Published : 04 Jun 2019 09:29 AM
Last Updated : 04 Jun 2019 09:29 AM
இளைஞர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்பதற்கு வரலாற்றில் சான்றுகள் பல உண்டு. பருவநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த வளர்ந்த நாடுகள் உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கக் கோரி சர்வதேச அளவில் மாணவர்கள் போராட்டத்தில் அண்மையில் ஈடுபட்டது அவற்றில் ஒன்று. இத்தகைய இளைஞர்களின் ஆக்கப்பூர்வ ஆற்றல், சிந்தனை, செயல்பாடு மீது நம்பிக்கைகொண்டு அவர்களுக்காக மாதிரி ஐக்கிய நாடுகள் சபையை ஐ.நா. நடத்திவருகிறது.
அதிலும் ஆசிய இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே பிரத்யேகமானதொரு கருத்தரங்கத்தைக் கடந்த இரண்டாண்டுகளாக நடத்திவருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் மலேசியாவின் புத்ரஜயா பகுதியில் ஆசிய இளைஞர் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு நடக்கவிருக்கிறது. அதில் பங்கேற்க விண்ணப்பித்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜானியும் தேர்வாகி இருக்கிறார்.
கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைட் ரிசர்ச் நிறுவனத்தில் பி.இ. கட்டிடப் பொறியியல் முடித்துவிட்டு புனேவில் உள்ள கட்டிட மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் முதுநிலை முன்னேறிய கட்டிட மேலாண்மைப் படிப்பில் சேர்ந்திருக்கிறார் இவர்.
நகர்ப்புறத் திட்டமிடலில் பேரார்வமிக்க இவர் தன்னுடைய துறை மீதான காதல்தான் ஐ.நா. மாநாட்டுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டைப் பெற்றுத்தந்திருக்கிறது என்று பெருமிதம் கொள்கிறார்.
“கட்டிடப் பொறியியல் தொடர்பாகப் பல்வேறு கருத்தரங்கங்களில் ஆய்வுத் தாள்களை வாசித்திருக்கிறேன். அதன் வழியாகவே மேடைப் பேச்சுத் திறன், மென் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொண்டேன். கற்றுக்கொண்டதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்தும் ஆவலோடு இருந்தபோதுதான் இன்ஸ்டாகிராமில் இந்த மாநாடு குறித்த செய்தி கண்டு விண்ணப்பித்துத் தேர்வானேன்.
உலகமயமாக்கத்துக்குப் பிறகு நம்முடைய உணவு, ஆரோக்கியம் முதல் தேசப் பொருளாதாரம், அரசியல் சூழல்வரை அத்தனையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
இவற்றில் கட்டிடப் பொறியாளரான நான் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நகரமயமாதலுக்குத் தீர்வு காணவே இந்த மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறேன்” என்கிறார் மாதிரி ஐ.நா.வில் தடம் பதிக்கவிருக்கும் இந்தத் தமிழக மாணவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT