Last Updated : 11 Sep, 2018 12:39 PM

 

Published : 11 Sep 2018 12:39 PM
Last Updated : 11 Sep 2018 12:39 PM

இந்தோனேசியாவில் ஜொலித்த ‘முதல்’வர்கள்!

அறுபத்தி ஏழு ஆண்டு கால வரலாற்றில், அண்மையில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்தது. இந்தியா அதிகப் பதக்கங்களை வென்ற ஆசிய விளையாட்டுப் போட்டி இதுதான். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2010-ல் சீனாவின் குவாங்ஷு நகரில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் 65 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்க வேட்டையாக இருந்தது. ஜகார்தா, பெலம்பாங்கில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் 69 பதக்கங்களை வென்றதன் மூலம் முந்தைய சாதனையை முறியடித்து இருக்கிறது இந்தியா. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதித்த சில முத்தான சாதனைகள்:

# 1951-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் இந்தியா 15 தங்கப் பதக்கங்களை வென்றதை இந்த முறை சமன் செய்திருக்கிறது இந்தியா.

# தடகளத்தில் இந்த முறை இந்தியா 19 பதக்கங்களைப் வேட்டையாடியது.  50 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற தடகளத்தில் 7 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்க தடகளம் முக்கிய பங்கு வகித்தது. பி.டி.உஷாவுக்கு அடுத்தப்படியாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக கவனம் பெற்ற வீராங்கனை ஹிமா தாஸ். ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் ஜொலித்தார் ஹிமா தாஸ்.

asia 3jpgஅர்பிந்தர் சிங்

# பந்தை கையில் தொடாமல் காலால் மேலே உதைத்தபடியே தலையில் முட்டி விளையாடப்படும் ‘செபாக் டக்ரா’ என்ற விளையாட்டு 1990-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடப்படுகிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பிரபலமான இந்தப் போட்டியில் முதன்முறையாக இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

# டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய அணி முதன்முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றது.

# ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ரஹி சர்னோபத் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் இவர்தான்.

# ஆசியப் போட்டி மல்யுத்தப் பிரிவில் மகளிர் யாரும் தங்கப் பதக்கம் வெல்லவில்லை என்ற குறை நீண்ட காலமாக இருந்தது. அதை வினிஷ் போகத் தீர்த்துவைத்தார். 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் அந்தக் குறை நீங்கியது.

# ஆசியப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிவரை செல்ல முடியாமல் பல ஆண்டுகளாகத் தவித்தது. அந்தக் குறையும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீங்கியது. பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிவரை பி.வி.சிந்து முன்னேறினார். இறுதிப் போட்டியில் அவர் தோல்வியடைந்தாலும், வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.

# ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இந்தப் போட்டியில் அவர் புதிய மைல்கல்லை தொட்டார்.   அதிக தூரம் அவர் ஈட்டியை எறிந்தது புதிய தேசிய சாதனையாகப் பதிவானது. 2013-ம் ஆண்டு முதல் ஈட்டி எறிதல் போட்டியில் விளையாடி வரும் நீரஜ், இந்த முறை 88.06 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தேசிய சாதனை படைத்தார்.

# இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ‘பிரிட்ஜ்’ எனப்படும் சீட்டாட்ட விளையாட்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் இந்திய இணையான பிரனாப் பரதன் மற்றும் சிப்நாத் சர்க்கார்  தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினர்.

# குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷண் யாதவ் புதிய சாதனைக்குச் சொந்தக்காரரானார். 2010, 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் ஏற்கெனவே பதக்கம் வென்ற இவர், இந்த முறை வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தொடர்ந்து மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். இந்த முறை கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக அரையிறுதிப் போட்டியில் விளையாட முடியாமல், வெண்கலப் பதக்கத்தோடு அவர் திரும்ப வேண்டியிருந்தது.

# தடகளம் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இப்போதுதான் இந்தியா பதக்கம் வென்றது. ஜின்சன் ஜான்சன் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இது சாத்தியமானது. இந்தப் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெறுவது 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தேறியிருக்கிறது. கடைசியாக மன்ஜித் சிங் தங்கம் வென்றதே சாதனையாக இருந்தது.

# மும்முறை தாண்டுதல் எனப்படும் ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் 48 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இந்தச் சாதனையை அர்பிந்தர் சிங் படைத்தார்.

# குதிரையேற்றப் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ஃபெளவத் மிர்ஸா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 1982-ம் ஆண்டுக்குப் பின்னர் குதிரையேற்றத்தில் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை.

# ஹெப்டத்லான் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மன் 6,029 புள்ளிகளை ஈட்டினார். ஆசிய அளவில் 6 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிய ஐந்தாவது பெண் என்ற சிறப்பையும் ஸ்வப்னா சேர்த்தே பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x