Published : 02 Mar 2019 11:28 AM
Last Updated : 02 Mar 2019 11:28 AM

உண்ணும் கோளாறுகள்

உணவு உட்கொள்வதில் ஏற்படும் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிப்ரவரி 25 தொடங்கி மார்ச் 3 அன்று வரையுள்ள ஒரு வார காலம், உலகமெங்கும் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில் ஏழு கோடிப் பேர் இந்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு உட்கொள்வதில் ஏற்படும் கோளாறுகள் நமது நாட்டிலும் தற்போது அதிகரித்துவருகின்றன. இளம் வயதுப் பெண்கள் அனோரெக்சியா நெர்வோஸா, புலிமியா நெர்வோஸா ஆகிய கோளாறுகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அனோரெக்சியா நெர்வோஸா (பசியற்ற உளநோய்)

இவர்கள் தங்களது உடல் எடை சீராக இருக்க வேண்டுமெனச் சிரமம் எடுத்துக்கொள்வார்கள். சரியான எடையுடன் இருந்தாலும், தாங்கள் அதிக எடையுடன் இருப்பதாக எப்போதும் நினைப்பார்கள். அதிகமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு உடற்பயிற்சிகளை வேறு செய்துகொண்டிருப்பார்கள்.

போதிய உணவு சத்துக்கள் கிடைக்காத காரணத்தால், இவர்கள் எலும்பும் தோலுமாக இருப்பார்கள். பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். தோல் வறண்டுவிடும். எலும்புகளிலும் தேய்மானம் தொடங்கி, பல்வேறு பிரச்சினைகளையும் இது கொண்டு வந்துவிடும்.

புலிமியா நெர்வோஸா

இதனால் பெரிதும் பெண்கள்தாம் பாதிக்கப் படுவார்கள். எடையைக் குறைக்க வேண்டும். மிக ஒல்லியாக இருக்க வேண்டுமென இவர்கள் விரும்புவார்கள். இதற்காக உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பார்கள். சில வேளைகளில் குறைந்த நேரத்திற்குள் அதிக உணவைச் சாப்பிட்டு, பிறகு, தாங்களே வாய்க்குள் கையைவிட்டு, வாந்தி எடுப்பார்கள்.

இல்லை என்றால், பேதி மருந்துகளையோ நீரை அதிகம் வெளியேற்றும் மருந்துகளையோ உட்கொள்வார்கள். இதன் காரணமாக, இவர்கள் எடை குறைந்து ஆரோக்கியம் குன்றிக் காணப்படுவதுடன், நீர்ச்சத்து, தாது உப்புகளின் சத்துக்கள் குறைந்து காணப்படுவார்கள். டீன் ஏஜ் பெண்கள்தாம் மேற்கண்ட இரு பாதிப்புகளுக்கும் ஆட்படுகிறார்கள்.

மிகையாக உண்ணும் வழக்கம்

இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அளவுக்கு அதிகமான உணவைக் கட்டுப் பாடின்றி உட்கொண்டு விடுவார்கள். இதனால், உடல் பருமன் பாதிப்புக்கு ஆட்பட நேரிடுகிறது. பசி இல்லாதபோதுகூட இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.

பிக்கா (கோளாறு)

உணவு அல்லாத, உடலுக்குத் தேவையான சத்துக்கள் இல்லாதவற்றை இவர்கள் உண்பார்கள். களி மண், கற்கள், காகிதம், கூர்மையான பொருட்கள், சுண்ணாம்பு, முடி, ஐஸ், கண்ணாடி என எதை வேண்டுமானாலும் இவர்கள் உட்கொள்வார்கள். கர்ப்பிணிப் பெண்கள் சாம்பல் சாப்பிடுவதுகூட இந்த வகைதான். இவ்வகைக் கோளாறு, கர்ப்பமான பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் மனப்பாதிப்பு உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் ஏற்படுகிறது.

ரம்மினல் சீர்குலைவு (ரம்மினேஷன்)

இந்தக் கோளாறு உள்ளவர் களுக்கு உணவு உண்பதில் விருப்பமோ ஈடுபாடோ இருக்காது. உணவு உண்பதைத் தவிர்த்துவிடுவார்கள். சிறிது உட்கொண்டாலும் அதை வாந்தி எடுத்துவிடுவார்கள். குடல் பிரச்சினைகளாலும் உணவு எதிர்க்களித்து வாய்க்கு வந்துவிடும், அதை இவர்கள் துப்பிவிடுவார்கள்.அல்லது மீண்டும் சவைத்து உண்டு விடுவார்கள்.

உணவைத் தவிர்க்கும் கோளாறு

இவர்களுக்கு உணவு உண்பதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதுடன், நிறைய உணவு வகைகளைப் பிடிக்கவில்லை எனத் தவிர்ப்பார்கள். உணவின் நிறம் பிடிக்கவில்லை, மணம் பிடிக்கவில்லை, சுவை பிடிக்கவில்லை, செய்த விதம் பிடிக்கவில்லை எனக் குறை சொல்லித் தவிர்த்துவிடுவார்கள்.

மீன் சாப்பிட்டால் முள் தொண்டையில் குத்திவிடும், மாமிச உணவு சாப்பிட்டால் எலும்பு தொண்டையில் சிக்கிக்கொள்ளும் என்று பயப்படுவார்கள். இப்படிப் பல்வேறு உணவு வகைகளையும் தவிர்ப்பதால் இவர்களது உடல் சத்துக்களை இழந்து நலிவடையும்.

உண்டாகும் உடல்நலப் பாதிப்புகள்

  • - உடலின் நோய் எதிர்ப்பு்த்திறன் குறையும்.
  • பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆட்பட நேரிடும்.
  • வைட்டமின், தாது உப்புகள் குறைபாடு ஏற்படலாம்.
  • பதற்றம், பயம் அதிகரிக்கலாம்.
  • தற்கொலை முயற்சிகள் நடக்கலாம்.
  • இறப்புகூட சில நேரம் சம்பவிக்கலாம்.
  • சிலர் போதை மருந்துகளுக்கும் அடிமையாகலாம்.

எப்படித் தடுக்கலாம்?

  • தேவையற்ற அச்சத்தைத் தவிர்க்க வேண்டும்.
  • வளர்ச்சிக்கு ஏற்ற உணவை உட்கொண்டு உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.
  • உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • முறையான உணவுப் பழக்கவழக்கங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைகளை நிர்ப்பந்தம் செய்யக்கூடாது.
  • உணவு முறை வல்லு நரையும், ஊட்டச்சத்து நிபுணரை யும் ஆலோசிக்க வேண்டும்
  • மனக்கசப்பு, மன அழுத்தம், மனச்சோர்வு, ஆகிய வற்றைக் குறைக்க வேண்டும்.
  • மருத்துவ ஆலோசனையும், மனநல ஆலோசனையும் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x