Published : 08 Sep 2014 03:01 PM
Last Updated : 08 Sep 2014 03:01 PM
“ஒரு ஆங்கில இதழில் “Dutch courage” என்ற வார்த்தையைப் படித்தேன். Dutch மக்கள் என்ன அவ்வளவு வீரம் படைத்தவர்களா?’’ என்று கேட்கிறார் ஒரு வாசகர்.
ஆங்கிலேயக் குறும்பு
ஹாலந்து அல்லது நெதர்லாந்து நாட்டு மக்களை the Dutch என்று குறிப்பிடுவார்கள்.
உலகின் மிகச் சிறந்த கடற்புற சக்தி (Maritime power) யார் என்பதில் பிரிட்டனும், நெதர்லாந்தும் ஒரு காலத்தில் போட்டியிட்டன. இந்தக் காலகட்டத்தில் தன் எதிரியை அவமானப்படுத்தும் விதத்தில் இங்கிலாந்து பல ஆங்கிலச் சொற்றொடர்களை உருவாக்கியது.
Dutch Auction எனறால் அந்த ஏலத்தில் தொகை குறைந்து கொண்டே வரும். Dutch Widow என்பது பாலியல் தொழிலாளியைக் குறிக்கும். Dutch concert என்றால் அந்த நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஆளாளுக்குத் தனக்குத் தோன்றியதை இசைக்கிறார்கள் என்று பொருள்.
Dutch Comfort என்றால் ‘’உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்பது போல ஆறுதல் அடைதல் (அதாவது டச்சுக்காரர்கள் ‘உனக்கும் கீழே உள்ளவர்கள்’).
Dutch Metal என்றால் தங்கத்துக்குப் பதிலான ஆனால் கொஞ்சம் தரம் குறைந்த மாற்று உலோகம். Dutch treat என்றால் நாலைந்து பேர் சேர்ந்து சாப்பிட்டாலும் அவரவர் உணவுக்கு அவரவர் பணம் கொடுப்பது.
இன்னும் Dutch courage-ஐத் தொடவில்லையே என்கிறீர்களா?
குடித்துவிட்டு ரொம்ப வீரமானவர்கள் போல் உதார் விடுவார்கள் இல்லையா? அதுதான் Dutch courage. இத்தகைய சொற்கள் பயன்பாடு என்பது ஆங்கிலேயர்களில் ஒரு பகுதியினரிடம் வெளிப்பட்ட கிண்டலின் வெளிப்பாடு.
நாட்டுக்கு நாடு கிண்டல்
இதையெல்லாம் படித்து விட்டு ஆங்கிலேயர்களை நினைத்து உங்கள் பற்களை நறநறத்துவிட்டுப் பல் மருத்துவரிடம் செல்வது உங்கள் இஷ்டம். ஆனால் டச்சுக்காரர்களை நினைத்து குடம் குடமாகக் கண்ணீர் விட வேண்டாம். அவர்களுக்கு பெல்ஜியக்காரர்கள் என்றால் அவ்வளவு இளப்பம். விதவிதமாகக் கிண்டலடிப்பார்கள்.
BARRACK - BARACK
“Barracks என்ற வார்த்தையைப் படித்தேன். அதன் பொருள் என்ன?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். Barrack என்ற வார்த்தை பொதுவாகப் பன்மையில் பயன்படுத்தப்படுகிறது. BARRACK என்றால் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் ஒரு கட்டிடம்.
ஆனால் அமெரிக்க அதிபரின் பெயரில் உள்ளது ஒரு R குறைந்தது - BARAK (OBAMA). இந்த வார்த்தை BARACK என்பதன் திரிபு. ஆப்ரிக்க மொழியில் BARACK என்றால் ஆசீர்வதிக்கப்பட்ட என்று அர்த்தம்.
MINT STREET
“சென்னையில் உள்ள ஒரு பகுதியை MINT என்கிறார்களே. அங்கு ஒரு காலத்தில் புதினா மிக அதிகம் விளைந்ததோ?’’ என்று கேட்டிருக்கிறார் மற்றொரு வாசகர். பொது அறிவுக் கேள்வி போலத் தோன்றினாலும், அறிவோம் ஆங்கிலம் பகுதிக்கு நேரடித் தொடர்பு உள்ள ஒரு கேள்வியாகவும் இது அமைந்திருக்கிறது.
MINT என்பது புதினாவை மட்டுமல்ல, நாணயங்கள் அச்சடிக்கும் இடத்தையும் குறிக்கும். சென்னையில் உள்ள MINT பகுதியை தங்கச்சாலை என்று கூறுவார்கள். (இப்போது இந்தப் பகுதி வள்ளலார் நகர் என்று பெயர் மாற்றம் பெற்றுவிட்டது). சென்னையில் உள்ள MINT பகுதியில்தான் முன்பு அரசாங்கம் நாணயங்களை அச்சிட்டுவந்தது.
தமிழகத்திலேயே மிக நீளமான தெரு (சாலை அல்ல) MINT STREETதான் என்று ஒரு இதழில் படித்த ஞாபகம். யாராவது இது உண்மையா, அளப்பா என்பதை அளந்து பார்த்துவிட்டு சொல்வீர்களாக!
Assume – Presume
இரண்டும் ஒன்று போல இருந்தாலும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. ஒன்றை assume செய்து கொள்கிறீர்கள் என்றால் அதை உண்மை என்று நினைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அப்படி நினைத்துக் கொள்கிறீர்கள். She assumed that she was alone. But there was a killer in her room.
Presume என்றால் வேறு மாறுபட்ட ஆதாரங்கள் இல்லாததால் ஒன்றை உண்மையாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைப்பது. “இன்னக்கி ராத்திரி உங்க நண்பர் சாப்பிட வரேன்னு சொல்லியிருக்கார்’’ என்று உங்கள் வீட்டு பணியாளர் சொல்கிறார். பிரேம்குமார் என்ற நண்பர்தான் அப்படி உரிமை எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளவர் என்று வைத்துக்கொள்வோம். அப்போது “I presume it is Premkumar” என்று நீங்கள்
கூறக் கூடும். அல்லது “Premkumar I presume?” என்று கூறலாம்.
இதை மேலும் புரிந்துகொள்ள இன்னொரு உதாரணம்:
காலை ஐந்து மணிக்குக் கதவு தட்டப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரர் அதிகப்படி உரிமைகளை எடுத்துக் கொள்பவர். ஆனால் அவர் விடியற்காலையில் கதவைத் தட்டியதில்லை. இந்த
நிலையில் நீங்கள் கதவைத் தட்டுபவர் பக்கத்து வீட்டுக்காரர் என நினைத்தால் அது ASSUMPTION.
இதற்கு முன்பு சில நாட்கள் விடியற்காலையில் பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் தட்டியிருக்கிறார். இந்த நிலையில் அன்று காலை ஐந்து மணிக்குக் கதவு தட்டப்படும்போது, அது பக்கத்து வீட்டுக்காரர் என நீங்கள் நினைத்தால் அது PRESUMPTION.
சில சமயம் அதிகப் படியான உரிமைகள் எடுத்துக்கொள்வதைக்கூட Presume என்று கூறுவதுண்டு. இதன் adjective வடிவம் presumptuous.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT