Published : 25 Aug 2014 12:00 AM
Last Updated : 25 Aug 2014 12:00 AM

உங்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் சர்வ வல்லமை பெற்றவர் நீங்கள் தான்

ஒரு வாசகர் நான் மேலதிகாரிகள் பற்றி எழுதியதைப் பாராட்டி எழுதி இருந்தார். மேலதிகாரிகளால் அவர் வாழ்க்கையில் நடந்த பாதிப்புகள் பற்றி மின்னஞ்சலில் பட்டியலும் இட்டிருந்தார். இதனால் பல உடல் உபாதைகளில் அவதிப்படுவதாகவும், இதிலிருந்து மீள என்ன வழி என்றும் கேட்டிருந்தார்.

கடித வழி உளவியல் ஆலோசனையில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், அவர் சுகமடைய சுருக்கமாக ஏதாவது எழுத நினைத்தேன்.

மறதி மருந்து

“உங்களைக் காயப்படுத்தியவர்களை மன்னித்து அவர்களை உங்கள் மனதிலிருந்து வெளியேற்றுங்கள். மறதிதான் சிறந்த மருந்து. அப்போதுதான் புதியவர்கள் உங்கள் மனதுக்குள் நுழைவார்கள். நல்ல அனுபவங்கள் தருவார்கள்!” என்று இத்தகையவர்களுக்கு நாம் சொல்லலாம்.

வேலையில் சிக்கல் உள்ள அனைவருக்கும் சிலர் மீது உள்ள கசப்பான உணர்ச்சிகள்தான் மேலோங்கி நிற்கின்றன. அவை அந்த வேலையின் மற்ற நல்ல நினைவுகளைத் தலை தூக்கவிடாமல் செய்கின்றன. அதனால் ஒரு ஒட்டுமொத்த எதிர்மறை எண்ணம்தான் உருவாகிறது.

வேலையில் மட்டுமா இது நடக்கிறது?

ரயிலில் கேட்டது இது: “நம்ம கல்யாணத்தன்னைக்கே பிரச்சினை பண்ணியவன் இல்ல உன் தம்பி! மறு வீட்டுக்கு வரவே இல்லையே. அதெல்லாம் மறந்துடுமா?” என்று ஒரு ஆக்ரோஷமான குரல். எட்டிப் பார்த்தால் மனிதருக்கு எண்பது வயதிருக்கும். பழுத்த பழமான அந்த அம்மாள் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்!

ஒரு அம்பது வருட காயத்தைக் கீறிக் கீறிப் புதிய ரணமாகவே வைத்திருக்கும் குரோதம் அவர் கண்களில் தெரிந்தது.

சண்டையில்தான் சரித்திர நிகழ்வுகள் சரியாக நினைவுக்கு வரும். எல்லா நல்ல விஷயங்களும் பின்னுக்குத் தள்ளப்படும். எடுத்த விவாதத்திற்குச் சாதகமான அனைத்தும் தெளிவாகக் கண் முன் நிற்கும்.

“எங்கப்பா தான் இந்த வேலையில் தள்ளிட்டார்.”

“அந்த ஆள் மட்டும் டிரான்ஸ்பர் பண்ணாம இருந்தா அங்கயே பெரிய ஆளா இருந்திருப்பேன்”

“என் மனைவி ஃபாரின் போகணும்னு பிடிவாதமா இருந்தாள். அதனால்தான் அங்க போய் மாட்டினேன்.”

“சம்பளத்தைக் குறைச்சு ஃபிக்ஸ் பண்ணி என் எதிர்காலத்தையே நாசம் பண்ணிட்டார்.”

இப்படிச் சில மனிதர்கள்தான் நம் வேலையையும் வாழ்க்கை யையும் கெடுத்துவிட்டார்கள் எனத் திடமாக நம்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். தன் வாழ்க்கையின் அத்தனை துயரங்களுக்கும் இவர்கள் தான் காரணகர்த்தாக்கள் என்ற கற்பிதத்தோடே இவர்கள் வாழ்கிறார்கள்.

தங்களின் திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டும் எதிராளியின் பராக்கிரமத்தை அதிகப்படுத்தியும் இவர்கள் ஆடும் விளையாட்டு சுய பரிதாபத்தில்தான் முடியும்.

ஒரே ஒரு ஆள்தான் உங்கள் வாழ்க்கையைக் கெடுக்கும் சர்வ வல்லமை பெற்றவர்: அது நீங்கள் மட்டும்தான்!

மன்னித்தலின் பலன்களை மதங்கள் அனைத்தும் போதிக்கின்றன. மன்னித்தலும் மறத்தலும் எவ்வளவு பெரிய மன விடுதலையைத் தரும் என மன்னித்தவர்களுக்குத்தான் தெரியும்.

பழைய காயங்கள் ஆற அவற்றை மீண்டும் தீண்டாமல் இருப்பது முக்கியம். ஆனால் வெறுமையான மனதுக்கு கடந்த காலமும் அதன் கசப்பான எண்ணங்களும்தான் மிஞ்சுகின்றன.

நான் அதிகம் மதிக்கும் நண்பர் ஒருவர் முப்பது வயதுகளிலேயே பெரிய பதவிகள் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவருடன் பழகி நான் கற்றுக்கொண்டது ஒன்று தான்: “எந்த விஷயத்திலும் எதிராளியைப் பழி சொல்லக் கூடாது.” ‘இது நிகழாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று மட்டுமே அவர் யோசிப்பார். அவரை எதிர்க்கும் சிலருடன் கூட நட்பை இழக்க மாட்டார். தன் எதிர்ப்பைக் கண்ணியமான சொற்களில் பதிவு செய்து விட்டுத் தன் நிலையைக் காத்துக் கொள்வார்.

தொடர்ந்து வெற்றி பெறுகிற அவரின் சூத்திரங்கள் இவை தான். எல்லா முடிவுகளுக்கும் தானே காரணம் எனத் திடமாக நம்புவது; அதற்கான உழைப்பைத் தொடர்ந்து தருவது.

ஒரு கடந்த கால கசப்பான அனுபவம் பற்றிப் பேச்சு வந்த போது சொன்னார்: “ஓ, அது நடந்ததே மறந்து போச்சு.”

பிரெஞ்சு நாட்டின் தலைமைச் செயல் அதிகாரி என்னுடன் பேசும்போது சொன்னார்: “இந்தியர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். காயப்படுகிறார்கள். ஆனால் அவற்றை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதில்லை. செயலில் காட்டுகிறார்கள்!” அவரை மறுத்துப் பேச முடியாமல் தலை ஆட்டினேன்.

வேலையில் மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் நிகழ்காலத்தில் இருப்பவர்கள். அது தரும் அனுபவத்தில் திளைப்பவர்கள். வருங்காலத்தை நம்புபவர்கள்.

அதெல்லாம் சரி, மோசமான பணி அனுபவத்திலிருந்து மீள் வது எப்படி? மன்னிப்பது எப்படி?

உங்களுக்கு மோசமான அனுபவம் அளிப்பவரும் மோசமான அனுபவம் உட்கொண்டவர்தான். வெறுப்புக் கொள்வதைவிட பரிதாபம் கொள்ளுங்கள். அவரைக் கையாள்வதும் ஒரு வாழ்வியல் கலை. அதைக் கற்றுக்கொள்ளுங்கள். இது வெறும் பணி இடர்பாடு என்று அறிந்து கொள்ளுங்கள். இதை உங்கள் ஆளுமையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.

இந்த அனுபவத்திலிருந்து அவரும் நீங்களும் நிறைய கற்றுக்கொள்வீர்கள். காலம் தன் சுழற்சியில் யாரை எங்கு வைக்கும் எனத் தெரியாது. அதனால் வெறுப்பு வளர்க்காமல் கடமையைச் செய்யுங்கள்.

மனதை அமிலப்பாத்திரமாக்கி அதைக் காலம் முழுவதும் காக்க வேண்டாம். மனதைக் கழுவிவிட்டு... ஓ... இங்கிருந்து தான் ‘கழுவி கழுவி ஊற்றுவது’ வந்ததோ?) புதிய பானம் நிறையுங்கள்.

மன்னிப்பைவிட வலிமை யான ஆயுதம் எதுவுமில்லை. மறதியைவிடச் சிறந்த மன மருந்து எதுவுமில்லை.

நிறைய வரலாறு படியுங்கள். கேளுங்கள். வரலாறு என்பது வெறும் சம்பவங்களின் கோவை அல்ல. அது தந்த பாடங்களின் தொகுப்பு.

தொடர்புக்கு:

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x