Last Updated : 26 Mar, 2019 11:55 AM

 

Published : 26 Mar 2019 11:55 AM
Last Updated : 26 Mar 2019 11:55 AM

முதல் இந்தியத் தேர்தலின் கதை!

இந்தியாவில் பதினேழாவது மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. 1951 - 52-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 67 ஆண்டுகளில் 17-வது பொதுத் தேர்தலில் வந்து நிற்கிறோம். இந்தத் தருணத்தில் மக்களவைத் தேர்தலின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது நாட்டின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு பொறுப்பேற்றார். பிரதமராக நேரு பொறுப்பேற்றிருந்தாலும், இடைக்காலத்துக்கு நிறுவப்பட்ட  அமைச்சரவைக்குத் தலைவராகவே இருந்தார்.

இந்தக் காலத்தில் பிரிட்டிஷ் சட்டங்களே இந்தியாவில் பின்பற்றப்பட்டன. 1950 ஜனவரி 26-ல் இந்தியா குடியரசு நாடாக மாறியது. இந்தியாவுக்கென உருவாக்கப் பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதல் பொதுத் தேர்தல் அதன் பிறகே நடத்தப்பட்டது.

68 கட்டங்கள்; பல நாட்கள்

நாடு விடுதலை அடைந்த பிறகு, முதல் மக்களவைத் தேர்தலை 1951-52-ல் நாடு எதிர்கொண்டது. மிகப் பெரும் சவால்கள் நிலவிய அந்தக் காலகட்டத்தில் 68 கட்டங்களாக இந்தியாவில் முதல் தேர்தல் நடைபெற்றது. 1951 அக்டோபர் 25-ல் இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்கிய முதல் கட்டத் தேர்தல், 1952 பிப்ரவரி 21-ல் உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்டமாக நிறைவு பெற்றது. இந்தியாவில் மிக அதிக நாட்கள் நீண்ட தேர்தல் இதுதான்.

இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற சுகுமார் சென், முன்அனுபவம் ஏதுமின்றி வெற்றி கரமாகத் தேர்தலை நடத்திக் காட்டினார். முதல் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பு மிகப் பெரிய சவாலை இந்தியத் தேர்தல் ஆணையம் சந்திக்க வேண்டியிருந்தது.

சுதந்திரத்துக்கு முன்பும் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு தேர்தலை நடத்தியிருந்தாலும், அப்போது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. மேலும், பிரிட்டிஷ் சட்டத்தின்படியே தேர்தல்கள் நடத்தப் பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில்தான் 1951-ல் முதல் தேர்தலை இந்தியா எதிர்கொண்டது.

முதலில் தேர்தலில் வாக்குரிமை வயதை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 21 வயது நிரம்பிய எல்லோருக்கும் வாக்குரிமை என 1950-ல் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்கள், கிராமங்கள் எதுவும் வளர்ச்சியடையாமல் இருந்தன.

எழுத்தறிவு சதவீதமும் குறைவாக இருந்தது. அப்போது 15 சதவீதத்தினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்கிறது புள்ளிவிவரம். எனவே, தேர்தலைப் பற்றியும் வாக்குரிமை பற்றியும் பாமர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இருந்தது.

இரட்டை உறுப்பினர் முறை

இப்போது இருப்பதுபோல முதல் தேர்தலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளும் இருந்திருக்கவில்லை. அப்போது 489 தொகுதிகள் மட்டுமே இருந்தன. முதல் மக்களவைத் தேர்தலில்  தனித் தொகுதிகளுக்கு வேறொரு நடைமுறை பின்பற்றப்பட்டது. 489 தொகுதிகளில் தலித்துகள், பழங்குடிகளுக்கு 94 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித் அல்லது பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் பின்பற்றப்பட்டன. அதாவது, ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித் அல்லது பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது.

இவர்களுக்கான ஓட்டுகளை தலித்துகள், பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே அளிப்பார்கள். இப்படி சில தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 84 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 489 மக்களவைத் தொகுதிகளிலும் 1,849 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். நாடு முழுவதும் 17.3 கோடிப் பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். ஆனால், தேர்தலில் 45 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின.

முதல் மக்களவைத் தேர்தலில் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இந்தியத் தேசிய காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. எஸ்.ஏ. டாங்கே தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x