Published : 09 Sep 2018 11:52 AM
Last Updated : 09 Sep 2018 11:52 AM
“புதுவீட்டுக்குப் பால் காய்ச்சுறோம் அவசியம் வந்துடுங்க…’’
- தம்பதி சமேதராக வீட்டுக்கு வந்து அழைக்கும் போது போகாமல் இருக்க முடியுமா? போனோம்.
வட சென்னையின் உள்ளடங்கிய பகுதி அது. வீட்டின் கீழ்த் தளத்தில் பெரியவர்கள் வசிக்கிறார்கள். மேல்தளத்தில்தான் தம்பதி பால்காய்ச்சி குடியேறுகிறார்கள். அந்தத் தம்பதிக்குள் அப்படியொரு கருத்து ஒற்றுமை. மனமொத்த தம்பதியாக மட்டுமல்லாமல் பணியொத்த தம்பதியாகவும் இருக்கின்றனர். இருவருக்குமே ஆசிரியர் பணி. சசிகுமார் – ஜெகன் இருவரும்தான் அந்தத் தம்பதி!
தன்பால் ஈர்ப்புள்ள இருவரையும் சேர்த்து வைத்தது அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பரஸ்பர நட்பும் புரிதலும்தாம் என்கின்றனர் அவர்களை அறிந்த அவர்களின் நண்பர்கள்.
வாட்ஸ் அப் குரூப்பில் மலர்ந்த நட்பும் ஒரே மாதிரியான எண்ணம், சிந்தனை, பணி போன்றவற்றில் இருந்த ஒற்றுமையும் அடுத்த கட்டத்துக்கு அவர்களின் அன்பை நகர்த்தியிருக்கின்றன.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்தனர். “இப்ப நாடு இருக்கும் சூழலில், ‘உங்க பொண்ணைக் காதலிக்கிறேன்… திருமணம் செய்துக்க விரும்புறேன்’னு பெண்ணோட தந்தையிடம் கேட்கவே தைரியம் வேண்டும். ஆனா சசிகுமார், ‘உங்க மகனை நான் விரும்புறேன்’னு என் வீட்டில் தைரியமா வந்து பேசினார்.
என் வீட்ல இருப்பவங்களும் அவரை அவமானப்படுத்தும் விதமாகவோ மரியாதை குறைவாகவோ நடந்துக்கலை. ’யோசிச்சு சொல்றேன்’னு என் அப்பா தன்மையா சொன்னார். ரெண்டே நாளில் அவரோட சம்மதத்தையும் தெரிவிச்சார்” என்று நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார் ஜெகன். கடந்த 2015 மார்ச் 8 அன்று இவர்களின் திருமணம் நடந்தது. ஆனால், இருவரின் வாழ்விலும் இதெல்லாம் அத்தனை சுலபமாக நடந்து விடவில்லை.
சசியாகிய நான்…
சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். 6-ம் வகுப்பு படித்தபோதே எனக்குப் பெண்களின் மீது ஈர்ப்பு இல்லை. ஆண்கள் மீதுதான் ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தேன். கல்லூரிக்குச் சென்றபோதுதான் இது வித்தியாசமானது அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். இணையத்தின் மூலமாகத் தேடியபோதுதான் என்னைப் போல் ஆயிரமாயிரம் பேர் தமிழ்நாட்டில், இந்தியாவில் ஏன் உலகம் முழுவதும் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.
பெண்ணின் மீதான ஈர்ப்போடு இருக்கும் ஆண்களின் உலகமும் தன்பாலினத்தை விரும்பும் ஆண்களின் உலகமும் வெவ்வேறாக இருந்தன. படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தவுடன் எல்லாப் பெற்றோரையும் போலவே என் பெற்றோரும் எனக்கேற்ற பெண்ணைச் சொந்தத்திலும் வெளியிலும் தேட ஆரம்பித்தனர். இந்தத் தேடல் என் அக்கா வுக்குத் திருமணம் நடந்தவுடன் அதிகமானது.
ஜாதகம் சரியில்லை, உயரம் குறைவு என என்னென்னவோ காரணங்களைச் சொல்லித் தவிர்த்துக்கொண்டே வந்தேன். “தங்கைக்குத் திருமணம் செய்தபிறகு எனக்குப் பார்க்கலாம்..” என்று அவர்களின் ஆர்வத்துக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். தங்கையின் திருமணமும் முடிந்தது. மீண்டும் தீவிரத் திருமண வேட்டையில் இறங்கினர். அதற்குமேல் எந்தக் காரணமும் சொல்ல முடியாத நிலையில், என் ஈர்ப்பு பெண்ணின் மீது அல்ல, ஆணின் மீதுதான் என்பதை அவர்களுக்குச் சொன்னேன்.
நிறைய அழுகை, சண்டை, வெறுப்புகளுக்கு இடையில் இதுவும் இயல்பானதுதான் என்பதை எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்ற குழப்பம் எனக்கு அதிகரித்தது.
கைகொடுத்த தொடர்
அப்போது ஒரு இந்தித் தொலைக்காட்சி சேனலில் ஆமிர்கானின் ‘சத்யமேவ ஜெயதே’ தொடர் ஒளிபரப்பானது. அதில் தன்பால் ஈர்ப்புள்ளவர் பற்றிய பேட்டி ஒருமுறை ஒளிபரப்பானது. அந்தப் பேட்டியை மிகவும் சிரமப்பட்டு நண்பர்களின் உதவியோடு டிவிடியில் பதிவுசெய்து வீட்டில் என் அப்பா, அம்மாவுக்குப் போட்டுக் காட்டினேன். அந்தப் பேட்டியைப் பார்த்து முடித்ததும்தான், தன்பால் ஈர்ப்பு என்பது வேறு, திருநராக மாறுவது என்பது வேறு என்ற புரிதல் அவர்களிடம் ஏற்பட்டது. அவர்களுடைய பெரிய பயமே, நான் புடவை கட்டிக்கொண்டு வந்து நிற்பேனோ என்பதுதான். பிறகு அவர்களுக்குப் பொறுமையாக என் நிலையை விளக்கினேன்.
நீங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக என் நிலையை மறைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை தெரிந்தே சீரழிக்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருப்பதை அவர்களுக்கு அழுத்தமாகக் கூறினேன். என்னுடைய இந்த முடிவு அவர்களின் மனபாரத்தை நீக்கியது. ஆமாம்பா... பெண் பாவம் நமக்கு வேண்டாம். நீ சொல்றதை நாங்க ஏத்துக்கறோம் என்றனர். அவர்களிடம் ஜெகனைப் பற்றிச் சொன்னேன். எங்களின் திருமணத்தை நீங்கள்தான் நடத்திவைக்க வேண்டும் என்றும் சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டு திருமணத்தை நடத்திவைத்தனர். அதன் பின் அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பினர்.
‘நம்மோட பரம்பரை உன்னோட முடிஞ்சுடணுமா?’
இந்தக் கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல முடியும். ஆனால், அந்தப் பதில் நிச்சயம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் இருக்கும்.
ஜெகனாகிய நான்…
சிறு வயதிலிருந்தே என் ஈர்ப்பு ஆணின் மீது மட்டுமே இருப்பதை உணர்ந்தே வளர்ந்தேன். எங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு என்னைப் பற்றி நான் தெரிவித்தவுடன், என் மீது அவர்களின் பாசமும் அக்கறையும் இரட்டிப்பானது. எங்களின் திருமணத்தை நடத்திவைத்ததோடு, நீங்கள் எங்கேயும் வெளியே சென்று சிரமப்பட வேண்டாம்; இந்த வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லிவிட்டனர். எங்களுக்கென்று ஒரு குழந்தை நிச்சயம் வேண்டும். இதில் சசியுடைய கருத்துதான் என்னுடையதும். நிச்சயம் எங்கள் குழந்தையோடு சமூகத்தின் முன்பாக நாங்கள் வெளிப்படுவோம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
திருத்தப்பட்ட பழமைவாதம்
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 மனித உரிமைக்கு எதிரானது என்று 2001 முதல் சட்டப் போராட்டம் நடத்திவருகிறது ‘நாஸ்’ அறக்கட்டளை. தனி மனித உரிமைக்கு எதிரான 377-வது சட்டப் பிரிவை நீக்கினால்தான் மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகள் மீட்கப்படும் என்ற கோரிக்கையைச் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் செப்டம்பர் 6 அன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, “நாட்டில் அனைத்துக் குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதிசெய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தற்போதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே, அரசியல் சட்டத்தின் 377-வது பிரிவு திருத்தப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல.
தன்பால் உறவாளர்களை இதுவரை தள்ளி வைத்ததற்கும் நிராகரித்ததற்கும் வரலாறு தன்பால் சேர்க்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. 30 ஆண்டுகளுக்கும் மேலான மாற்றுப் பாலினத்தவர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் உரிமைப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT