Published : 11 Jun 2019 11:39 AM
Last Updated : 11 Jun 2019 11:39 AM
கடந்த மே 30 அன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் 57 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். பதவியேற்ற 57 அமைச்சர்களுக்கும் அடுத்த சில நாட்களில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை என்பது பிரதமர், கேபினெட் அமைச்சர், இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), இணை அமைச்சர், துணை அமைச்சர் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது. மக்களவைக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் மத்திய அமைச்சரவையே கூட்டுப்பொறுப்பு வகிக்கிறது. பிரதமரின் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
அந்த வகையில் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதும் இலாகாக்களை ஒதுக்குவதும் பிரதமரின் அதிகாரம். அதேபோல் அமைச்சர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கவும் அமைச்சகத்தை மாற்றவும் அமைச்சரவையை விரிவு படுத்தவும் பிரதமருக்கு அதிகாரம் உண்டு. பிரதமர் பதவி விலக நேர்ந்தால் மத்திய அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியாக வேண்டும்.
அமைச்சர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றின் உறுப்பினராக இருக்க வேண்டும். பொதுவாக ஆளும் கட்சி அல்லது அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அவை உறுப்பினர்களே அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள். அவை உறுப்பினராக அல்லாதவர் அமைச்சராக நியமிக்கப்படலாம். இந்த முறை வெளியுறவு விவகாரங்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெய்சங்கர் சுப்ரமணியம் அவை உறுப்பினர் இல்லை. ஆனால், இப்படி நியமிக்கப்படும் அமைச்சர்கள் ஆறு மாதங்களுக்குள் மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினராகிவிட வேண்டும்.
அமைச்சர்களின் எண்ணிக்கை
மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 சதவீதத்துக்கு மேல் அமைச்சர்களாக இருக்கக் கூடாது என்பது நிர்வாக சீர்திருத்தக் குழுவின் பரிந்துரை. தேவை, குறிப்பிட்ட துறைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய அமைச்சகங்களை உருவாக்கலாம்.
மத்திய கேபினெட்
கேபினெட் அமைச்சர்கள் நிதி, பாதுகாப்பு, உள்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களுக்குத் தலைமை வகிப்பார்கள். வாரம் ஒரு முறையோ தேவைப்பட்டால் அதற்கும் மேலாகவோ நடைபெறும் கேபினெட் கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும்.
முக்கியமான சட்டங்கள், கொள்கைகள், அமைச்சரவைகளின் முடிவுகள் கேபினெட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு. கேபினெட்டின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். எனவே, நடைமுறையில் அரசை நடத்துவது மத்திய கேபினெட்தான். ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சகங்களுக்கு கேபினெட் அமைச்சராக இருக்கலாம்.
இணை அமைச்சர்கள்
இணை அமைச்சர்கள் பெயருக்கு ஏற்றதுபோல் கேபினெட் அமைச்சர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள். அவர்கள் கேபினெட் உறுப்பினர்கள் அல்ல என்பதால், பொதுவாக கேபினெட் கூட்டங்களில் பங்கேற்க முடியாது. கேபினெட் அமைச்சர் நியமிக்கப்படாத அமைச்சகங்களுக்கு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) தலைமை வகிப்பார். ஒருவர் எத்தனை அமைச்சகங்களில் வேண்டுமானாலும் இணை அமைச்சராகச் செயல்படலாம்.
17-வது மக்களவையில் அமைச்சர்கள்
17-வது மக்களவையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கும் 57 அமைச்சர்களில் 24 பேர் கேபினெட் அமைச்சர்கள். இவர்களில் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி, ஹர்சிம்ரத் கெளர் ஆகிய மூவரும் பெண்கள். இந்த முறை ‘நீர் சக்தி' என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அதற்கு ஒரு கேபினெட் அமைச்சரும் ஒரு இணை அமைச்சரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒன்பது தனிப் பொறுப்பு இணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 24 பேர் இணை அமைச்சர்களாக மட்டும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இணை அமைச்சர்களில் மூவர் பெண்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT