Published : 19 Mar 2019 11:35 AM
Last Updated : 19 Mar 2019 11:35 AM
பிரவீனுக்கு ஓர் ஆண்டுக்கு முன்பே அவருடைய மூத்த சகோதரரான குமார் பட்டப் படிப்பை முடித்துவிட்டார். இருந்தாலும், உடல் ஊனம் காரணமாக குமார் வேலை தேடச் சுணங்கி வீட்டிலேயே முடங்கிவிட்டார். பிரவீனோ படித்து முடித்தவுடன் வேலை தேடி ஒரு பணியில் சேர்ந்துவிட்டார். அலுவலகத்துக்குக் காலையில் புறப்படும்போது பிரவீனுக்கு இட்லி, தோசை, பூரி எனச் சிற்றுண்டி பரிமாறப்படும்போது வீட்டிலேயே இருக்கும் குமாருக்கோ முந்தைய தினம் மீந்துபோன பழையது பரிமாறப்பட்டது. இது குமாரை ஆழமாகக் காயப்படுத்தியது.
இதேபோன்று மாற்றுத் திறனாளிகள் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொது வெளியில் மட்டுமின்றித் தங்களுடைய வீடுகளிலும் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள். அதற்கு அவர்களும் ஒருவிதத்தில் காரணமாகிவிடுகிறார்கள். தங்களை யாரும் அனுதாபத்துடன் அணுக வேண்டாம். சக மனிதர்களாகப் பாவிக்க வேண்டும் என்று சொன்னாலும் எல்லோரும் தங்கள்மீது அனுதாபம் காட்ட, அதை எதிர்பார்த்தே அவர்கள் பழகிவிட்டார்கள். இதன் நீட்சியாகத்தான் படித்த பிறகும் பணிக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளாமல் தயங்கி நின்றுவிடுதல் என்பதும்.
அதிகாரப்படுத்தும் முயற்சி
இதுபோன்று அடிப்படைக் கல்வித் தகுதி இருந்தும் வெளியே வரத் தயங்கும் பார்வையற்றோர், செவித் திறன் குறைபாடுடையோர், உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் விளிம்புநிலைப் பெண்களுக்கும் செயல்பட்டுவருகிறது சென்னையில் உள்ள ‘சமர்த்தனம்’ தன்னார்வத் தொண்டு நிறுவனம். இங்கு வருவோருக்கு மூன்று மாதங்கள் உறைவிடத்துடன் கூடிய இலவசப் பயிலரங்கம் நடத்தப்பட்டு வேலைபெற்றுத் தரப்படுகிறது.
பெங்களூருவில் 1997-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது நாடு முழுவதும் 18 மையங்களை நிறுவியுள்ளது. உலகப் பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து இது செயலாற்றிவருகிறது. பார்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் சங்கத்தின் மூலம் கிரிக்கெட் பயிற்சி அளித்துவருகிறது. இங்கே பயிற்சிபெற்றவர்களில் பலர் இந்தியா சார்பாகப் பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்குக் கோப்பை பெற்றுத்தந்திருக்கிறார்கள்.
எங்கே இடர்பாடு?
“மாற்றுத் திறனாளிகளைக் கண்ணியமாக நடத்தும் போக்கில் முன்பைக் காட்டிலும் தற்போது முன்னேற்றம் காணப்படுகிறது. மறுபக்கத்தில், படித்திருந்தாலும் ஆங்கிலம் பேசும் திறன், கணினிப் பயன்பாட்டுத் திறன், பிறரோடு சகஜமாகப் பழகும் தன்னம்பிக்கை ஆகியவை மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. வேலை கிடைத்தாலும் பாகுபாட்டை எதிர்கொள்ளத் துணிவின்றித் துவண்டு வேலையைவிட்டு நின்றுவிடுகிறார்கள்.
இந்த நிலையை மாற்றவே ஆங்கில இலக்கணத்தைக் கற்பித்தல், பேச்சாற்றல் பயிற்சி, ‘வர்ட்’, ‘பவர் பாயண்ட்’, ‘எக்ஸல் ‘உள்ளிட்ட கணினிப் பயன்பாடுகளை விளக்குதல், ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை அளித்துவருகிறோம். பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு உணவு, உறைவிட வசதியுடன் மூன்று மாத காலம் இலவசமாக இதைச் செய்துவருகிறோம்.
பின்தங்கிய சூழலில் இருந்து வரும் 18 முதல் 30 வயதான பெண்களுக்கும் இவை அனைத்தையும் அளித்துவருகிறோம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு பயிற்சி அளிக்கப் பட்டவர்களுக்கு ஆசிரியர் பணி, கால் சென்டர், விற்பனைத் துறை, உற்பத்தித் துறை, சிறு குறு வியாபாரக் கடைசார்ந்த பணிகள் உள்ளிட்ட பலவிதமான வேலைவாய்ப்பைக் குறைந்தபட்சம் ரூ.10,000 சம்பளத்துடன் பெற்றுத் தருகிறோம்.
வேலையில் சேர்ந்த பிறகும் பணிச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைய இவர்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறோம். நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம்” என்கிறார் ‘சமர்த்தனம்’ மையத்தின் வேலைவாய்ப்பு அதிகாரியான அருண்குமார்.
‘சமர்த்தனம்’ மையத்தின் தனிச் சிறப்பு இங்கு உள்ள பார்வையற்றவர்களுக்கான பிரெயில் முறையிலான நூலகம். இங்கு அச்சுப் புத்தகங்களைக் காட்டிலும் பிரெயில் புத்தகங்களே அதிகம் காணப்படுகின்றன.
“பிளஸ் 2 முடித்த பார்வையற்றோர் கல்லூரிப் படிப்பை மேற்கொள்ளத் தேவையான 400-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளன. எங்கள் மையத்துக்கு அதிக எண்ணிக்கையில் பார்வையற்றோரே வந்து பயனடைகிறார்கள். பொதுவாகவே, பார்வையற்றோருக்குத் தொலைபேசி சேவை தொடர்பான பணிகள் கிடைத்துவிடும். ஆனால், அவர்களால் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதவோ கணினியில் தட்டச்சு செய்யவோ இயலாததால் உதவிக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்க நேர்ந்துவிடுகிறது.
இதனால், சக ஊழியர்களின் சலிப்பையும் எரிச்சலையும் சகித்துக்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை இவர்கள் அனுதினம் எதிர்கொள்ள வேண்டிவருகிறது. இதற்குத் தீர்வு காணும்விதமாக NVDA எனப்படும் பார்வையற்றோருக்கான மென்பொருளைக் கற்பித்து ‘டேட்டா எண்ட்ரி’, ‘டெலி காலிங்’ உள்ளிட்ட பணிகளுக்கு அவர்களை முழுவதுமாகத் தயார்படுத்துகிறோம்” என்கிறார் பார்வையற்றோருக்கான பயிற்சியாளரான விவேக்.
கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பரீதியாக மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்துவதன் மூலம் அனைவருக்குமானதாக இவ்வுலகை மாற்ற முயல்கிறது இந்நிறுவனம்.
தொடர்புக்கு: 8098540792
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT