Published : 01 Jan 2019 11:29 AM
Last Updated : 01 Jan 2019 11:29 AM
டிசம்பர் 22: பொருட்கள், சேவை வரி (ஜிஎஸ்டி) குழு, 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டியைக் குறைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. தொலைக்காட்சிகள், மானிட்டர் திரைகள், பவர் பேங்க், சினிமா டிச்கெட், டிஜிட்டல் கேமரா போன்றவற்றின் வரிகளை ஜிஎஸ்டி குழு குறைத்திருக்கிறது. இந்தப் புதிய வரி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வரும்.
புருண்டியின் புதிய தலைநகரம்
டிசம்பர் 22: புருண்டி நாட்டின் புதிய அரசியல் தலைநகரமாக கிதேகா நகரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை, நாட்டின் தலைநகரமாக இருந்த புஜும்புரா, இனி நாட்டின் பொருளாதார மையமாக மட்டுமே செயல்படும் என்று அந்நாட்டின் அரசு தெரிவித்திருக்கிறது.
டிசம்பர் 23: நாட்டின் முதல் இசை அருங்காட்சியகம் மத்திய அரசின் உதவியுடன் திருவையாற்றில் அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டின் கலாச்சார, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார். கர்நாடக இசையைச் சிறப்பிக்கும் விதமாக இந்த அருங்காட்சியம் தியாகராஜ சுவாமிகளின் பிறப்பிடத்தில் அமைக்கப்படவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
நீக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு
டிசம்பர் 27: தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தில் சென்ற கல்வியாண்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத, வெறும் தேர்ச்சிக்கான மதிப்பெண் மட்டும் பெற்ற 28, 167 மாணவர்களைத் தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பியிருக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம், நீக்கப்பட்ட மாணவர்களைப் பள்ளியின் சார்பில் வழக்கமான தேர்வர்களாகவே பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5000 மாணவர்களும் பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாதக் காரணத்துக்காக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
100 ரூபாய் நாணயம் வெளியீடு
டிசம்பர் 24: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியின் நினைவாக அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். வாஜ்பேயியின் 94-வது பிறந்த நாளைக் (டிசம்பர் 25) கொண்டாடும் விதமாக இந்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.
போகிபீல் பாலம் திறப்பு
டிசம்பர் 25 : அசாம், அருணாசலப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் ஈரடுக்கு போகிபீல் ரயில் - சாலை பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். 4.9 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் - சாலை பாலம், அசாமின் பிரம்மபுத்ரா நதியின் தெற்குக் கரையில் இருக்கும் திப்ருகர் மாவட்டத்தையும் அருணாசலப் பிரதேசத்தின் தேமாஜி மாவட்டத்தையும் இணைக்கிறது. ரூ. 5,900 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம், ஆசியாவின் இரண்டாவது மிக நீளமான ரயில் -சாலை பாலமாகும். மூன்று வழி சாலையாகவும் இரண்டு வழி ரயில் பாதையாகவும் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவுக்குப் புதிய உயர் நீதிமன்றம்
டிசம்பர் 26 : ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் புதிய உயர் நீதிமன்றம் அமராவதி நகரத்தில் 2019 ஜனவரி 1 முதல் செயல்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அரசாணையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் புதிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சகாரி பிரவீன் குமாரை டிசம்பர் 27 அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இது நாட்டின் 25-வது உயர் நீதிமன்றம்.
பள்ளிச் சேர்க்கைக்கு ஆதார் அவசியமில்லை
டிசம்பர் 26: பள்ளிச் சேர்க்கைக்கு ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை என்று யுஐடிஏஐ தலைமைச் செயலதிகாரி அஜய் பூஷண் பாண்டே தெரிவித்திருக்கிறார். ஆதார் அட்டை இல்லை என்பதைக் காரணம் காட்டி எந்தக் குழந்தைக்கும் சேர்க்கை வழங்க முடியாது என்று பள்ளிகள் தெரிவிக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார். ஆதார் அட்டையைப் பள்ளிச் சேர்க்கைக்குக் கட்டாயமாக்குவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
12-ம் வகுப்பு: பொதுத்தேர்வு நேரம் குறைப்பு
டிசம்பர் 27: பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், மொழிப் பாடங்கள் தவிர்த்து மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தி ருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வின் மொத்த மதிப்பெண் 1200-லிருந்து 600 –ஆகக் குறைக்கப்பட்டதால், வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வில் மொழிப்பாடங்கள் தவிர்த்து மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, மொழிப் பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10.00 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.45 மணிக்கு நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முத்தலாக் மசோதா நிறைவேற்றம்
டிசம்பர் 27: முத்தலாக் மசோதா – 2018, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இஸ்லாமிய வழக்கமான முத்தலாக் விவாகரத்தைச் சட்டவிரோதமாக அறிவிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. 245 ஆதரவு வாக்குகளும் 11 எதிர் வாக்குகளும் பெற்று இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள், இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT