர்ஃபோர்ஸ் சென்ட்ரல் மெடிக்கல் எஸ்டாபிளிஷ்மென்ட் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏவியேஷன் மெடிக்கல் ஆகிய இடங்களில் வாய்மொழித் தேர்வு, முழு உடல் பரிசோதனை நடத்தப்படும். இந்த பரிசோதனையில் ஃபிட்னஸ் அளிக்கப்பட்ட பிறகு, ஸ்டூடன்ட் பைலட் கோர்ஸ் சான்றிதழ் பெற முடியும்.
2-வது கட்டமாக பிரைவேட் பைலட் லைசன்ஸ் கோர்ஸ் சேருபவர்களுக்கு, 17 வயது பூர்த்தி அடைந் திருக்க வேண்டும். மொத்தம் 60 மணி நேரம் விமானம் ஓட்ட வேண்டும். இரண்டு பேர் செல்லக்கூடிய விமானத்தில் பைலட் இன்ஸ்பெக்டருடன் 15 மணி நேரம் விமானத்தில் பறந்து, அவர் ஓட்டும் விதத்தை கண்காணிக்க வேண்டும். அதன்பின், 50 மணி நேரம் தனியாகவும், ஐந்து மணி நேரம் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என கிராஸ் கன்ட்ரி ஃபிளையிங் செய்ய வேண்டும். தியரி தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற வேண்டும்.
மூன்றாவது கட்டமாக கமர்ஷியல் பைலட் வகுப்பில் சேர்ந்தவுடன் 250 மணி நேரம் விமானத்தில் பறக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் 30 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களும் சேரலாம். 150 மணி நேரம் தனியாக விமானத்தில் பறக்க வேண்டும். டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னையில் மீனம்பாக்கம் என எல்லா பெரு நகரங்களிலும் ஃபிளையிங் ஸ்கூல் உள்ளன.
ஒரு மணி நேரத்துக்கு விமானத்தில் பறக்க ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவிட வேண்டும். இதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஹெலிகாப்டர் ஓட்டுநருக்கான படிப்பு இரண்டு கட்டங்களைக் கொண்டது. கமர்ஷியல் ஹெலிகாப்டர் லைசன்ஸ் பெற 60 மணி நேரம் பறக்க வேண்டும். பிரைவேட் ஹெலிகாப்டர் லைசன்ஸ் கோர்ஸ் முடிக்க 45 மணி நேரம் பறக்க வேண்டும்.
விமான சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படிப்பு முடித்தவர்களுக்கு எதிர் காலத்தில் சிறப்பான வரவேற்பு உள்ளது. வெளி நாடுகளிலும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT