Published : 09 Apr 2014 12:19 PM
Last Updated : 09 Apr 2014 12:19 PM
வாயில் ஸ்பூனை வைத்து, அதில் எலுமிச்சம்பழத்தை வைத்துக்கொண்டு நடக்கும் போட்டி நடைபெற்றது. கலந்து கொண்ட எல்லோரது பழங்களும் விழுந்துவிட, ஒருவர் மட்டும் பழம் கீழே விழுந்துவிடாமல் விறுவிறுவென்று நடந்து வந்துவிட்டார். முதல் பரிசை அவருக்கு அளித்துவிட்டு, ‘‘எப்படி எலுமிச்சம்பழம் விழாமல் இருந்தது?’’ என்று கேட்டார்கள். அவர் அதிர்ச்சியுடன், ‘‘என்ன.. எலுமிச்சம்பழம் வேறு வைத்திருந்தீர்களா? நான் கவனிக்கவில்லையே. ஸ்பூன் மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்தேன்’’ என்றார். அவர் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நிச்சயம் அவரது எலுமிச்சம்பழமும் விழுந்திருக்கும்.
எந்தச் செயலைச் செய்யும்போதும் விளைவுகளை எண்ணிப் பயந்தால் அந்தச் செயலை ஒழுங்காகச் செய்ய முடியாது.
தேர்வு எழுதும்போதும் அப்படியே. இத்தனை மதிப்பெண் வருமா, இந்தப் படிப்பு கிடைக்குமா என்றெல்லாம் நினைத்துக்கொண்டே இருந்தால் படிப்பில் மனம் முழு ஈடுபாடு கொள்ளாமல் எதிர்காலத்தை எண்ணிப் பதற்றப்பட்டுக் கொண்டிருக்கும்.
கல்வி என்பது நம் திறமைகளை வளர்க்கவும் நம்மைச் சுற்றி இருக்கும் உலகை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ளவும் உதவும் ஒரு விஷயம். அது பாட்டியிடம் கதை கேட்பதுபோல, கதைப் புத்தகம் படிப்பதுபோல, நண்பர்களுடன் அரட்டையடிப்பதுபோல சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். விடுகதைகள் போட்டு நம் திறமைகளை ஊக்குவிப்பதுபோல, நம்முடைய கவனிக்கும் திறனை, தர்க்கபூர்வமாக சிந்திக்கும் அறிவை வளர்க்கும் ஒரு சுயமுன்னேற்றப் பயிற்சியாக அது இருக்க வேண்டும்.
போட்டி என்று இல்லாமல் சும்மா மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தால் போரடிக்காதா? அதுபோலத்தான் தேர்வுகளும். தேர்வுகள் நம்மை நாமே தெரிந்துகொள்ள ஒரு வழிமுறையே தவிர, மற்றவர்களிடம் நம்மை நிரூபித்துக் காட்டியே தீரவேண்டிய ஒரு கட்டாயச் செயல் அல்ல.
ஆக, படிக்கும்போது ‘இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறேன், இதை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்’ என்று எண்ணிப் படிக்க வேண்டும். அல்லாமல் இந்தக் கேள்வி பரீட்சையில் வருமா, இதை சாய்ஸில் விட்டுவிடலாமா என்றெல்லாம் யோசிக்கக் கூடாது.
தேர்வு எழுதும்போதும் ‘இந்த பதிலை சூப்பராக எழுதுகிறேன் பார், இதற்கு அருமையாக ஒரு படம் போடப் போகிறேன் பார்’ என்று எழுதுங்கள். இதில் முழு மதிப்பெண் கிடைக்குமா கட் ஆஃப் கிடைக்குமா, என்றெல்லாம் எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. தேர்வுக்குச் செல்லும்போது ஒரு நல்ல விளை யாட்டுப் போட்டிக்குச் செல்வதுபோலச் செல்லவேண்டுமே தவிர, ஏதோ பயங்கர போருக்குச் செல்வதுபோலச் செல்லக் கூடாது. பரீட்சை அறையில் ‘பிட்’டுக்குத்தான் தடை.. புன்னகைக்கு அல்ல.
-மீண்டும் நாளை...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT