Published : 02 Apr 2019 11:15 AM
Last Updated : 02 Apr 2019 11:15 AM
முதல் மக்களவைத் தேர்தலை எந்த முன் அனுபவமும் இன்றி வெற்றிகரமாக நடத்திய காட்டிய இந்திய தேர்தல் ஆணையம், பிற்காலத்தில் தேர்தல் நடைமுறைகளை மேலும் மெருகேற்றியது. தேர்தலில் புதிய அம்சங்களும் கட்டுப்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியத் தேர்தலில் நடைபெற்ற சில முக்கியமான மாற்றங்கள்:
வயது குறைப்பு
1952-ம் ஆண்டில் 21 வயது நிறைந்த எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்வரை இந்த நடைமுறையே அமலில் இருந்தது. 1988-ம் ஆண்டில் வாக்களிப்பதற்கான வயதை அரசு குறைத்தது. இதன்படி 18 வயது நிறைந்தவர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். 1989-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் 18 வயது நிரம்பியவர்கள் முதன்முறையாக வாக்களித்தனர்.
அடையாள அட்டை
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமானதொரு முயற்சியாக அமைந்தது வாக்காளர் அடையாள அட்டை. ஒரு வாக்காளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதைத் தடுக்கவும் கள்ள ஓட்டுகளுக்கு முடிவு கட்டவும் வாக்களர் அடையாள அட்டை வழங்கும் முறை 1993-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன் எடுத்த முடிவு இது. இதன்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் பெயரைப் பதிவுசெய்து வாக்களர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகம்
தேர்தல் தொடங்கியதிலிருந்து வாக்குச்சீட்டில் முத்திரை குத்தி வாக்களிக்கும் முறையே அமலில் இருந்துவந்தது. செல்லாத ஓட்டுகளுக்கு முடிவு கட்டவும் வாக்களிப்பதை எளிமையாக்கவும் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகம் செய்தது. சோதனை முயற்சியாக 1998-ம் ஆண்டில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பிறகு 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரம் மூலமே தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பாகத் தமிழகத்தில் 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெற்றது.
நோட்டா அறிமுகம்
தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர், 49O என்ற விதியைப் பயன்படுத்தி தேர்தல் படிவம் 17-A-ல் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவிட்டுக் கையெழுத்திடும் நடைமுறை அமலில் இருந்துவந்தது. ஆனால். அதில் வாக்களிப்பதில் உள்ள ரகசியம் மீறப்பட்டுவந்தது. அதற்கு மாற்றாக அறிமுகமானதுதான் நோட்டா. ‘None of the above’ என்பதன் சுருக்கமே இது.
2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா அறிமுகமானது. அதே ஆண்டில் நடைபெற்ற மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், சட்டீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டா அறிமுகம் செய்யப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் நோட்டா அறிமுகமானது. தமிழகத்தில் 2013-ல் நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் முதன்முறையாக நோட்டா அறிமுகமானது.
திருத்தங்கள்
பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் தொடர்பான பல திருத்தங்களை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும் என்று 2003-ம் ஆண்டில் தேர்தல் விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள், வழக்கில் தண்டனை பெற்ற விவரங்களைச் சேர்ப்பதையும் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியது. 2009-ம் ஆண்டு முதல் தேர்தல் கருத்துக்கணிப்புகள் நடத்தவும் வெளியிடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT