Published : 07 Aug 2018 10:24 AM
Last Updated : 07 Aug 2018 10:24 AM
எவ்வளவோ திட்டமிட்டப்படும் கல்லூரிப் படிப்புக்கும் பிறகு செய்யும் பணிக்கும் சிறிதும் தொடர்பில்லாமல் போய்விடுவதுண்டு. அதனால் என்ன, வெற்றிதானே இலக்கு. படித்துவிட்டோம் அதனால் அது தொடர்பான வேலைதான் பார்க்க வேண்டும் என்று அடம்பிடிக்கத் தேவை இல்லை. படிப்பை அடித்தளமாக வைத்துக்கொண்டு பட்டறிவின் மூலம் வெல்ல முடியும். அதற்கான உதாரணமாக இருப்பவர்தான் ஏப்ரோன்.
பிடித்தமான விளையாட்டு
இயந்திரவியலில் பட்டம் பெற்ற ஏப்ரோன், இப்போது செய்து கொண்டிருப்பது கடலைமிட்டாய் போன்ற பாரம்பரியப் பலகாரங்கள் தயாரிக்கும் தொழில். தன் சகோதரர் இனோஸ் ரூபனுடன் இணைந்து இந்தத் தொழிலைச் செய்துவரும் இவர், தென்னிந்தியாவில் மிகப் பெரிய வர்த்தகராக வளர்ந்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தில் 600-க்கும் மேற்பட்ட விற்பனை முகவர்களைக் கொண்டுள்ளது இவரது ‘மணி மார்க்’ நிறுவனம். ஆர்க்காட்டை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இந்நிறுவனம், இப்போது சென்னையில் வடக்கு உஸ்மான் சாலையில் தனது முதல் விற்பனை அங்காடியையும் திறந்துள்ளது. தான் படித்த வேலைக்குப் போக வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் இந்த வெற்றி சாத்தியமில்லாது போயிருக்கும்.
திருச்செந்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவருடைய தந்தை சுந்தர்சிங், மிகச் சிறிய அளவில் ஆர்க்காட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கியவர். ஆகையால் வளரிளம் பருவத்தில் இருந்தே இந்தத் தொழிலைப் பார்த்து வளர்ந்தவர்கள்தான் ஏப்ரோனும் இனோஸ் ரூபனும். “சிறு வயதில் விடுமுறை நாட்களில் மற்ற பிள்ளைகள்போல நாங்கள் வெளியில் விளையாடச் சென்றதில்லை. வீட்டுக்குள் கடலை மிட்டாய்த் தயாரிப்பில் உதவுவதுதான் எங்களுக்குப் பிடித்தமான விளையாட்டாக இருந்தது” என்கிறார் ஏப்ரோன். இப்படியாக அவர்களுக்குக் கடலை மிட்டாய்த் தயாரிப்புத் தொழிலின் நடைமுறை அத்துப்படியானது.
பன்னாட்டோடு போட்டிபோடும் பலகாரங்கள்
இவர்களுடைய தந்தைக்கு மகன்கள் உயர் உத்தியோகத்தில் சேர வேண்டும் என்ற கனவு இருந்தாலும், ஏப்ரோனுக்குத் தங்கள் குடும்பத் தொழிலை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற விருப்பம்தான் ஆழமாக இருந்துள்ளது. தன் சகோதரருடன் இணைந்து அதற்கான முயற்சிகளிலும் உடனடியாக இறங்கினார்.
“கடலை மிட்டாய் போன்ற பாரம்பரியப் பலகாரத் தயாரிப்புத் தொழில் குடிசைத் தொழிலாகத்தான் செய்யப்பட்டு வருகிறது. இதில் மாற்றத்தைக் கொண்டுவர நாங்கள் நினைத்தோம். வெளிநாட்டில் உள்ள உணவுத் தொழிற்சாலைகளைப் போல நாங்கள் கடலைமிட்டாய் தயாரிக்க நவீனமான முறையில் ஒரு தொழிற்சாலையை ஆர்க் காட்டில் நிறுவினோம்” என்கிறார் ஏப்ரோன்.
இயந்திரவியலில் தான் கற்ற சில நுட்பங்களை இந்தத் தொழிற்சாலை மேம்பாட்டுக்கு அவர் பயன்படுத்தியுள்ளார். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் மூலம் சுத்தமான மிட்டாய்களைத் தயாரித்துத் தருகிறார்கள். கடலை மிட்டாய் மட்டுமல்லாமல் கமர்கட்டு, தேங்காய் மிட்டாய் போன்ற இன்னும் பல பாரம்பரியப் பலகாரங்களும் தயாரித்துத் தருகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களைப் போல இப்போது நேரடி விற்பனையிலும் கால்பதித்துள்ளனர். இன்னும் அதிக எண்ணிக்கையில் விற்பனை நிலையங்களை அமைப்பதுதான் இந்தச் சகோதரர்களின் அடுத்த இலக்கு.
- கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT