Published : 13 Mar 2018 10:48 AM
Last Updated : 13 Mar 2018 10:48 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மார்ச் 9 அன்று நடைபெற்றது. மத்திய நீர் வள அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலர்களும் உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய நீர் வளத் துறைச் செயலர் யு.பி. சிங் தலைமைதாங்கினார்.
வசதிகளற்ற அங்கன்வாடி மையங்கள்
இந்தியாவில் மொத்தம் உள்ள 13.6 லட்சம் அங்கன்வாடி மையங்களில் 4.5 லட்சம் மையங்களில் கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லை என்ற தகவலை நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையாக மார்ச் 9 அன்று தாக்கல் செய்தது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நாட்டிலுள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வுசெய்தது.
இந்த ஆய்வில் 36 சதவீத அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை வசதி இல்லை என்பதும் 25 சதவீத மையங்களில் குடிநீர் வசதி இல்லை என்பதும் தெரியவந்திருக்கிறது. அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ. 54.14 கோடி, குடிநீர் வசதிகளுக்காக ரூ. 13.24 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கருணைக் கொலை தொடர்பான வழக்கில், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியமாக இறக்கும் வகையில், அவர்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதித்து உச்ச நீதிமன்றம் மார்ச் 9 அன்று தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. தீராத நோயால் துன்புறும் நோயாளிகளை, அவர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ள உயிர் காக்கும் சாதனங்களை அகற்றுவதன் மூலம் அவர்கள் கண்ணியமாக இறக்க அனுமதிக்கலாம் என்று இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபரின் இந்தியப் பயணம்
பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு மார்ச் 9 அன்று வந்தார். பிரதமர் நரேந்திர மோடி – எம்மானுவேல் மக்ரோன் இருவருக்கும் இடையேயான சந்திப்பு மார்ச் 10 அன்று டெல்லியில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு நாடுகளுக்கிடையேயான கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றன. அத்துடன், பிரான்ஸ்-இந்தியா கூட்டு முயற்சியில் நடைபெறும் சர்வதேசச் சூரிய மின்சக்தி கூட்டணி தொடர்பான மாநாட்டிலும் எம்மானுவல் பங்குகொள்கிறார்.
இந்தியா – சீனா வர்த்தகத்தில் புதிய மைல்கல்
2017-ம் ஆண்டு, இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ரூ. 8,440 கோடி அமெரிக்க டாலரை எட்டியிருப்பதாகச் சமீபத்தில் வெளியான சீனச் சுங்கப் பொது நிர்வாகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஓராண்டில் இந்தியா-சீனா வர்த்தகம் 18.63 சதவீதம் உயர்ந்திருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை. சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை, டோக்லாம் பிரச்சினை, அணு விநியோகக் குழுவில் இந்தியாவின் நுழைவை பெய்ஜிங் தடுத்தது போன்ற பிரச்சினைகள் இரண்டு நாடுகளுக்கு இடையே இருந்தபோதிலும் இந்த வர்த்தக வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது.
புதிய முதல்வர்கள்
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. திரிபுராவின் புதிய முதல்வராகப் பாஜகவின் விப்லப் குமார் தேப் மார்ச் 9 அன்று பதவியேற்றார். நாகாலாந்தின் புதிய முதல்வராகத் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் நெபியு ரியோ மார்ச் 8 அன்று பதவியேற்றார். மேகாலயாவின் புதிய முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா மார்ச் 6 அன்று பதவியேற்றார். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணியே ஆட்சி அமைத்திருக்கிறது.
பாலகிருஷ்ண தோஷிக்கு பிரிட்ஸ்கர் விருது
புகழ்பெற்ற இந்தியக் கட்டிடக் கலைஞர் பாலகிருஷ்ண தோஷிக்கு மார்ச் 7 அன்று ‘பிரிட்ஸ்கர்’ (Pritzker Prize) விருது அறிவிக்கப்பட்டது. கட்டிடக் கலைக்கான நோபல் பரிசாகக் கருதப்படும் இந்த ‘பிரிட்ஸ்கர்’ பரிசை பெறும் முதல் இந்தியர் இவர்.
அவருக்கு வயது 90. புனேவைச் சேர்ந்த இவர், குறைந்த செலவிலான குடியிருப்புகளை வடிவமைப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பிரான்ஸ்-சுவிஸைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான லெ கொர்புசியேவிடம் (Le Corbusier) இவர் பணியாற்றியிருக்கிறார்.
ஐ.ஐ.எம். - அகமதாபாத், பெங்களூரு, லக்னோ கல்வி நிறுவனங்கள், தாகூர் நினைவரங்கம் போன்றவற்றை வடிவமைத்தவர் இவரே.
‘ஹெலி-டேக்ஸி’ சேவை தொடங்கியது
இந்தியாவின் முதல் ‘ஹெலி-டேக்ஸி’ சேவை பெங்களூருவில் மார்ச் 6 அன்று தொடங்கியது. இந்த முதல் ஹெலி-டேக்ஸி பயணம் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிவரை அமைந்திருந்தது.
கொச்சியைச் சேர்ந்த ‘தும்பி ஏவியஷன்’ என்ற நிறுவனம் இந்த ஹெலி-டேக்ஸி சேவையை வழங்கி யிருக்கிறது. ஒரு பயணத்தில் ஆறு பேர் பயணிக்கும்படி ஹெலி-டேக்ஸி சேவை திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து இந்தப் பயணக் கட்டணத்தின் விலை ரூ. 4,130 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு சாலை வழியாகப் பயணித்தால் இரண்டு மணி நேரமாகும். இந்தப் பயண நேரத்தை ஹெலி-டேக்ஸி 15 நிமிடங்களாகக் குறைத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT