Last Updated : 06 Nov, 2013 12:48 PM

 

Published : 06 Nov 2013 12:48 PM
Last Updated : 06 Nov 2013 12:48 PM

உடம்பை குளிர்ச்சியாக்கும் ஜில்ஜில் பிரேஸ்லெட் - அமெரிக்க மாணவர்கள் சாதனை

வாஷிங்டன்

அணிந்துகொண்டால் உடம்பையே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட பிரேஸ்லெட்டை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர். இதுபற்றி ஆய்வு மாணவரில் ஒருவரான சாம் ஷேம்ஸ் கூறியதாவது:

நாங்கள் உருவாக்கியுள்ள ரிஸ்ட்டிஃபை கருவி, வெப்ப மின்னோட்ட தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இயற்பியலில் பெல்டியர் விளைவு என்று ஒன்று உண்டு. வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது உலோகங்களின் ஒரு இணைப்புப் பகுதி வெப்பத்தை வெளியேற்றும், இன்னொரு பகுதி வெப்பத்தை உள்ளிழுக்கும் என்பதை பிரான்ஸ் விஞ்ஞானி பெல்டியர் கண்டறிந்தார். அந்த தத்துவம்தான் எங்கள் கண்டுபிடிப்புக்கு அடிப்படை. ரிஸ்ட்டிஃபை கருவி சற்று பெரிய வாட்ச் அளவில் இருக்கும். வாட்ச் போலவே மணிக்கட்டில் இதை அணிந்துகொள்ள வேண்டும். பெல்டியர் கூலர் எனப்படும் இரண்டு வெவ்வேறான வெப்பக் கடத்திகள் இதில் இருக்கின்றன. தோல் வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும்போது பெல்டியர் கூலருக்கு வேலை இல்லை. தோல் வெப்பநிலை அதிகரித்தால், பெல்டியர் கூலர் வேலை செய்யத் தொடங்கும். தோலில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, தோலுக்குக் குளிர்ச்சியை வழங்கும்.

உடம்பின் ஏதாவது ஒரு பகுதியைக் குளிரச் செய்தாலே, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஒருசில வினாடிகளில் அந்த குளிர்ச்சி பரவிவிடும்.

பனிப் பிரதேசங்களில் அதிக குளிரில் இருப்பவரின் உடல் வெப்பநிலையை அதிகரித்து, உடலுக்கு சூட்டைக் கொடுக்கவும் ரிஸ்டிஃபை கருவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய அளவு லித்தியம் பாலிமர் பேட்டரி உதவியுடன் இது செயல்படுகிறது என்றார் அந்த மாணவர்.

எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் மெட்டீரியல் சயின்ஸ் டிசைன் போட்டி கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறது ரிஸ்டிஃபை. போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ரிஸ்டிஃபை பற்றிய அடுத்தகட்ட ஆய்வுக்கான நிதியுதவியும் அந்த மாணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும்.

ரிஸ்டிஃபை கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று வணிக ரீதியாக அதை தயாரிக்கும் முயற்சியிலும் மாணவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x