Last Updated : 26 Mar, 2019 11:25 AM

 

Published : 26 Mar 2019 11:25 AM
Last Updated : 26 Mar 2019 11:25 AM

ஆங்கில​ம் அறிவோமே 256: உள்ளது உள்ளபடி!

கேட்டாரே ஒருகேள்வி

“Judgemental என்பது இரண்டு சொற்களின் இணைப்பா?”

இது ஆனாலும் ஓவர்குறும்பு. முதலில் ஒரு சிறு விளக்கம். நீதிபதி என்பவர் judge. ஆனால், judgment, judgmental ஆகிய சொற்களில் g என்ற எழுத்தைத் தொடர்ந்து e இடம்பெறுவதில்லை.

Judgmental என்றால் தீர்ப்பு தொடர்பானது என்று பொருள். நடைமுறையில் அது மிகைப்படுத்தப்பட்ட தீர்ப்புகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.

சில judgmental approaches எவை என்பது எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டால் மேலும் தெளிவாகிவிடும்.

‘’உயர் பதவிகளில் இருக்கும் பெண்கள் எல்லோரும் அகந்தையானவர்கள்; வட்டார மொழிகளில் பேசுபவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல; இன்ஜினீயர்களுக்குச் சரியாக உரையாடத் தெரியாது’’.

பிறரைப் புரிந்துகொண்டு அவர்களை அணுகுவது non-judgmental approach.

யாரையாவது நீங்கள் “ரொம்ப judgmental ஆக இருக்காதே’’ என்று கூறுவதற்கு முன் அவரைப் பற்றி நீங்கள் judgmental ஆக இருக்கிறீர்களா என்பதையும் யோசியுங்கள்.

******************

“Get your feet wet என்றால் என்ன பொருள்?”

புதிதாக ஒரு முயற்சியில் ஈடுபடுவது.

english-2jpg100 

“To call a spade a spade என்கிறார்களே, மண்வெட்டிக்கும் இதற்கும் என்ன தொடர்பு?” என்றுகேட்கிறார் ஒரு வாசகர்.

Spade என்றால் மண் வெட்டி. ஒரு மண்வெட்டியை அப்படித்தானே அழைக்க முடியும் என்கிறீர்களா? அதாவது பிறர் மனம் புண்படுமே என்பதற்காகவோ, பிறர் நம்மைக் கல்மனம் கொண்டவராக நினைத்து விடுவார்களே என்பதற்காகவோ ஒரு விஷயத்தை மறைத்துப் பேசாமல் உள்ளது உள்ளபடி பளிச்சென்று பேசிவிடுவதுதான் to call a spade a spade.

அப்படியே இருந்தாலும் கடப்பாரைக்கு இல்லாத முன்னுரிமை மண்வெட்டிக்கு ஏன்? சீட்டுக் கட்டாகவே எடுத்துக்கொண்டாலும் கிளாவருக்கு இல்லாத சிறப்பை ஸ்பேடுக்கு ஏன் தரவேண்டும்? இப்படிக் கேட்டால் வருத்தமான ஒரு பின்னணியைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் கறுப்பர் இன மக்களை ‘spade’ என்று அவமரியாதையாகக் குறிப்பிட்டதுண்டு. ‘ஒரு கறுப்பரைக் கறுப்பர் என்றுதானே சொல்ல முடியும்’ என்ற கிண்டலான பொருள் கொண்டதாக இது இருந்தது. ஆனால், காலப்போக்கில் அந்தக் கோணம் மாறிவிட்டது.

******************

“Tour என்றால் தெரிகிறது. Detour என்கிறார்களே அதற்கு என்ன பொருள்?”

பயணம் செய்கிறீர்கள். அப்போது ஒன்றைத் தவிர்க்க நினைக்கிறீர்கள். (அது நேரடிப் பாதையில் உண்டாகக் கூடிய போக்குவரத்து சிக்கலாக இருக்கலாம் அல்லது அந்த வழியில் போனால் ஒரு வேண்டாத அல்லது நீங்கள் கடன் வாங்கிய நண்பர் இருக்கலாம்). இதற்காகக் கொஞ்சம் சுற்றுப் பாதையாக இருந்தாலும் பரவாயில்லை என்று வேறொரு பாதையில் செல்கிறீர்கள். இதுதான் detour. When confronted with a hill, elephants prefer to take a detour along level ground, though the distance to be covered is longer.

கடந்த வாரம் ‘கேட்டாரே ஒரு கேள்வி’யில் விளக்கப்பட்ட TTR விரிவாக்கம் தொடர்பாக இரு வாசகர்கள் நமக்கு அளித்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கதாக இருக்கிறது. அது இதுதான். Travelling Ticket Examiner (Railways) அதாவது TTER என்பதுதான் TTR என்று மருவி இருக்க வேண்டும்.

 

தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x