Published : 04 Sep 2018 10:42 AM
Last Updated : 04 Sep 2018 10:42 AM

வரலாறு தந்த வார்த்தை 32: சொற்களுக்கு இல்லை ‘ஹவுஸ்’ அரெஸ்ட்!

‘நக்ஸலைட்’ என்று சொல்லி சமூகச் செயற் பாட்டாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருப்பதுதான் கடந்த வார ‘பரபர’ செய்தி. அதைத் தொடர்ந்து ‘அர்பன் நக்ஸல்’ என்கிற பதம், சமூக ஊடகங்களில் ‘ட்ரெண்ட்’ ஆகி வருகிறது.

‘நக்ஸல்கள் எல்லாம் காடுகளுக்குள்ளேதானே இருப்பார்கள். அப்புறம் ஏன் ‘அர்பன் நக்ஸல்’ என்ற பதம்?’ என்ற கேள்வி எழுவது இயல்பு. அதாவது, வளர்ச்சி என்ற பெயரில், சாமானியர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது, அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை எல்லாம் இடதுசாரிகள் என்றும், இடதுசாரிகள் எல்லாம் நக்ஸல்கள் என்றும், அந்த நக்ஸல்கள் எல்லாம் நகரத்தில் வாழ்வதால், அவர்களை ‘அர்பன் நக்ஸல்’கள் என்று அரசும் வலதுசாரிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அவர்கள் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்கு, ‘அர்பன் நக்ஸல்’கள் என்ற பதம் சிலருக்கு மட்டுமே புரியக் கூடியதாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில், நாட்டில் பெரும்பான்மையோருக்கு அந்தப் பதத்தின் பொருள் தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களும் அந்தப் பதத்தை, சரளமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

 இவ்வாறு, ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே புரியக்கூடியதாக இருந்து, சில நாட்களுக்குப் பிறகு பலரும் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் பெயர்கள் அல்லது சொற்களை, ஆங்கிலத்தில் ‘Household word’ என்பார்கள்.

‘அர்பன் நக்ஸல்’கள் என்ற வார்த்தையை யார் முதலில் பயன்படுத்தினார்களோ தெரியாது. ஆனால், ‘ஹவுஸ்ஹோல்ட் வேர்டு’ என்ற பதத்தை அறிமுகப்படுத்தியது பிரபல நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர். 1599-ல் அரங்கேற்றப்பட்ட அவரது ‘5-ம் ஹென்றி’ என்ற நாடகத்தில் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினார்.

ஷேக்ஸ்பியருக்குப் பிறகு, பல காலம் அந்தச் சொற்றொடர் யாராலும் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது. பிரபல எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்ஸ்தான் தன்னுடைய எழுத்துகள் மூலம் அந்தச் சொற்றொடரை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். ‘ஹவுஸ்ஹோல்டு வேர்ட்ஸ்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையையே அவர் நடத்தினார். பிறகு, அந்தச் சொற்றொடர் சரளமாக மக்களிடையே புழங்கியது.

தற்போது கைது செய்யப்பட்ட அந்த ஐந்து பேரும் ‘ஹவுஸ்’ அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளார்கள். மனிதர்களை வேண்டுமானால் கைது செய்யலாம். கருத்துகளை ‘ஹவுஸ்’ அரெஸ்ட் செய்ய முடியுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x