Published : 16 Oct 2018 11:33 AM
Last Updated : 16 Oct 2018 11:33 AM
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 12 அன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. திமுக தொடர்ந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம், முதல்வர் மீதான முறைகேடு புகார்களுக்கு முகாந்திரம் இல்லை என்று அக்டோபர் 9 அன்று தெரிவித்த நிலையில், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஊழல்: 3-வது இடத்தில் தமிழ்நாடு
நாட்டில் ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருப்பதாக ‘டிரான்ஸ்பரென்ஸி இன்டர்நேஷனல்’ அக்டோபர் 11 அன்று வெளியிட்ட ‘இந்திய ஊழல் ஆய்வு 2018’ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில், நாட்டின் ஊழல் நிறைந்த மாநிலங்களில் முதல் இடத்தில் உத்திரபிரதேசம், இரண்டாவது இடத்தில் பஞ்சாப்பும் இடம்பிடித்திருக்கின்றன.
பரிதி இளம்வழுதி மறைவு
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் சென்னையில் அக்டோபர் 13 அன்று காலமானார். அவர் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1996 -2001-ம் ஆண்டு வரை அவர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை சபாநாயகராகப் பதவிவகித்திருக்கிறார். 2006 – 2011-ம் ஆண்டு வரை, திமுக ஆட்சிக் காலத்தில் அவர் செய்தி, விளம்பரத் துறை அமைச்சராகப் பதவிவகித்திருக்கிறார்.
தூய்மையான காற்றுத் திட்டம்
நாட்டின் 102 நகரங்கள் தேசிய காற்றுத் தரத்தைப் பேணவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அக்டோபர் 11 அன்று தெரிவித்திருக்கிறது. நாட்டின் 23 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் இரண்டு மாதங்களுக்குள் தூய்மையான காற்றுத் தரத்தை உருவாக்குவதற்கான செயல் திட்டத்தை வடிவமைக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் தேர்வில், ஆசிய பசிபிக் பிரிவில் போட்டியிட்ட இந்தியா 193 வாக்குகளில் 188 வாக்குகள் பெற்று அக்டோபர் 12 அன்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியால், 1 ஜனவரி, 2019 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராகச் செயல்படும். இந்தியாவுடன் ஆசிய பசிபிக் பிரிவில் பஹ்ரைன், வங்கதேசம், ஃபிஜி, பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
புதிய சொலிசிட்டர் ஜெனரல்
இந்தியாவின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா அக்டோபர் 10 அன்று நியமிக்கப்பட்டார். சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த ரஞ்சித் குமார் கடந்த அக்டோபரில் ராஜினாமா செய்ததிலிருந்து அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்துவந்தது. தற்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த துஷார் மேத்தா அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது பதவிகாலம் 30, ஜூன், 2020 வரை நீடிக்கிறது.
தகவல் அறியும் உரிமை: 6-வது இடம்
தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் (RTI) இந்தியா 6-வது இடத்தில் இருப்பதாக 123 நாடுகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சட்ட, ஜனநாயக மையம்’, ‘ஆக்ஸஸ் இன்ஃபோ ஐரோப்பா’ ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியிருக்கின்றன. 2011-ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
ராஜஸ்தானில் ஜிகா வைரஸ்
ராஜஸ்தானில் ஜிகா வைரஸால் 22 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அக்டோபர் 9 அன்று தெரிவித்திருக்கிறது. இந்திய மருத்துவ கவுன்சில் கண்காணிப்பு அமைப்பின் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் இதுவரை 86 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மிக புதுமையான பல்கலைக்கழகம்
2018-ம் ஆண்டில், உலகின் மிக புதுமையான பல்கலைக்கழகமாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அக்டோபர் 11 அன்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பல்கலைக்கழகப் பட்டியல் உலகம் முழுவதும் இருந்து 100 புதுமையாகச் செயல்படும் பல்கலைக்கழகங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஓர் இந்திய பல்கலைக்கழகம்கூட இடம்பெறவில்லை.
பேரிடர்களால் பெரும் இழப்பு
இயற்கை பேரிடர்களால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவுக்கு 7950 கோடி அமெரிக்க டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக அக்டோபர் 12 அன்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பேரிடர் குறைப்பு நாளையொட்டி (அக்டோபர் 13) இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பேரிடர்களால் பொருளாதார இழப்பைச் சந்தித்த நாடுகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT