Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

வாழ்க்கையை படிக்கலாம் வாருங்கள்!

சமூக வாழ்வியல் முறை, அரசியல், சமூகம் மற்றும் மனித வள மேம்பாட்டில் அக்கறை கொண்டவர்களுக்கான படிப்பு பி.ஏ. சமூகவியல். பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்ற நோக்கத்தில் மட்டும் இதை படிக்கக் கூடாது. ஒருவரை சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக பக்குவமடையச் செய்யும் படிப்பு இது. சுருக்கமாக, வாழ்க்கையை கற்றுத்தரும் படிப்பு என்று சொல்லலாம்.

பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவு எடுத்தவர்களும் இதை படிக்கலாம். சென்னையில் லயோலா கல்லூரி, கிறிஸ்டியன் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ், குயின் மேரீஸ், கோவை பி.எஸ்.ஜி. உள்ளிட்ட தமிழகத்தின் பிரபலமான கல்லூரிகளில் இப்படிப்புகள் உள்ளன. இந்திய அளவில் புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக்கழகம், டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் எம்.ஏ., சோசியாலஜி பட்டமேற்படிப்புகள் உள்ளன.

யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுபவர்களுக்கு இப் படிப்பு பக்கபலமாக உள்ளது. ஏனெனில் அத்தேர்வுகளில் இடம் பெறும் சமூகம், அரசியல், இந்திய குடும்பங்கள் தொடர்பான நடைமுறைகள், சட்டம், பொது அறிவு உள்ளிட்ட பெரும்பான்மை விஷயங்கள் இந்த பட்டப் படிப்பிலேயே கற்பிக்கப்பட்டு விடுகின்றன.

இதனால், அரசு போட்டித் தேர்வுகள் மூலம் சிறப்பான எதிர்காலத்தை பெற நினைப்பவர்கள் பெரும்பாலும் இப் படிப்பையே தேர்வு செய்கின்றனர். இப்படிப்பில் ரூரல் சோசியல் இண்டியா, சோசியாலஜி ஆஃப் ஃபேமிலி, சோசியாலஜி ஆஃப் ஹெல்த், சோசியாலஜி ஆஃப் லீகல் சிஸ்டம், டெக்னிக்கல் இன் சோசியல் ரிசர்ச் மற்றும் பொலிடிக்கல் சோசியாலஜி உள்ளிட்ட படிப்புகளை கற்பிக்கின்றனர். இதனுடன் முதுகலை மற்றும் சட்டம் படிப்பவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இப் படிப்பை படிப்பவர்களுக்கு சமூக நலத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். தவிர மனித உரிமைகள், சமூக சேவைகள், அதுதொடர்பான ஆய்வுகள், புள்ளிவிவரங்கள் சேகரித்தல் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு உண்டு. இதில் ஆராய்ச்சி வரையிலான படிப்புகளை முடித்தவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு உள்ளது. குறிப்பாக, சர்வே துறைகளில் இவர்களுக்கான தேவை அதிகம். இவர்கள் வெளிநாட்டு தூதரகங்களிலும், வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கான நேர்முக உதவியாளராகவும் பணியில் சேரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x