Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM
விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் குவிக்கும் மாணவர்கள் அதே துறையில் எதிர்காலத்தில் பிரகாசிக்க பட்டப் படிப்புகள் உள்ளன. பி.பி.இ.டி. பிசிக்கல் எஜுகேஷன் பட்டப் படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு விளையாட்டில் ஆர்வமும் மருத்துவ ரீதியான உடல் தகுதியும் இருந்தால் போதும். எந்த பட்டப் படிப்பை முடித்தவர்களும் ஓராண்டு படிக்கக் கூடிய பி.பி.இ.டி. படிப்பில் சேரலாம். இப்படிப்புக்கு பொறுமை அவசியம். மற்றவர்களுக்கு விளையாட்டுகளில் திறம்பட பயிற்சி அளிக்கக் கூடிய பக்குவமும் இருக்க வேண்டும்.
நடுவர், பயிற்சியாளர், கிளப் மேனேஜர், ஸ்போர்ட்ஸ் ஜெர்னலிசம், ஸ்போர்ட்ஸ் அட்மினிஸ்டிரேஷன் என விளையாட்டுத் துறையிலும், கல்வி நிறுவனங்களிலும் பணி வாய்ப்பு நிறைந்துள்ளது. ஆரம்பத்தில் ரூ.15,000 வரை மாத சம்பளம் கிடைக்கும். அனுபவம் மற்றும் தனித் திறமை மூலம் அதிகம் சம்பாதிக்கலாம். தேசிய அளவில் பதக்கங்களை வெல்பவர்களுக்கு ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் வங்கிகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேற்கண்ட படிப்பு சென்னை ஒய்.எம்.சி.ஏ. காலேஜ் ஆஃப் பிசிக்கல் எஜுகேஷன், ஆதித்தனார் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக உடற்கல்விக்கான பல்கலைக்கழகம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிசிக்கல் எஜுகேஷன் அண்டு ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டியில் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் பி.பி.இ.டி. சேரலாம்.
பிளஸ் 2 முடித்தவர்கள் பி.எஸ்சி. ஸ்போர்ட் அண்ட் எக்சர்சைஸ் பிசியாலஜி சேரலாம். அறிவியல் பட்டப் படிப்பு படித்தவர்கள், எம்.எஸ்சி. ஸ்போர்ட்ஸ் பயோ மெக்கானிக்ஸ் படிக்கலாம். எம்.எஸ்சி. இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் ஓராண்டு பட்ட மேற்படிப்பும் உள்ளது. தவிர, எம்.பி.ஏ. ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் 2 ஆண்டு பட்ட மேற்படிப்பும் படிக்கலாம். இப்படி உடற்கல்வியில் எம்.பில்., பி.எச்டி. வரை படிக்க முடியும்.
பொறியியல் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க கடந்த ஆண்டு புதிய பட்ட மேற்படிப்பாக எம்.டெக். இன் ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக சென்னை விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே இது இருக்கிறது.
உடற்கல்வி சம்பந்தமான படிப்பில் எஜுகேஷன் அண்டு ஸ்போர்ட்ஸ் பிசியாலஜி, மேனேஜ்மென்ட் ஆஃப் பிசிக்கல் எஜுகேஷன் அண்டு ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் எய்ட், ஹெல்த் எஜுகேஷன் பிரின்சிபல் ஆஃப் கோச்சிங் உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்திய அரசு சமீப காலமாகத்தான் விளையாட்டுத் துறைக்கு படிப்படியாக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எதிர்காலத்தில் உடற்கல்வி சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என நம்பலாம். எனவே, விளையாட்டு துறையில் சாதிக்க விரும்புபவர்கள் உடற்கல்வி தொடர்பான படிப்புகளை படித்து திறமையை வெளிக்காட்ட முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT