Published : 29 Sep 2014 12:09 PM
Last Updated : 29 Sep 2014 12:09 PM
OMNI
ஆம்னி என்றால் எல்லாம் என்று அர்த்தம். இறைவனை OMNIPRESENT என்பதுண்டு. அதாவது எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவன். OMNIPOTENT என்றும் சொல்வதுண்டு. சர்வசக்திகளும் படைத்தவன் என்ற அர்த்தத்தில். OMNIVORE என்றால் எல்லாவற்றையும் சாப்பிடக்கூடிய மிருகம் என்று பொருள். அதாவது பிற விலங்குகள், தாவரங்கள் என்று எதையும் சாப்பிடக் கூடியது.
அதெல்லாம் இருக்கட்டும் OMNI BUS என்கிறோமே அதற்கு என்ன அர்த்தம்? அந்தக் காலத்தில் குதிரைகளால் இழுக்கப்பட்ட, மூடப்பட்ட வண்டியைத்தான் OMNIBUS என்பார்கள். லத்தீன் மொழியில் OMNIBUS என்றால் அனைவருக்குமானது என்று பொருள். OMNIBUS எந்த இடத்திற்கும் செல்லும் (அதாவது இந்த தடத்தில் மட்டுமே இது செல்லும் என்பது கிடையாது).
Potable water
ஓர் அடுக்கக விற்பனை விளம்பரத்தில் வசதிகள் என்ற பட்டியலின் கீழ் Potable water என்று குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டும் ஒரு வாசகர் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘’வெளியிடத்திலிருந்து இங்கே தண்ணீர் கொண்டு வருகிறார்கள் என்றால் அது எப்படி ஒரு சாதகமான விஷயம்?’’.
Potable என்ற வார்த்தையோடு portable என்ற வார்த்தையை இவர் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்று படுகிறது. Portable என்றால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய என்று பொருள். Potable என்றால் குடிக்கத்தக்க என்று அர்த்தம்.
Potable water என்றால் அந்த நிலத்தில் கிடைக்கும் தண்ணீர் குடிக்கத்தக்கது - அதாவது உப்பாக இருக்காது என்று பொருள். இது சாதக மானதுதானே?
டெலிவரி
‘’My wife delivered a baby yesterday’’ என்று ஒருவர் சொன்னால் என்ன செய்வீர்கள்? ‘’இதென்ன கேள்வி? கை கொடுப்பேன். வாழ்த்து சொல்வேன்.. மறக்காமல் “எப்ப ட்ரீட் என்பேன்’’ என்கிறீர்களா? இதையெல்லாம் செய்யுங்கள். ஆனால் பிறகு நேரம் கிடைக்கும்போது அவர் கூறிய வாக்கியத்திலுள்ள தவறையும் எடுத்துக் காட்டுங்கள்.
‘’My wife delivered a baby yesterday’’ என்ற வாக்கியத்தில் என்ன தவறு என்கிறீர்களா? இப்படி யோசியுங்கள். உங்களுக்கு ஒரு தபாலில் ஒரு பார்சல் வந்தால் அதை ‘’The postman delivered a parcel’’ என்பீர்கள் இல்லையா? அதாவது தபால்காரரின் வேலை யாரோ அனுப்பிய பார்சலை உங்களிடம் சேர்ப்பிப்பது மட்டும்தான். ஆனால் உங்கள் நண்பரின் மனைவி கஷ்டப்பட்டுத் தானாகவே ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறாள். அவருக்குப் பிரசவம் பார்த்த டாக்டரைப் பற்றி வேண்டுமானால் ‘’The doctor delivered the baby to me’’ எனலாம். எனவே ‘’My wife gave birth to a child yesterday’’ என்று உங்கள் நண்பர் கூறுவதுதான் சரியானது.
புயலென…
Stormed என்பதன் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். Storm என்பது புயல். இது பெயர் சொல். ஆனால் Stormed என்பது கடந்த கால வினைச்சொல் - Verb in past tense.
Stormed என்றால் கோபத்துடனும், வேகமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது என்று பொருள். எடுத்துக் காட்டு - He burst into tears and stormed off. புயலெனக் கிளம்பினான், வில்லினின்று விடுபட்ட அம்பு
போலக் கிளம்பினான் என்றெல்லாம் இதற்குப் பொருள் கொள்ளலாமா என்று கேட்கும் அனைத்து ராசி நண்பர்களே, கொள்ளலாம். கொள்ளலாம் என நான் கூறுகிறேன்.
பொங்கி எழும் வாசகர்கள்
நம் வாசக நண்பர்கள் “பொறுப்பதே வேண்டாம். பொங்கி எழு” பிரிவினர்.
“பாரம்பரியம் மிக்க இந்து இதழில் நீங்கள் இப்படி ஒரு தவறு செய்யலாமா?” என்று ஒருவர் கடிதம் போட்டுள்ளார்.
இருவாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்த கார்ட்டூனில் “Go to home” என்ற வாக்கியம் இடம் பெற்றிருந்தது. “Go home” என்பதுதான் சரி என்று சுட்டியும், குட்டியும் வந்தன கடிதங்கள்.
“Go to home” என்று நான் எழுதுவதற்கு முன்பாக எனக்குள் நானே இரண்டு பகுதிகளாகப் பிரிந்து (அந்தக் காலத் திரைப்படக் காட்சிகளில் காணப்படுவது போல) விவாதித்தேன். அந்த விவாதம் இப்படி இருந்தது.
பகுதி 1 – Go abroad என்றுதானே எழுதுகிறோம்? அப்படியானால் Go home என்றுதான் எழுத வேண்டும்.
பகுதி 2 – Go to hospital என்று எழுதுவாயா? இல்லை Go hospital என்று எழுதுவாயா? (இந்த இடத்தில் பகுதி-2 விடமிருந்து ஏளனச் சிரிப்பு. காரணம் Go hospital என்றதும் மருத்துவமனையே நகர்ந்து செல்வது போன்ற காட்சி அதற்குள் விரிகிறது).
பகுதி 1 – இதென்ன உளறல்? Go to downstairs என்பாயா? Go downstairs தானே? எனவே Go home தான்.
பகுதி 2 – அதெல்லாம் இருக்கட்டும். Go to house என்று எழுதும்போது Go home என்று ஏன் எழுத வேண்டும்?
பகுதி 1 – பிரபல இலக்கண நூல்களை ரெஃபர் செய்தும் புரிய வில்லையா? Go home என்பதில் home என்பது adverb ஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
(இதைத் தொடர்ந்து ‘’Home என்பது இந்த இடத்தில் adverb என்றால் house என்பது ஏன் adverb இல்லை? தவிர இந்த விளக்கம் தெளிவைத் தரவில்லை’’ என்றெல்லாம் விவாதித்த பகுதி – 2, ‘’Go to Home’’ என்றே எழுத வைத்து விட்டது.)
வாசகர்களின் கடிதங்களுக்குப் பின் -
பகுதிகள் 1 & 2 இரண்டும் சேர்ந்து சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது இதுதான். லாஜிக் எப்படி இருந்தாலும், சமீபத்தில் சில ஆங்கில எழுத்தாளர்கள் வேறுமாதிரி எழுதினாலும், தொன்று தொட்டுப் பயன்பாட்டில் இருப்பது Go Home தான். Go Home தான்.
என்ன … திருப்தி தானே- ?
(தொடர்புக்கு : aruncharanya@gmail.com)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT