Published : 05 Mar 2019 12:00 PM
Last Updated : 05 Mar 2019 12:00 PM
சர்வதேச மகளிர் தினத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. பல அடிப்படை உரிமைகளுக்காகப் பெண்கள் மேற்கொண்ட போராட்டத்தின் வரலாறு அது.
பெண்களின் பிரச்சினைகள், அவர்களது போராட்டங்கள், அந்தப் போராட்டங்கள் மூலம் அவர்கள் பெற்றிருக்கும் உரிமைகள், ஆண்:பெண் சமத்துவ சமூகத்தை அடைவதற்குக் கடக்க வேண்டிய பாதையில் உள்ள சவால்கள் ஆகியவற்றை அறிவதற்கான நூல்களைப் படிப்பதன் மூலம் மகளிர் தினத்தை இன்னும் பொருள்மிக்க வகையில் கொண்டாட முடியும்.
அதற்கு உதவும் வகையில் பெண்ணிய எழுத்தாளர்களும் செயற்பாட்டாளர்களும் வாழ்வில் பெரும் சவால்களை எதிர்கொண்ட பெண்களும் எழுதிய முக்கிய இந்திய நூல்களின் தொகுப்பு:
Seeing Like a Feminist | நிவேதிதா மேனன், வெளியீடு: ஸுபான்
தாய்வழிச் சமூகம் தழைத்தோங்கிய கேரளத்தைச் சேர்ந்தவரான நிவேதிதா மேனன், பெண்ணியம் என்பது படிப்படியாகச் சமூகத்தை மாற்றியமைப்பதுதானே தவிர தந்தைவழிச் சமூகத்தை வீழ்த்தி இறுதி வெற்றி கொள்வதல்ல என்பதை இந்த நூலில் விளக்கியுள்ளார். சாதி, மதம் போன்றவற்றால் இந்தியாவில் பெண்ணியம் எதிர்கொள்ளும் தனித்தன்மை கொண்ட சவால்களையும் அலசியுள்ளார். ஆண்களை வெறுப்பதுதான் பெண்ணியம் என்ற தவறான பார்வை பரவலாகிவரும் சூழலில், பெண்ணியம் பற்றிய அடிப்படைப் புரிதலைப் பெற இந்த நூல் உதவும்.
Patriarchy | வ.கீதா, வெளியீடு: ஸ்த்ரீ
தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணியச் செயற்பாட்டாளரும் வரலாற்று ஆய்வாளருமான வ.கீதா எழுதிய இந்நூல் தந்தைவழிச் சமூகத்தின் தோற்றம், இயல்பு ஆகியவற்றை விளக்குகிறது. தந்தைவழிச் சமூகங்களை ஊட்டி வளர்த்த வரலாற்றுச் சூழல்களை விவரிக்கிறது. இந்தக் கருத்துகளை இந்திய வரலாற்றுடன் பொருத்தி, இந்தியாவில் சாதிச் சமூகம் எப்படித் தந்தைவழிச் சமூகத்துடன் கைகோத்துச் செல்கிறது என்பதையும் அலசுகிறது.
Understanding Gender | கமலா பாசின், வெளியீடு: காளி ஃபார் விமன்
பெண்ணியச் செயற்பாட்டாளரும் சமூக அறிவியலாளருமான கமலா பாசின் எழுதிய இந்த நூல் பெண்ணிய உரையாடலில் பாலினச் சமத்துவம் என்ற கருத்தாக்கத்தின் முக்கியத் துவத்தை அலசுகிறது. மதம், சாதி, வர்க்கம் ஆகியவை பாலினங்களுக்கு இடையிலான உறவுகளை எப்படிப் பாதிக்கின்றன என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.
The History of Doing, | எஸ்.ராதா குமார், வெளியீடு: ஸுபான்
1800 முதல் 1990 வரை நாட்டு விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியாவில் உருவான மகளிர் இயக்கங்களைப் பற்றிய நூல். சமூக சீர்திருத்தக் காலகட்டத்தின் தொடக்கத்தில் பெண்களின் பிரச்சினைகள் ஆண்களால் பேசப்பட்ட பிறகு, தேசிய இயக்கத்தில் பெண்கள் பங்கேற்கத் தொடங்கினார்கள். அதன்பிறகு பெண்களே தமது பிரச்சினைகளைப் பேசத் தொடங்கினார்கள், தொடர்ச்சியாக மகளிர் இயக்கங்களும் எப்படி உருவாயின என்பது தொடர்பான வரலாற்றை அலசும் நூல்.
The Other Side of Silence | ஊர்வசி புட்டாலியா, வெளியீடு: பென்குவின் புக்ஸ்
பெண்ணியச் செயற்பாட்டாளரும் பதிப்பாளருமாக பல முக்கிய பெண்ணிய நூல்களை வெளியிட்டவருமான ஊர்வசி புட்டாலியா எழுதியவற்றில் பரவலாகக் கவனம் பெற்ற நூல். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இருபுறங்களிலும் கட்டவிழ்க்கப்பட்ட கொடூர வன்முறையால் பாதிக்கப்பட்ட 70 பேரின் நேர்காணல்களைக் கொண்டது. பிரிவினையின்போது 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். இது போன்ற வரலாற்றுத் துன்பியல் நிகழ்வுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை, ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுவதை இந்த நூல் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளது.
Gendering Caste Through a Feminist Lens | உமா சக்கரவர்த்தி, வெளியீடு: ஸ்த்ரீ
வரலாற்று ஆய்வாளரும் பெண்ணியவாதியு மான உமா சக்கரவர்த்தி எழுதிய இந்நூல் பாலினத்துக்கும் சாதிக்கும் இடையே உள்ள உறவை விரிவாக ஆராய்கிறது. சாதிய அடுக்கைத் தக்கவைக்க பெண்களை அடிமைப் படுத்துவதும் அவர்களது பாலியல் விழைவுகளைக் கட்டுப்படுத்துவதும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது.
Writing Caste / Writing Gender | ஷர்மிளா ரெகே,வெளியீடு: ஸுபான்
சமூகவியலாளரும் பெண்ணியவாதியுமான ஷர்மிளா ரெகே எழுதிய இந்நூல், 20-ம் நூற்றாண்டில் இந்தியாவில் பெண்ணியத்தின் எழுச்சி குறித்த கற்பிதங்களை உடைக்கும் முயற்சி எனலாம். மகளிர் இயக்கங்களில் சாதியின் ஊடுருவலை இந்நூல் கேள்விக்கு உட்படுத்துகிறது. ஊர்மிளா பவார், சாந்தாபாய் காம்ப்ளே உள்ளிட்ட எட்டு தலித் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகள், வாழ்க்கைக் கதைகள், அனுபவங்களை உள்ளடக்கிய இந்நூல் தலித் பெண்ணியம் எப்போதும் தீவிரமாக இயங்கி வந்திருப்பதை உறுதிசெய்கிறது.
My Story | கமலா தாஸ் | வெளியீடு: ஸ்டெர்லிங் பப்ளிஷர்ஸ்
கேரளத்தைச் சேர்ந்த கவிஞர் கமலா தாஸ் மலையாளத்தில் எழுதிய சுயசரிதையின் ஆங்கில வடிவம். கணவனுடனான சிக்கல் நிறைந்த உறவு, திருமணத்தைத் தாண்டிய உறவுகள், தனது பாலியல் தன்மை, தான் எழுத்தாளரான விதம் உள்ளிட்டவற்றை நேர்மையாக அவர் பதிவுசெய்துள்ள இந்த நூல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரம் இந்தியாவில் மிக அதிக விற்பனையான பெண் சுயசரிதை என்று புகழப்படும் இந்நூல், ‘என் கதை’ என்ற தலைப்பில் (வெளியீடு: காலச்சுவடு) தமிழிலும் வெளியாகியுள்ளது.
The Weave of my life (Aaydaan) | ஊர்மிளா பவார், வெளியீடு: கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ்
பெண்ணுரிமைச் செயற்பாட்டாளரும் தலித் இலக்கிய ஆளுமையுமான ஊர்மிளா பவாரின் சுயசரிதை. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அவர் தலித்தாக மட்டுமல்லாமல் தலித் பெண்ணாகத் தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்கொண்டவர். அவரும் அவருடைய குடும்பத்தினரும் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பெளதத்தைத் தழுவினார்கள். தலித் உரிமைகளுக்கான போராட்டங்களை ஊர்மிளா முன்னெடுத்தார். மராத்தியில் அவர் எழுதிய சுயசரிதை மாயா பண்டிட்டால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
A Life Less Ordinary | பேபி ஹால்டர், வெளியீடு: ஸுபான்
பேபி ஹால்டர் 12 வயதில் திருமணம் ஆகி, 14 வயதில் முதல் குழந்தையைப் பெற்றார். அந்தச் சிறுவயதில் குடும்பச் சுமையின் அழுத்தங்களோடு கணவரின் வன்முறையையும் எதிர்கொண்டார். பின்னர் கணவரைத் துறந்து டெல்லிக்குச் சென்று வீட்டு வேலைசெய்து சுயசார்புடன் வாழத் தொடங்கினார். வங்க மொழியில் அவர் எழுதிய சுயசரிதை, இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையில் சாதனை படைத்தது. பெண்ணியச் செயற்பாட்டாளர் ஊர்வசி புட்டாலியா இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். துணிவும் மன உறுதியும் இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் தாக்குப்பிடித்து வாழ முடியும் என்ற உத்வேகத்தை அளிக்கும் இந்த நூல் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT