Published : 07 Jan 2014 01:33 PM
Last Updated : 07 Jan 2014 01:33 PM

பிளஸ் - 2 முடித்தவுடன் மாஸ்டர் டிகிரி படிக்கலாம்

பிளஸ் 2 முடித்தவுடன் பட்டப்படிப்பு மட்டுமல்ல பட்டமேற்படிப்பு படிக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்டகிரேட் எம்.எஸ்சி. புரோகிராம் மற்றும் இன்டகிரேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் ஆகிய பட்டமேற்படிப்புகள் உள்ளன. இப்படிப்பில் சேர கடும் போட்டி நிலவுவதால், இதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன. படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு அளிக்க அரசுத் துறையும், தனியார் துறையும் தயாராக இருக்கின்றன. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, நுழைவுத் தேர்வுக்கு தயாராவதன் மூலம் வெற்றி நிச்சயம். ஆங்கில வழியில் இதற்கான தேர்வை நடத்துகின்றனர்.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களை எடுத்தவர்கள், இன்டகிரேட் எம்.எஸ்சி, புரோகிராம் ஐந்தாண்டு பட்ட மேற்படிப்பை படிக்கலாம். நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் (NEST) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்திய அரசின், டிபார்ட்மென்ட் ஆஃப் அடாமிக் எனர்ஜி மேற்பார்வையில், இந்த நுழைவுத் தேர்வை புவனேஸ்வரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் எஜூகேஷன் அண்டு ரிசர்ச், மும்பையில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மும்பை சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் பேசிக் இன் சைன்ஸ், மேற்கு வங்காளத்தில் உள்ள இன்டகிரேட் சைன்ஸ் எஜூகேஷன் அண்டு ரிசர்ச் சென்டர் ஆகிய மூன்று அரசு கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.

இந்த மூன்று கல்வி நிறுவனங்களில் மொத்தம் 156 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். வரும் மே 31ம் தேதி நெஸ்ட் நுழைவுத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மதுரை, சென்னை ஆகிய இரு தேர்வு மையங்கள் உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் (www.nestonline.in) வரும் பிப். 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளை கொண்டது. கட்டாயமான முதல் பிரிவு பொது அறிவு திறன் தேர்வுக்கு மட்டும் நெகடிவ் மார்க் கிடையாது. இரண்டாவது பிரிவில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பிரிவில், ஏதாவது மூன்று பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற்று கல்லூரியில் சேரும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக 5000 ரூபாயும், ஆண்டுக்கு ஒரு முறை மே மாத சம்மர் புராஜெக்ட்டிற்கு 20,000 ரூபாய் அரசு அளிக்கிறது. அறிவியல் துறை சார்ந்த பட்டமேற்படிப்பு என்பதால், சகலவித அரசு, தனியார் துறைகளிலும் வேலை அளிக்க காத்திருக்கின்றனர்.

பிளஸ் 2 முடித்ததும், மேனேஜ்மென்ட் பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்காக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - இண்டூர் மூலம் இன்டகிரேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு நடத்துகிறது. இதற்கு மே மாதம் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் ஏப்., இரண்டாவது வாரத்திற்குள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு மொத்தம் இரண்டு மணி நேரம், 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அப்ஜெக்டிவ் வகை கேள்வியை கொண்டுள்ளது. இண்டூர், பெங்களூரு, மும்பை, டெல்லி, கோல்கத்தா, ஐதராபாத் ஆகிய பெரு நகரங்களில் மட்டுமே இதற்கான நுழைவுத் தேர்வு நடக்கிறது.

இந்தாண்டு சென்னையில் இதற்கான நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். பொறியியல் பயிலும் மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் இணைந்து படிக்க ஆசைப்படுவதைப் போன்று, எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்களின் கனவாக, ஐ.ஐ.எம். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பயில ஆசைப்படுகின்றனர். மொத்தம் 120 இடங்களுக்கு கடும் போட்டி உள்ளதால், தேர்வுக்கு நன்றாக தயாராவது அவசியம். இவ்விரு நுழைவுத் தேர்விலும் வெற்றி பெறுபவர்கள், வாழ்க்கையில் மேன்மை அடைவது நிச்சயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x