Last Updated : 24 Jan, 2017 10:22 AM

 

Published : 24 Jan 2017 10:22 AM
Last Updated : 24 Jan 2017 10:22 AM

கேள்வி மூலை 16: இருட்டைக் கண்டு ஏன் பயப்படுகிறோம்?

ஒரு பகுதி இருட்டாக இருந்தால், சட்டென்று விளக்கு அணைந்துவிட்டால் ஏன் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பதறிப் போகிறோம்? இருட்டைக் கண்டு நாம் பயப்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன?

மூதாதைப் பண்பு

நம்மால் எதையும் பார்க்க முடியாமல் போவது, எதிரே இருப்பது கண்ணுக்குப் புலப்படாமல் போவதுதான், இதற்கு முதல் காரணம். நம்முடைய புலன் உணர்வில் பார்வையே மிகவும் வலுவானது. நம்முடைய மூதாதையர்களின் இயற்கை எதிரிகளான புலி-சிங்கம் போன்ற பெரும்பூனைகள் இரவில் பார்க்கும் திறனை மேம்பட்ட வகையில் பெற்றிருந்தன. ஆனால், நமது குரங்கின மூதாதைகளோ பெரும்பூனைகள் அளவுக்கு வலுவான இரவுப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை. அதனால் இருட்டு பயத்தை உருவாக்கியது.

மனித இனம் நாகரிகமடைந்து நகரங்களில் வாழத் தொடங்கிய பிறகு, எதிரிகளின் போர், தாக்குதலைத் தடுப்பதற்காக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியிருந்தது. இப்போதும்கூட இரவில் நடக்கும் திருட்டுகளுக்காக நாம் பயப்படவே செய்கிறோம். இருட்டைக் கண்டவுடன் நம் மனதில் ஒரு பதற்றத்தை உருவாக்குவதற்கான மரபுரீதியான காரணங்கள் இவை.

மனம் தரும் அச்சம்

இதுபோன்ற அனுபவப்பூர்வமான காரணங்களை விடவும், நமது மனமே மிகப் பெரிய அச்சத்தை உருவாக்குகிறது. குழந்தைகளும், சில நேரம் பெரியவர்களும்கூடத் தங்கள் படுக்கைக்கு அடியிலோ அல்லது இரவில் சரியாகப் புலப்படாத பகுதிகளிலோ பேய், பிசாசு இருப்பதாக நம்புகிறார்கள். ‘யாரோ இருப்பது போல, நினைத்துக்கொள்ளும் கற்பனையான பண்பு இது. தூக்கத்தில் திடீரென விழித்து, உடல் கட்டிப்போடப்பட்ட நிலை உருவாவதற்கும் இதேதான் காரணம்.

நமது மூளையின் வழக்கத்துக்கு மாறான பகுதிகள் தூண்டப்படுவதால் இதுபோன்ற கற்பனையான பயம் தோன்றுகிறது.

அச்சம்தான் காரணமா?

பொதுவாகவே அவமானப்படுவதையோ, குற்றஉணர்வுக்கு ஆளாவதையோ, கோபத்தையோ, பதற்றத்தையோ எதிர்கொள்ள எப்போதுமே நாம் அச்சப்படுகிறோம். இருட்டில் இது மிகவும் மோசமடைகிறது. ஏனென்றால் இருட்டில் நமது மூளைக்குக் காட்சி ரீதியான உள்ளீடு தரப்படுவதில்லை. அப்படித் தரப்படாத நிலையில் மூளைக்கு அதிக வேலையும் இருப்பதில்லை. காட்சி ரீதியிலான உள்ளீடு தொடர்ந்து இல்லாமல் போவதால், தேவையற்ற எண்ணங்கள் மட்டுப்படுத்தப்படாமல் போகின்றன. இவையெல்லாம்தான் கற்பனையான பயம் தோன்றுவதற்கு அடிப்படையாக இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x