Last Updated : 11 Jun, 2019 11:30 AM

 

Published : 11 Jun 2019 11:30 AM
Last Updated : 11 Jun 2019 11:30 AM

புதிய கல்விக் கொள்கை 2019: மாறவிருக்கும் பள்ளிக் கல்வி

நான்காண்டுகள் தயாரிப்புக்குப் பிறகு தேசியக் கல்விக் கொள்கை வரைவு அண்மையில் வெளி யிடப்பட்டது. பொது மக்களின் கருத்துக்கேட்புக்காக ஜூன் 30 வரை இந்த வரைவு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கை, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை உள்வாங்கி  கஸ்தூரி ரங்கன் கமிட்டி வடிவமைத்திருக்கும் திட்டம் இது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் முதியோர் கல்வி, தேசியக் கல்வி கமிஷன் குறித்து விவரிக்கும் ‘கல்வியை உருமாற்றும் திட்டம்’ என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 484 பக்கங்களுக்கு விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

இதில் முதல் பாகமான பள்ளிக் கல்வியில் தொடக்கக் கல்வி, பாடத்திட்ட வடிவமைப்பு, தரமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறை, கல்வி உரிமைச் சட்டத்தைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் 150 பக்கங்கள் அளவில் விளக்கப்பட்டுள்ளன. இவற்றைக் குறித்துக் கல்வியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டோம்.

இணையான தரம் வேண்டும்

ஆரம்பகாலக் கல்வியின் அவசியமும் கல்வி உரிமைச் சட்டத்தைத் திறம்பட நடைமுறைப்படுத்த வேண்டிய விதமும் முந்தைய கல்விக் கொள்கையைக் காட்டிலும் புதிய கல்வி கொள்கையில் தொலைநோக்குப் பார்வையுடன் மிக அழுத்தமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கன்வாடிகளைப் பலப்படுத்தாமல் தொடக்கக் கல்வியைப் பலப்படுத்துகிறேன் என்று சொல்வதில் அர்த்தமில்லை.

பள்ளிக் கல்வியை நான்கு நிலைகளாகப் பிரிக்காமல் 5-ம் வகுப்புவரை அடித்தள நிலை, 6-லிருந்து பிளஸ் 2 வரை மேல்நிலை என்பதாக இரண்டே நிலைகளை வைத்துக்கொண்டால் எளிமையாகத் திறமையாகச் செயலாற்றலாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எட்டாம் வகுப்போடு படிப்பு இடைநின்று போவதைத் தடுக்க இது கைகொடுக்கும்.

வசதிவாய்ப்பற்ற பின்புலத்தில் இருந்து கல்வி பயில வரும் மாணவர்களும் தங்கிப் படிக்க ஏதுவாக அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ விடுதிகள் கட்டப்பட வேண்டும்.

அனைவரையும் அரவணைக்கும் கல்விக் கொள்கை என்பது வெறும் கோட்பாட்டளவில் இல்லாமல் நிதர்சனத்தில் சாத்தியப்படுத்த புறநகர் பகுதிகளில் கிராமப் பஞ்சாயத்து பொதுப்பள்ளி, நகரத்தில் வார்டு பொதுப்பள்ளி ஆகிய இரண்டு விதமான பள்ளிகள் மட்டுமே கட்டமைக்கப்பட வேண்டும். அவை மத்திய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான தரத்தில் உருவாக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே சமமான கல்வி வாய்ப்பை அனைவருக்கும் வழங்கும் கல்விக் கொள்கை இது என்று அறிவித்துக்கொள்ளலாம்.

-நிரஞ்சன் ஆராத்யா, திட்டத் தலைவர், உலகளாவிய சமமான தரமான கல்வித் திட்டம், குழந்தை மற்றும் சட்ட மையம், இந்திய தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகம், பெங்களூரு.

செயல்திட்டம் எங்கே?

“பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாகப் புதிய கல்வி கொள்கையில் பலமுறை குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால், என்.சி.இ.ஆர்.டி. போன்ற தொரு அமைப்பை மட்டுமே பாடத்திட்டத்தை வகுக்க வழிகாட்டியாக முன்மொழியும்போது பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதற்கான இடம் எங்கே இருக்கிறது? படிப்புக்கு இணையாகக் கலை-விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனும்போது பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளில் தொடங்கி ஆசிரியர் நியமனம் வரை பல கட்டங்களில் அதை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டம் எங்கே?

- அன்னா ஜார்ஜ், வாரிய உறுப்பினர், வித்யோதயா பள்ளி, சென்னை

அறக் கல்விக்கான இடம்

புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றிருக்கும் தலைப்புகளில் ஒன்றான, பாடத்திட்ட வடிவமைப்பில் குழந்தைகளுக்கு அறக்கல்வி அளிப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. அதிலும் அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சமய சார்பற்ற முறையில் சமத்துவம், நீதி, நியாயத்தை மாணவர்கள் மனத்தில் விதைக்கவேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. பண்பாட்டு பன்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ள மாணவர்களைப் பக்குவப்படுத்தும் நோக்கில் பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என்ற உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

-மினி கிருஷ்ணன், ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்தியா, மொழிபெயர்ப்புப் பிரிவு ஆசிரியர்.

யார் அந்த உள்ளூர் பயிற்றுநர்?

8-ம் வகுப்பில் தேர்ச்சி பெறத் தவறுபவர்களுக்கு மேற்கொண்டு தொழிற்கல்வி கற்பிக்கப்படும் என்ற திட்டம் முந்தைய டி.எஸ்.ஆர். கமிட்டியால் முன்வைக்கப்பட்டபோது கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. குறிப்பாகத் தமிழகம் இதை வன்மையாகக் கண்டித்தது. உதாரணத் துக்கு, எட்டாவதுவரை அறிவியல் புரியாத ஒரு மாணவருக்கு பிளஸ் 1-ல்கூட அந்தப் பாடத்தில் பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதே என்ற குரல் எழுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அப்போது கைவிடப்பட்டது. ஆனால், அதே திட்டம் மீண்டும் புகுத்தப்படுவதற்கான அறிகுறி புதிய கல்வி கொள்கையில் தெரிகிறது. அதேபோல 9-பிளஸ் 2 வரை செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சொல்லும்போது அதை எவ்வாறு, ஏன் அமல்படுத்த வேண்டும் என்பதில் தெளிவில்லை.

இன்னொரு ஆபத்தான போக்கு, உள்ளூர் பயிற்றுனர்களைப் பள்ளியில் இணைக்கும் திட்டத்தில் ஒளிந்துள்ளது. ஒரு மாணவருக்குக் கணிதத் திறன், மொழித் திறனில் போதாமை இருந்தால் அதிலிருந்து அவரை மீட்க வேண்டிய கடமை ஆசிரியருக்குத்தான் உள்ளது. ஆனால், இதற்குத் தீர்வு காண உள்ளூர் தன்னார்வலர்களைப் பயன்படுத்தலாம் எனும்போது யார் அந்தப் பயிற்றுநர் என்ற கேள்வி எழுகிறது.

அரசியல் பின்புலம் கொண்ட எவரும் உள்ளூர் பயிற்றுநர் என்ற போர்வையில் பள்ளிகளுக்குள் ஊடுருவும் ஆபத்து இதில் ஒளிந்திருக்கிறது. கல்வியில் ஆர்வமுள்ளோர் பங்கேற்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், இந்த ஏற்பாட்டால் அரசு தம் பொறுப்பிலிருந்து விலகும் அபாயம் உள்ளது. மேலும் சரியான புரிதலில்லாதச் சூழலில் ஆசிரியர்கள் விரக்தி அடையக்கூடும்.

- முனைவர் என்.மாதவன், கல்வியாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

பள்ளிக் கல்வியில் புதியன

# தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 6-14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வி வழங்கப்பட்டுவருகிறது. இதில் திருத்தம் செய்து 3-18 வயதுக்கு உட்பட்டவர்களைக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டுவரத் திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பு நெடுங்காலமாக வலியுறுத்தி வந்த Early Childhood Care and Education (ECCE) தற்போது பள்ளிக் கல்வியின் முக்கிய அங்கமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

# அடித்தள நிலை (3-8 வயதினர்) -  பாலர் பள்ளிக் குழந்தைகள் முதல் 2-ம் வகுப்பு குழந்தைகள்வரை

# ஆயத்த நிலை (8-11 வயதினர்) – 3-5 வகுப்பு மாணவர்கள்

# இடை நிலை (11-14 வயதினர்) – 6-8 வகுப்பு மாணவர்கள்

# மேல்நிலை (14-18 வயதினர்) :  9-பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள்

# படிப்புக்கு இணையான முக்கியத் துவம் தனித்திறமைகளுக்குக் கொடுக்க முடிவு. இதன்படி இசை, கைவினை, யோகா, சேவை சார்ந்த பணிகள், விளையாட்டுகள் ஆகியன பாடத் திட்டத்தின் அங்கமாக இணைக்கப்படும்.

# கற்பனைத் திறன் – படைப்பாற்றல் திறன், விமர்சனப் பார்வை, சிக்கலுக்குத் தீர்வு காணும் நுட்பம், கூட்டாக இணைந்து குழுவாக இயக்கும் அணுகுமுறை உள்ளிட்ட 21-ம் நூற்றாண்டின் திறன்களை வளர்ப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள்.

# பெண் குழந்தைகள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள், மாற்றுப் பாலினக் குழந்தைகள், உடல்-மன மாற்றுத்திறனாளி உள்ளிட்ட சிறப்புக் குழந்தைகள், இதுவரை பிரதிநிதித்துவம் பெறாத பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஆகியோருக்குச் சமூகத்தில் அங்கீகாரமும் சம வாய்ப்பும் கிடைக்கக்கூடிய வகையில் கல்வி அளித்தல்.

# மும்மொழிக் கொள்கைப்படி தாய் மொழி, இணைப்பு மொழியாக ஆங்கிலம், மூன்றாவது மொழியாக இந்தி அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படும் என்று முதலில் வெளியான வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்த்ததால் ’இந்தி கட்டாயம் இல்லை’ என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் என்பதில் இதுவரை மாற்றமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x