Last Updated : 11 Dec, 2018 11:10 AM

 

Published : 11 Dec 2018 11:10 AM
Last Updated : 11 Dec 2018 11:10 AM

சேதி தெரியுமா: மேகேதாட்டு அணைக்கு எதிராகத் தீர்மானம்

கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை எதிர்த்துத் தமிழ்நாட்டின் சிறப்புச் சட்டப் பேரவைக் கூட்டத்தில் டிசம்பர் 6 அன்று ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தில், மத்திய நீர் ஆணையம் கர்நாடக அரசுக்கு வழங்கியிருக்கும் அனுமதியை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

புதுச்சேரி: எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியால் நியமிக்கப்பட்ட மூன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 6 அன்று தீர்ப்பளித்தது. துணைநிலை ஆளுநருக்குச் சட்டமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை ஆலோசிக்காமல் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களைத் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நியமித்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

பாபர் மசூதியின் கீழ் கோயில் இல்லை

1992 டிசம்பர் 6 அன்று இந்து அடிப்படைவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் ஆகின்றன. 2003-ம் ஆண்டு இந்தியத் தொல்பொருள் ஆய்வகம் (ASI) வெளியிட்ட அகழ்வாராய்ச்சி முடிவில், பாபர் மசூதியின் கீழ் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருந்ததாகத் தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த அகழ்வராய்ச்சியை மேற்பார்வை செய்த இரண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுப்ரியா வர்மாவும், ஜெயா மேனனும் இந்த முடிவுகள் தவறானவை என்று டிசம்பர் 5 அன்று ஹஃப் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்கள். பாபர் மசூதியின் கீழ் பழைய மசூதிகளின் கட்டிடங்கள் மட்டுமே இருந்தாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

நெல் ஜெயராமன் மறைவு

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெத்த நெல் ஜெயராமன் சென்னையில் டிசம்பர் 6 அன்று காலமானார். அவருக்கு வயது 54. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இயற்கை விவசாயியான அவர், 170 நெல் வகைகளை மீட்டெடுத்திருந்தார்.

அதிகனமான செயற்கைக்கோள்: ஜிசாட்-11 வெற்றி

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-11 (பெரிய பறவை என்றும் அழைக்கப்படுகிறது)  ஏரியன் 5 ஏவுகணை மூலம் பிரெஞ்சு கயானாவிலிருந்து டிசம்பர் 5 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 5,854 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள் இதுவரை இந்தியா விண்ணுக்கு அனுப்பிய செயற்கைக்கோள்களிலேயே அதிக எடையைக் கொண்டது.  நாட்டில் அதிவேக இணையதளச் சேவைகளைப் பெறுவதற்கு இந்தச் செயற்கைக்கோள் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்தது.

காற்று மாசு: 12.4 லட்சம் மரணங்கள்

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 2017-ம் ஆண்டில் 12.4 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக டிசம்பர் 6 அன்று வெளியான லான்செட் மருத்துவ இதழின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடக்கும் எட்டில் ஒரு மரணம் காற்று மாசுபாடு காரணமாக நடப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகின் 18 சதவீத மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் இந்தியாவில் காற்று மாசு காரணமாக 26 சதவீத மரணங்கள் நடப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்கள்

உலக அளவில் 2019-2035-ம் ஆண்டுகளுக்குள் வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் டிசம்பர் 6 அன்று வெளியிட்டது. இதில் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் உலகின் 20 நகரங்களில் 17 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத், ஆக்ரா, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், திருப்பூர், ராஜ்கோட், திருச்சி, சென்னை, விஜயவாட ஆகிய இந்திய நகரங்கள் இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்திருக்கின்றன.

கேரளாவுக்கு ரூ. 3,048 கோடி நிதி

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக் குழு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ. 3,048 கோடியைக் கூடுதல் நிதியாக டிசம்பர் 6 அன்று வழங்கியது. அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாகாலாந்துக்கு ரூ. 131.6 கோடியும், தித்லி புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவுக்கு ரூ. 539.52 கோடியும் வழங்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
 

sahityajpgright

சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு

2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் டிசம்பர் 5 அன்று அறிவிக்கப்பட்டன. நாட்டின் 24 மொழிகளில் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஏழு கவிதை நூல்களுக்கும் ஆறு நாவல்களுக்கும் ஆறு சிறுகதைகளுக்கும் மூன்று இலக்கிய விமர்சனங்களுக்கும் இரண்டு கட்டுரைகளுக்கும் சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. தமிழில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் ‘சஞ்சாரம்’ நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கரியமில வாயு: அதிகமாக உமிழும் நாடுகள்

உலக அளவில் கரியமில வாயுவை அதிகமாக உமிழும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக டிசம்பர் 5 அன்று வெளியான ‘குளோபல் கார்பன் புராஜக்ட் 2017’ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலகில் 58 சதவீதக் கரியமில வாயுவை சீனா (27%), அமெரிக்கா (15%), ஐரோப்பிய ஒன்றியம் (10 %), இந்தியா (7%) ஆகிய நான்கு நாடுகள் உமிழ்வதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x