Last Updated : 16 Sep, 2018 11:27 AM

 

Published : 16 Sep 2018 11:27 AM
Last Updated : 16 Sep 2018 11:27 AM

வண்ணங்கள் ஏழு 22: சட்ட அங்கீகாரம் முன்னே சமூக அங்கீகாரம் பின்னே!

வயதுவந்த தனிப்பட்ட இருவரின் பாலியல் சுதந்திரத்துக்கு, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377  தடையாக இருக்காது என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்திருக்கிறது.

‘தன்பால் ஈர்ப்பு மனிதர்களிடத்தில் மட்டுமல்ல; ஏறக்குறைய 1,500 உயிரினங்களிடம் காணப்படும் இயல்பான உணர்ச்சிதான் என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்’ என்பதை இந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார் நீதிபதி சந்திர சூட்.

காலம்காலமாகக் குற்றவுணர்வால் தவித்துக்கொண்டிருந்த மாற்றுப் பாலினத்தவர், பால் புதுமையர் போன்றோர் இந்தத் தீர்ப்பை வரவேற்று, கொண்டாடிவருகின்றனர். அதேநேரம் இந்தத் தீர்ப்பின் மூலம் பாலியல் சுதந்திரம் கட்டவிழ்த்து விடப்படும் என்றும் அதனால் நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அங்கீகாரத்துக்கான அடிப்படை

 ‘புத்துயிர் ஊட்டும் ஆக்ஸிஜனை இந்தத் தீர்ப்பின் மூலம் இந்தியா பெற்றிருக்கிறது’ என்று பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தெரிவித்திருக்கிறார். கட்சித் தலைவர்கள் பலரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்கூட இந்தத் தீர்ப்பை வரவேற்றிருப்பதுடன், தன்பால் உறவாளர்களுக்கான திருமணத்தைத் தங்களால் ஏற்க முடியாது என்று சொல்லியிருக்கின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் ஃபீடோபைல் பிரிவினர் அதிகரிக்கக் கூடும் என்று ஒரு கட்சியின் தலைவர் சொல்லியிருக்கிறார்.  வாய் வழி, பின்பக்கப் புணர்ச்சிகளால் ஏற்படும் நோய்களைப் பற்றிக் குறிப்பிட்டு வாசகர் ஒருவர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

“தன்பால் ஈர்ப்பில் திருப்தி அடையாத ஒரு சிலர் தங்களின் இணையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இதை Homonormativity என்பார்கள். இவர்கள் வக்கிரத்தோடு தங்களின் பார்ட்னர்களை அணுகுவார்கள். அவர்களை பிளாக்மெயில் செய்யவும் தயங்க மாட்டார்கள். இவர்களைப் போன்றவர்கள் இந்தத் தீர்ப்பால் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது” என்கிறார் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர்.

சமூகத்தில் மாற்றுப் பாலினத்தவர் எவ்வளவு குறைந்த சதவீதத்தில் இருந்தாலும் அவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்த ஒரு சட்டத்திலிருந்து கிடைத்திருக்கும் இந்த விடுதலை, அவர்களுக்கான அடுத்தடுத்த உரிமைகளுக்கான அடிப்படை அங்கீகாரமாகவே அமையும் எனப்  பொதுச் சமூகத்தினர் கருதுகின்றனர்.

இருந்தாலும், இந்தத் தீர்ப்பால் குடும்ப அமைப்பு சிதைந்துவிடுமோ, உடல் நலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுச் சமூகத்தினருக்கு இருக்கவே செய்கிறது. இது குறித்து மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மருத்துவர், வழக்கறிஞர் ஆகியோர் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

adhilakshmijpg

ஆதிலட்சுமி லோகமூர்த்தி, வழக்கறிஞர், சமூக ஆர்வலர்

இந்திய தண்டனைச் சட்டத்தின் ஒரு பிரிவான 377 உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதை ஆரோக்கியமான நகர்வாகத்தான் பார்க்கிறேன்.

எத்தனையோ சமூகச் சீர்த்திருத்தவாதிகள் இந்தப் பூமியில் பிறந் திருந்தாலும் இன்னமும் ‘கன்சர்வேடிவ்’வான பழமைவாத சமூகமாகத்தான் இது இருக்கிறது. நம் அரசியலமைப்பு ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிய சுதந்திரத்தை உறுதி செய்கிறது. திருநங்கை, திருநம்பிகளை ஏற்றுக்கொள்ளும் சமூகம்கூட, தன்பால் ஈர்ப்புள்ளவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சட்டம் ஏற்றுக்கொள்ளும்போது, குடும்பத்திலும் தன்பால் ஈர்ப்புள்ள ஒரு நபரைத் தனிமைப்படுத்தாமல், அவர்களை ஏற்றுக்கொள்வது இயல்பாக நடக்கும்.

குடும்ப அமைப்பு இந்தச் சட்டத்தால் பலப்படவே செய்யும். தன்பால் ஈர்ப்புள்ள ஒருவரைக் குற்றவாளியாகவே இதுவரை பார்த்துவந்த இந்தச் சட்டத்தை நீக்கியிருப்பதன் வழியாக, ஒரு குடும்பத்தில் பிறந்த தன்பால் ஈர்ப்புள்ள ஒரு குழந்தை தனிமைப்படுத்தப்படாமல் காப்பாற்றப்படுகிறது. தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் தலையிடும் செயலைத் தடுப்பதுதான் இந்தத் தீர்ப்பின் முக்கிய நோக்கம்.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது. தன்பால் ஈர்ப்புள்ளவர்களும் அதில் அடங்குவார்கள். சில விஷயங்களை ஆரம்பத்தில் எதிர்ப்பார்கள். புரிதல் ஏற்பட ஏற்பட இந்த எதிர்ப்பு மறையும். சமூகத்தில் மாற்றம் நிகழும்போது எல்லாரும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. அதைத்தான் இந்தத் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இதனால் குடும்ப அமைப்பு நிச்சயம் குலையாது.

sashajpgright

சாஷா, திருநங்கை செயற்பாட்டாளர்.

ஜனநாயக நாட்டில் பாலியல் சிறுபான்மையினரின் உரிமையை நிலைநிறுத்தும் தீர்ப்பு இது. எல்லோருக்கும் இருக்கும் உரிமை எங்களுக்கும் வேண்டும். இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இவ்வளவு போராட்டத்துக்குப் பின் வந்திருக்கும் தீர்ப்பு இது. தன்பால் ஈர்ப்பு எங்கிருந்தோ வந்ததல்ல. இங்கேயே இருப்பதுதான்.

வயதுவந்த இருவர் பரஸ்பரச்  சம்மத்துடன் வைத்துக்கொள்ளும் உறவுக்குத் தடையில்லை என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். தன்பால் ஈர்ப்பாளர்களின் மனப் போராட்டம், உணர்வு சார்ந்து சிந்திப்பவர்களால் இந்தத் தீர்ப்பில் குற்றம்காண முடியாது. இந்தத் தீர்ப்பால் குடும்ப அமைப்பு சிதையும் என்றும் சொல்ல முடியாது.

நாங்கள் விரும்பும் ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையை இந்தத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ‘உங்களால் சந்ததியை உருவாக்க முடியாதே’ என்கிறார்கள். பெற்றால்தான் பிள்ளையா? ஆதரவற்று இருக்கும் குழந்தைகளுக்கு நாங்கள் ஆதரவு தந்துவிட்டுப் போகிறோம்.

sivakumarjpg

சிவக்குமார் ஆறுமுகம், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்.

தங்கள் இணையரோடு மட்டும் உறவு வைத்துக் கொள்பவர்களுக்குப் பால்வினை, எச்ஐவி போன்றவை வருவதற்கு வாய்ப்பு குறைவு. பலதரப்பட்டவர்களிடமும் உறவு வைத்துக் கொள்பவர்கள், வாய்வழி, பின்பக்க உறவுகொள்பவர்கள் ஆகியோருக்கு ஹெச்.பி.வி. தொற்றால் நிறையப் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இது தன்பால் உறவாளருக்கு மட்டுமல்ல எதிர் பால் உறவில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் பொதுவானது.

தன்பால் ஈர்ப்புள்ளவர்களின் பாலியல் விருப்பத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. இதன் மூலம் தன்பால் ஈர்ப்பாளர்களிடையே ஆரோக்கியமான உறவு அரும்பும். மருத்துவ ரீதியாகச் சொல்வதானால் இனப்பெருக்க உறுப்புகளுடன் கொள்ளப்படும் உறவே பாதுகாப்பானது. பாதுகாப்பில்லாத உறவால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

விக்ராந்த், சென்னை தோஸ்த்.

இந்தத் தீர்ப்பை எந்தவிதத்திலும் குற்றம்சொல்ல முடியாது. சட்டப் பாதுகாப்பு இருப்பதன் மூலம் பிளாக் மெயில், ஓபன் ரிலேஷன்ஷிப் போன்ற பாதிப்புகள் குறையக்கூடும்.

vikranthjpgright

சட்டத் திருத்தம் வந்திருப்பதன் மூலம் நம் சமூகம் முன்னேற்ற சமூகமாக மேம்பட்டிருப் பதாகவே உணர்கிறேன். எல்ஜிபிடி சமூகத்தினர் 10 சவீதத்தினர் இருக்கலாம் என்கின்றனர். ஒரேயொரு சதவீதமாக இருந்தாலும் சரி, அவர்களையும் உள்ளடக்கியதுதானே சமூகம்? அவர்களைக் குற்றவுணர்விலிருந்து மீளவைப்பதுதானே அறிவுள்ள சமூகத்தின் பணியாக இருக்க முடியும்?

ஒரு நாட்டின் நாகரிக வளர்ச்சியும் முன்னேற்றமும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திக் கட்டமைக்கப்படுவதில்லை. சிறுபான்மை மக்களின் உணர்வையும் மதிப்பதில்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட அறிவார்ந்த சமூகத்தால்தான் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x