Published : 06 Mar 2018 11:10 AM
Last Updated : 06 Mar 2018 11:10 AM
சிரியாவின் கிழக்கு கவுடா பகுதியில் பிப்ரவரி 18 முதல் நடந்துவரும் போர் கடந்த வாரம் தீவிரமடைந்தது. சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் 2014-ம் ஆண்டு முதல் போராடிவருகிறார்கள். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரியப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன. தற்போது கிளர்ச்சியாளர்களின் கைவசம் உள்ள கடைசி பகுதியான கிழக்கு கவுடாவில் கடந்த ஒரு வாரமாக சிரிய - ரஷ்யக் கூட்டுப் படைகள் கடும் வான்வழித் தாக்குதலை நடத்திவருகின்றன. இந்த ஒரு வாரப் போரில் 120 குழந்தைகள் உட்பட 580 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கிறது ஐ.நா.
ரத்னவேல் பாண்டியன் மறைவு
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ரத்னவேல் பாண்டியன் 89 வயதில் சென்னையில் பிப்ரவரி 28 அன்று காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1988-ம் ஆண்டிலிருந்து 1994-ம் ஆண்டுவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். இவர் ஓய்வுபெற்ற பிறகு, தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக 2006-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டுவரை பதவிவகித்தார். ‘மண்டல் கமிஷன்’ பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசுப் பணியிடங்களின் 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற இவர் வழங்கிய தீர்ப்பு இந்தியச் சமகால வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
21-வது தேசிய இ-கவர்னன்ஸ் மாநாடு
ஹைதராபாத்தில் பிப்ரவரி 26, 27 ஆகிய தினங்களில் 21-வது தேசிய இ-கவர்னன்ஸ் மாநாடு நடைபெற்றது. ‘வளர்ச்சியைத் தூண்டும் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. மத்திய மக்கள் குறைதீர்ப்பு அமைச்சகமும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் தெலங்கானா மாநில அரசுடன் இணைந்து மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தன. மத்திய நுகர்வோர் விவகாரத் துறை இணை அமைச்சர் சி.ஆர். சவுத்ரி, தெலங்கானா மாநில நகர் வளர்ச்சித் துறை அமைச்சர் கல்வாகுண்டல தாரக ராம ராவ், யு.ஐ.டி.ஐ. தலைவர் அஜய் பூஷண் பாண்டே போன்றோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
2018: உலக அரிய நோய் தினம்
உலகின் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிப்ரவரி 28 அன்று 11-வது உலக அரிய நோய் தினம், அனுசரிக்கப்பட்டது. உலகில் உள்ள அரிய நோய்கள், அவற்றின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசி நாள் இந்த ‘உலக அரிய நோய் தினம்’ அனுசரிக்கப்படும். 2017-ம் ஆண்டின் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் கருப்பொருளாகவும் ‘ஆராய்ச்சி’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ‘அரிய நோய்களுக்கான ஐரோப்பிய அமைப்பு’ (EURORDIS) இந்த உலக அரிய நோய் தினத்தை ஒருங்கிணைத்தது.
காவிரி மேலாண்மை வாரியம்: உடனடி சாத்தியமல்ல
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பது சாத்தியமல்ல என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிப்ரவரி 26 அன்று தெரிவித்தார். காவிரி நதிநீர்ப் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதாகவும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவின் தண்ணீர் பிரச்சினையைக் கவனமாகக் கையாள அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோதாவரியிலிருந்து கடலுக்குச் செல்லும் 3,000 டி.எம்.சி. நீரில், 700 டி.எம்.சி. நீரை இரண்டு அணைகள் மூலம் காவிரிக்குத் திருப்பிவிடுவதற்கு ரூ. 1 லட்சம் கோடி செலவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அத்துடன், ரூ. 60,000 கோடி போலாவரம் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போதைக்கு அமைப்பது கடினம் என்றார்.
பாதியாகக் குறைக்கப்படும் பாடத்திட்டம்!
என்.சி.இ.ஆர்.டி. பள்ளிப் பாடத்திட்டம் 2019-ம் கல்வியாண்டில் பாதியாகக் குறைக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேடகர் பிப்ரவரி 24 அன்று தெரிவித்தார். பி.ஏ, பி.காம். படிப்புகளின் பாடத்திட்டத்தைவிடப் பள்ளிப் பாடத்திட்டம் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார் அவர். பள்ளி மாணவர்களுக்கு மற்ற அறிவாற்றல் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு நேரம் கிடைக்கும்படி என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும், பள்ளித் தேர்வுகள், ஒரே வகுப்பில் மாணவர்களை நிறுத்திவைத்தல் தொடர்பான மசோதா அடுத்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரம் கைது
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு உரிமையைப் பெற்றுத் தருவதற்கு 2007-ம் ஆண்டு, ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சி.பி.ஐ.யால் பிப்ரவரி 28 அன்று கைதுசெய்யப்பட்டார். அவரை, ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ-க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியாவின் முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த இணைய வசதி: இந்தியாவுக்கு 47-வது இடம்
2018-ம் ஆண்டுக்கான ‘ஒட்டுமொத்த இணைய வசதி’ பட்டியலில் இடம்பெற்ற 86 நாடுகளில் இந்தியா 47-வது இடத்தில் இருப்பதாக ஃபேஸ்புக் பிப்ரவரி 26 அன்று அறிக்கை வெளியிட்டது. ‘எகனாமிக் இன்ட்டெலிஜென்ஸ் யூனிட்’ என்ற அமைப்புடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த ஒட்டுமொத்த இணைய வசதிப் பட்டியலில் 91 சதவீத உலக மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். 2017-ம் ஆண்டில் 36-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு குறைவான இணையப் பயன்பாடு, மோசமான தரம் காரணமாக 11 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT