Published : 21 May 2019 11:10 AM
Last Updated : 21 May 2019 11:10 AM
பழுத்துத் தொங்கும் மாங்கனிகளைக் கொத்தித் திங்க பச்சைக்கிளிகள் வட்டமிடுகின்றன. நீர்நிலைகள் என நினைத்துக் கிராமத்தில் உள்ள ஆடு, மாடுகளும் நீர் பருகச் சுற்றி வருகின்றன. ஆலமரம் எனக் கூடு கட்ட நினைத்து ஏமாந்த பறவைகள் ஏராளம். இவையெல்லாம் அரசுப் பள்ளிகளின் வளாகத்தில் வரையப்பட்டுள்ள தத்ரூபமான ஓவியங்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களின் மனநிலையைப் படைப்பாற்றலுடன் வளர்க்கவே, இந்த முயற்சி என்கிறது ‘பட்டாம்பூச்சிகள்’ என்ற அரசுப் பள்ளிகளைக் காக்கும் இயக்கம். இதில் இயங்கும் பலரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
குழந்தைகளுக்குப் பிடித்தமான வண்ணமயமான சூழலை வகுப்பறையில், பள்ளிச் சுற்றுச்சுவரில் கடந்த 4 ஆண்டுகளாக உருவாக்கிவருகிறது இந்த இயக்கம். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, விழுப்புரம், நீலகிரி, கடலூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 85-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை இவர்கள் அழகாக்கி உள்ளனர்.
தூரிகையால் மீண்ட பள்ளி
“என் ஆசிரிய நண்பர் ஒருவரைக் காண தேனி மாவட்டத்தில் அவர் பணிபுரியும் பள்ளிக்குச் சென்றிருந்தேன். கடுமையான மழையால் அப்போது அந்தப் பள்ளி சிதிலமடைந்து கிடந்ததைப் பார்த்தவுடன் வருத்தமாக இருந்தது.
சக ஆசிரியர்களுடன் ஒன்றுகூடி பள்ளியை முழுவதுமாகச் சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடித்து ஓவியங்களை வரைந்தோம். அதற்குப் பொதுமக்கள், பெற்றோர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. ‘இதேபோல எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கும் செய்துதாருங்கள்.
எங்கள் குழந்தைகளும் இதுபோன்ற பள்ளிச்சூழலில் படிக்க ஆசைப்படுகிறோம்’ எனப் பெற்றோர் பலரும் கோரிக்கையை முன்வைத்தனர். இப்படித்தான் ‘பட்டாம்பூச்சிகள்’ அமைப்பை 2015-ல் தொடங்கினோம். முருகன், பாண்டியன், சந்தோஷ், விவேகானந்தன், ராஜூ, சீனிவாசன், சித்தேந்திரன் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மற்ற பள்ளிகளில் வரையத் தொடங்கினோம்.
4 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு பள்ளிக்குக் குழுவாகச் சென்று பள்ளிக்குச் சுண்ணாம்பு அடித்து, ஓவியங்களை வரைந்துவிட்டுவருவோம். மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக, மூடப்படும் நிலையில் இருந்த கே.கே. பட்டி அரசு நடுநிலைப் பள்ளி எங்களுடைய முயற்சியால் இன்றைக்கு அந்தப் பகுதியில் அதிக மாணவர் எண்ணிக்கையுடன் இயங்கிவருகிறது” என்கிறார் ‘பட்டாம்பூச்சிகள்’ இயக்கத்தைத் தொடங்கிய தேனி மாவட்டம் கூடலூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜசேகரன்.
சிறகு விரித்த பட்டாம்பூச்சி
பேருந்தே செல்ல இயலாத கோம்பைத் தொழு, பில்லூர் அணை மலைக் கிராமங்களில் உள்ள பழங்குடியினர் குழந்தைகள் படிக்கும் உண்டு உறைவிடப் பள்ளி, இருளர் இன மக்கள் படித்துவரும் பள்ளி என அனைத்துத் தரப்புப் பள்ளிகளுக்கும் சென்று அங்கேயே தங்கி நாட்கணக்கில் இந்தக் குழுவினர் பணிபுரிகிறார்கள். இன்றைக்குப் ‘பட்டாம்பூச்சி’களிடம் விண்ணப்பித்துக் காத்திருக்கும் தமிழக அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 450.
“ஒரு மாவட்டத்துக்கு 10 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருந்தால்போதும், அவர்களைக் கொண்டு தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளையும் அழகாக்கிவிடுவோம். முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் துணையோடு பட்டாம்பூச்சியை விரிவுபடுத்த முயன்று வருகிறோம்.
ஓவியர்களாக இருக்கும் சில பெற்றோர்களும் எங்களுடன் இணைந்துகொள்கிறார்கள். இதனால் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் இயற்கையான ஒரு பந்தம் ஏற்படுகிறது” என்கின்றனர் இந்த அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் விவேகானந்தன், பாண்டி.
ஏன் அழகாக இருக்கக் கூடாது?
“அரசுப் பள்ளிகளை வண்ணமடித்து ஓவியங்கள் வரைவதால் என்ன வந்துவிடப்போகிறது என்று சிலர் விமர்சிப்பது உண்டு. தனியார் பள்ளிகளின் கட்டமைப்பால் ஈர்க்கப்பட்டு அவற்றில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்கள் இங்கு ஏராளம். ஏழை மாணவர்கள் படிக்கக்கூடிய அரசுப் பள்ளி ஏன் அழகாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கேள்வி? வெறும் சுவராக இருந்தால் அதில் உயிர் இருக்காது.
அதேநேரம் அதில் ஓவியம் தீட்டும்போது அதைக் கவனித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்குப் படைப்பாற்றல் வளரும். சுவரில் வரைந்துள்ளதைக் கவனிக்கத் தொடங்குவார்கள். அதன்பிறகு மெல்ல மெல்ல வரையத் தொடங்குவார்கள். இதன்மூலம் குழந்தையின் படைப்பாற்றலுக்குத் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கும்” என்கிறார் ராஜசேகரன் மிகவும் அக்கறையோடு.
சுண்ணாம்பு அடித்து ஓவியங்கள் வரைய ‘பட்டாம்பூச்சிகள்’ யாரிடமும் கூலி பெறுவதில்லை. மாறாகப் பள்ளிக் குழந்தைகளின் அன்பையும் பெற்றோரின் பெருமதிப்பையும் ஆசிரியர்களின் நம்பிக்கையையும் பெற்று அழியாத சித்திரமாகி உள்ளது இந்த அமைப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT