Published : 01 Sep 2018 11:17 AM
Last Updated : 01 Sep 2018 11:17 AM
நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி, ‘டெல்லிங் ஸ்டோரீஸ்’ என்ற மூன்று பாகங்கள் கொண்ட ஆங்கில நாடகத் தொடரைத் தயாரித்து இயக்குகிறார். முதல் பாகமான ‘இன் தி நேம் ஆஃப் ஹெரிடேஜ் டெவலப்மெண்ட்’ என்ற நாடகம், ஆகஸ்ட் 24, 25-ம் தேதிகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கதே இன்ஸ்டிட்யூட்டில் அரங்கேறியது.
போராட்டங்களின் மீள்நிகழ்வு
தனது ஒவ்வொரு நாடகத்திலும் ஏதேனும் சமூகப் பிரச்சினையைக் கையிலெடுக்கும் ப்ரஸன்னா, இந்த நாடகத்தில் விவசாயிகள் மீதான சுரண்டல். அவர்களது தற்கொலைகள், விடுதலைப் போராட்டங்கள் ஆகியவற்றை வரலாற்றுபூர்வமாக அணுகியிருக்கிறார். அந்த வகையில் சம்பாரண் போராட்டமும் தெலங்கானா விவசாயிகள் போராட்டமும் இந்த நாடகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தடுத்த பாகங்களில் மேலும் நான்கு விவசாயிகள் போராட்டங்களைக் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
சம்பாரண் போராட்டம் பற்றிய காட்சிக்கு கலை இயக்குநர் சுபோத் கேர்கர், தெலங்கானா போராட்டம் பற்றிய காட்சிக்குத் தமிழக நாடக ஆசிரியர் பிரளயன் ஆகியோர் பங்களித்திருக்கிறார்கள். நாடகத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அவற்றில் நடித்தவர்கள் உட்பட பலரது எழுத்துப் பங்களிப்புடன் இந்த நாடகப் பிரதியை உருவாக்கி இயக்கியிருக்கிறார் ப்ரஸன்னா.
இந்த இரு போராட்டங்கள் பற்றிய கச்சிதமான வரலாற்றுப் புரிதலை இந்தக் காட்சிகள் அளிக்கின்றன. இவற்றின் பின்னணியில் நிகழ்ந்த உழைப்புச் சுரண்டல், பெண் விவசாயிகள்மீதான பாலியல் சுரண்டல் சமரசம் இன்றிப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காட்சியும் எடுத்துக்கொண்ட விஷயத்தை வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவுசெய்வதோடு, ‘விவசாயிகள் தற்கொலைகளையும் கார்ப்பரேட்களின் சுரண்டல்களையும்
எதிர்த்து ஃபேஸ்புக்கில் பதிவுகள் போடுவதைத் தவிர வேறென்ன செய்துவிட்டோம்’ என்ற குற்ற உணர்வையும் தருகின்றன. சம்பாரண் காட்சியில் மகாத்மா காந்தியையும் ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்தியிருப்பது சிறப்பான காட்சி அனுபவம்.
அம்பலமாகும் அதிகாரக் கூட்டணி
இன்றைய தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் சாதி, மதவெறியர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் தங்களுக்கிடையிலான அதிகாரக் கூட்டணியை வெட்கமின்றி வெளிப்படுத்துவதும் இதற்கு மத்திய அரசின் பிரதிநிதி ஆசி அளிப்பதும், எதிர்ப்புக் குரல் எழுப்பும் செயற்பாட்டாளர்கள் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் ஊடகவியலாளர்களும்கூடத் தீவிரவாதிகளாகவும் அந்நியக் கைக்கூலிகளாகவும் சித்தரிக்கப்படுவதும் நாடகத்தின் காட்சிகளில் ஒன்று. வளர்ச்சியின் பெயரால் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படும் நிகழ்கால அவலத்தையும் இக்காட்சி பதிவுசெய்கிறது.
நாடகத்தின் தொடக்கக் காட்சியில் மெலிதாக எட்டிப் பார்க்கும் பிரச்சாரத் தொனி இறுதிக் காட்சியில் மீண்டும் தலைதூக்குகிறது. சூழலியலாளர்கள் பங்கேற்ற ஒரு கருத்தரங்கின் மீட்டுருவாக்கமான இந்தக் காட்சி நாடகத்தின் பகுதி என்பதைத் தாண்டி பார்வையாளருடனான நேரடி கருத்துப் பகிர்வாக மாறிவிடுகிறது.
கலைகள் இணையும் கலை
நாடக உருவாக்கத்தில் பலர் பங்களித்திருந்தாலும் மேடையில் தோன்றுவது சர்வேஷ் ஸ்ரீதர், நிரன் விக்டர், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், நிகில் கேடியா, பர்ஷதி ஜே.நாத் ஆகிய கலைஞர்கள்தாம். இவர்கள் ஐவருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வேடம்.
உடைமாற்றவோ ஒப்பனைக்கோ நேரம் எடுக்காமல் சின்னச் சின்ன பொருட்களை வைத்தே நடிகர்கள் ஒரு கதாபாத்திரத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறுவதை ரசிக்க முடிகிறது.
வெறுமனே வசனங்களை உச்சரிக்காமல் அனைவருமே உடலை வளைத்து நெளித்து, ஆடிப் பாடி, உணர்ச்சிவயப்பட்டுக் கூக்குரலிட்டு, பகடி செய்து, கண்ணீர் சிந்தி நடித்திருக்கிறார்கள்.
நாடகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பன்மொழிப் பாடல்கள் ரேவதி குமாரின் குரலால் உயிர்பெறுகின்றன. ஆனந்த்.கே-வின் கிதாரும் குருமூர்த்தி பாலாஜியின் தாளமும் துருத்திக்கொண்டு தெரியாமல் காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கின்றன. கே.நடராஜனின் ஓவியம், உள்ளிட்ட கலை பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது நாடகத்துக்குள் பல கலை வடிவங்களை இணைக்கும் முயற்சியாக மிளிர்கிறது.
விவசாயிகள் பிரச்சினைக்கு நம்மால் ஏதுவும் செய்ய முடியாவிட்டாலும் அதைப் பற்றிய சரியான புரிதலை அடைந்து அவர்களுக்கு மனதளவிலேனும் துணை நிற்க முயல்வதே ஒரு சமூகப் பங்களிப்புதான். அந்தப் பங்களிப்பைச் செய்ய இது போன்ற நாடகங்கள் உதவுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment