Published : 26 May 2019 10:00 AM
Last Updated : 26 May 2019 10:00 AM

பார்வை: ‘மிஸ்டர் லோக்கல்’ எழுப்பியிருக்க வேண்டிய கேள்விகள்

‘திமிர் பிடித்த’ பெண்ணை அடக்கும் ஆணின் கதை தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் அத்தகைய கதையைக் கொண்டதுதான்.

 தமிழ் சினிமா இதுவரை ஊட்டி வளர்த்த ஆணாதிக்க, பெண் வெறுப்பு சிந்தனைகளைப் பரப்புவதில் இந்தப் படம் பல படிகளைத் தாண்டியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் இலக்கணப்படி இப்படிப்பட்ட படங்களில் ‘திருத்தப்பட வேண்டிய’ பெண் நன்கு படித்தவராக, சுதந்திரச் சிந்தனையும் தற்சார்பும் கொண்டவராகக் குறிப்பாக நல்ல வேலையில் இருப்பவராகவோ தொழில் முனைவோராகவோ இருப்பார்.

இந்தப் படத்திலும் நயன்தாரா ஏற்றிருக்கும் கீர்த்தனா கதாபாத்திரம் அத்தகையதே. படத்தில் கீர்த்தனாவுக்கும் மனோகருக்கும் ஒரு சிறிய சாலை விபத்தின் மூலம் தொடங்கும் உரசல் மோதலாக உருவெடுக்கிறது. அந்த விபத்துக்கு கீர்த்தனா காரணமல்ல என்று அந்தக் காட்சியிலேயே சொல்லப் பட்டுவிட்டாலும் மனோகர் அதைத் தனக்கு நேர்ந்த அவமானமாக எடுத்துக்கொள்கிறான்.

முதலில் நியாயம் கேட்பதாகவும் பிறகு காதலிப்பதாகவும் சொல்லிக்கொண்டு அவளை மீண்டும் மீண்டும் சந்தித்து வெறுப்பேற்றுகிறான்; வம்புக்கு இழுக்கிறான். இதனால் வெறுப்படைந்து தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மனோகரை வேலை இழக்கச் செய்கிறார் கீர்த்தனா. மீண்டும் காதல் என்ற பெயரில் அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு வெறுப்பேற்றுகிறான்.

ஒரு கட்டத்தில் மனோகரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பழிவாங்க முயல்கிறார் கீர்த்தனா. அதில் வென்றாலும் அதன் மூலம் அவருக்கும் ‘பாடம்’ புகட்டப்படுகிறது. இறுதியில் ‘திருந்தி’விடுகிறார். அவருக்கும் மனோகர் மீது காதல் வந்து இருவரும் இணைந்து விடுகிறார்கள். கதைப்படி கீர்த்தனா சில தீங்குகளைச் செய்தாலும் அவை மனோகரின் செயல்களுக்கான எதிர்வினைகள்தாம்.

கொஞ்சமாவது நியாய உணர்வு கொண்ட பார்வையாளர்களுக்கு மனோகர் மீது கோபமும் கீர்த்தனா மீது பரிதாபமும் ஏற்படும் வகையில்தான் கதை அமைந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்தபிறகு படத்துடன் தொடர்புடையவர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கத் தோன்றுகிறது.

இயக்குநர் ராஜேஷ்

நீங்கள் இயக்கிய முதல் மூன்று படங்கள் வெற்றிபெற்றன. மூன்றாவது படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் கதாநாயகியும் இன்னொரு பெண் கதாபாத்திரமும் மோசமாக உருவக் கேலி செய்யப்படுவார்கள். அதிலிருந்து தொடங்கி நீங்கள் இயக்கிய எல்லாப் படங்களிலும் பெண்களை உருவத்துக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் இழிவுபடுத்தும் காட்சிகளும் வசனங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படம் கதை அளவிலேயே பெண்களுக்கு எதிரானது. பாடல், நடனம் போன்ற கலைகளில் சாதிக்கும் முனைப்பு கொண்ட நாயகியை ‘நீ திருமணம் செய்துகொண்டு நல்ல இல்லத்தரசியாக இருக்கத்தான் லாயக்கு’ என்று புரியவைத்து அவளை மணந்துகொள்வார் நாயகன்.

‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் உருவக் கேலி மட்டுமல்லாமல் திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களை டார்ச்சர் செய்வதாக மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை நகைச்சுவை என்ற பெயரில் திணித்திருந்தீர்கள். இந்த இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்தன.

இருப்பினும், நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்திக்கொண்டே இருப்பதைக் கைவிட மறுப்பது ஏன்? எப்படியாவது பெண்களைத் தாழ்வாகச் சித்தரிப்பது என்ற மன உறுதியை எங்கிருந்து பெற்றீர்கள்?

இந்தப் படத்தில் பாலினச் சிறுபான்மை யினரை இழிவு படுத்தியிருக்கிறீர்கள். நாயகி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத் திருந்தவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்.

கோபம் வந்தால் பெண் குரலில் பேசுகிறார். மறந்துபோய் பெண்களின் கழிவறைக்குள் நுழைய முற்படுகிறார். அவர் மூலம் அவளது உயிருக்கே ஆபத்து வருகிறது. போதாததுக்கு அந்தக் கதாபாத்திரம் தான் பெண்ணியத்தை வெறுப்பதாகச் சொல்கிறது.

ஒரே கதாபாத்திரத்தின் மூலம் எத்தனை விஷயங்களைச் சாதிக்கிறீர்கள்! தற்போது தமிழ் சினிமாவில் ‘திருநர்’ கதாபாத்திரங்கள் நாயகனாகவும் நாயகியாகவும் தோன்றத் தொடங்கிவிட்டார்கள். இந்த முன்னேற்றத்தை நீங்கள் முன்னகர்த்த வேண்டியதில்லை. பின்னுக்குத் தள்ளாமலாவது இருக்கக் கூடாதா?

சிவகார்த்திகேயன்

குழந்தைகளுக்குப் பிடித்த நடிகரானதன் மூலம் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகி இருக்கிறீர்கள். தமிழ்க் குடும்பங்களில் ஒருவர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறீர்கள். குடும்பம் என்றால் பெண்களையும் உள்ளடக்கியதுதானே.

உங்கள் படங்கள் பலவும் காட்சிகளாகவும் வசனங்களாகவும் பாடல்களாகவும் பெண் எதிர்ப்பு மனநிலையை ஊக்குவிப்பதை நீங்கள் உணரவில்லையா? அல்லது அப்படிச் செய்து ஆண்களின் கைதட்டலைப் பெற்றுத்தான் நட்சத்திர ஏணியில் உயரத்தை அடைய முடியும் என்பதை உணர்ந்தே இவற்றைச் செய்கிறீர்களா? பெண்ணை அடக்குபவர்களாக, பின் தொடர்ந்து தொந்தரவு செய்பவர்களாக, பெண்களை எதிர்த்து வசனம் பேசுபவர்களாகப் பல நட்சத்திர நாயகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் சினிமா தொடர்பான இன்றைய உரையாடல்களில் பாலினச் சமத்துவம் குறித்துப் பேசப்படுவது அதிகரித்திருக்கிறது. அது படங்களில் பிரதிபலிக்கத் தொடங்கி யிருக்கிறது. பெண்களை அவ்வளவு எளிதாக வெளிப்படையாக இழிவுபடுத்திவிட முடியாத சூழல் உருவாகிவருகிறது. உங்கள் படங்களும் இந்த மாற்றங்களுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

நயன்தாரா

இன்று கதாநாயகிகளில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறீர்கள். கதாநாயகன் இல்லாமல் நீங்கள் மட்டும் நடித்த படங்களே மிகப் பெரும் வெற்றிபெறுகின்றன. இந்த நிலையில் உள்ள நீங்கள் ஒரு பெண்ணை ஆண் ‘திருத்துவது’ போன்ற இந்தக் கதையை ஏற்றது ஏன்?

தொழிலில் வெற்றிபெற்றவராக, துணிச்சலும் சுதந்திரச் சிந்தனையும்கொண்ட பெண்ணாகக் கிட்டத்தட்ட உங்கள் நிஜவாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம் பலவகைகளில் இழிவுபடுத்தப்பட்டுக் கடைசியில் ‘திருத்தப்படுவதாக’ அமைந்திருக்கும் இந்தக் கதையில் நீங்களே நடிப்பதன் மூலம் வளர்ந்துவரும் நடிகைகள் என்ன செய்தியைப் பெறுவார்கள்?

இனியாவது இதுபோன்ற வாய்ப்புகளைத் தவிர்த்து, தமிழ் சினிமாவின் மூலம் பெண் வெறுப்பு, பிற்போக்குச் சிந்தனைகள் பரவுவதற்குப் பங்களிக்காமல் இருப்பீர்களா?

பார்வையாளர்கள்

ராஜேஷ்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான இந்தப் படம் நாம் எதிர்பார்த்தபடி சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளை அள்ளி வழங்கியிருந்தால், மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்க உதவியிருந்தால் நாம் இந்தப் படத்தை வெற்றிபெற வைத்திருப்போம்.

அப்போது இதில் இருக்கும் பெண் எதிர்ப்புக் கருத்துகள் நமக்குப் பிரச்சினையாக இருந்திருக்காது. ராஜேஷின் வெற்றிபெற்ற படங்களிலும் பெண் எதிர்ப்புக் கருத்துகள் இருந்திருக்கின்றன. இந்தப் படத்திலும்கூட பல நகைச்சுவை வசனங்கள் மொக்கையாக இருக்கிறது என்பதுதான் பலரது புகாராக இருக்கிறதே தவிர, அவற்றில் பல வசனங்கள் மோசமான கருத்துகளை உள்ளடக்கியிருப் பதைப் பலரும் சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள்.

“நான் அவங்க மேல கைவெச்சுட்டேன்” என்று பொது இடத்தில் கீர்த்தனாவைப் பற்றிச் சொல்லி மனோகர் இழிவுபடுத்துவதும் நாயகியின் கன்னத்தில் நாயகன் அறையும் ‘பாரம்பரியம்’ இப்போதும் தொடர்வதும் நமக்கு எந்தவிதமான உறுத்தலையும் ஏற்படுத்தவில்லைதானே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x