Published : 07 Aug 2018 10:24 AM
Last Updated : 07 Aug 2018 10:24 AM
பள்ளிக்குச் செல்ல முரண்டு பிடித்ததால் வீட்டிலிருந்தே முறைசாராக் கல்வி அளிக்கப்பட்டு; 17 வயதில் உயர்கல்வி பெற இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு; ஆனால் அங்கும் படிப்பைத் தொடர முடியாமல் இடைநின்று; பின்னாளில் தானே சாந்தி நிகேதன் என்ற பரிசோதனை முறைப் பள்ளிக்கூடத்தை நிறுவியவர் ரவீந்திரநாத் தாகூர். எட்டு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர் பின்னாளில் இந்திய தேசிய கீதம், வங்க தேசத்தின் தேசிய கீதம் ஆகியவற்றை இயற்றியது மட்டுமல்லாமல் இலங்கையின் தேசிய கீதமும் உருவாக உந்துதலாகத் திகழ்ந்தவர்.
கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் புள்ளியில் உயிர்பெற்ற அவருடைய கவிதைகளும் பயணக் கட்டுரைகளும் இரண்டு சுயசரிதைகளும் காலத்தை வென்றவை. உலக நாடுகள் முழுவதும் பயணித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட பிறகு அமெரிக்காவுக்குச் சென்று அங்கே தனது பள்ளியைப் பற்றி அவர் ஆற்றிய உரைவீச்சுகளில் ஒன்று ‘My School’. நோபல் பரிசு வென்ற முதல் ஆசியத் தலைமகனின் நினைவு தினமான (ஆகஸ்ட் 7) இன்று, அவருடைய உரையின் சுருக்கம் இதோ:
பள்ளியின் நோக்கம் என்ன?
நாற்பது வயதை நெருங்கும்போது மேற்கு வங்கத்தில் ஒரு பள்ளியை நிறுவினேன். கவிதைகள் வடிப்பதில் வாழ்க்கையின் பெரும் பகுதியைச் செலவழித்த ஒருவன் பள்ளிக்கூடத்தைத் தொடங்குவான் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகையால், என்னுடையது சிறந்த பள்ளியாக இருக்க வாய்ப்பில்லை ஆனாலும் புதுமையானதாகவும் துணிகரமானதாகவும் இருக்கக்கூடும் என்று மக்கள் நினைத்தார்கள். இதை மனத்தில் வைத்துக்கொண்டே, “உங்களுடைய பள்ளியின் நோக்கம் என்ன?” என்று அடிக்கடி என்னிடம் கேள்வி எழுப்பிச் சங்கடப்படுத்துபவர்கள் பலர். அவர்களைத் திருப்திபடுத்த நான் பொய் சொல்லலாகாது இல்லையா!
முதலில் ஒன்றை ஒப்புக்கொள் கிறேன். நிலையான அஸ்திவாரம் போட்டுக் கட்டிடம் எழுப்புவதுபோல எனது பள்ளிக்கென்று எந்தவொரு சித்தாந்த அடித்தளமும் கிடையாது. அது வளர்ந்துவரும் செடியிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அதன் விதை போன்றது. என்னுடையது புதிய கல்விக் கோட்பாட்டின் மீது ஊன்றப்பட்ட பள்ளி அல்ல.
மாறாக, என்னுடைய பள்ளி நாட்களின் நினைவுகள் காரணமாக முளைத்தது. அவை கசப்பான நாட்களாக மாறிப்போனது, என்னுடைய வினோதமான மனநிலையினாலா அல்லது அந்தப் பள்ளியின் குறைபாட்டாலா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஒரு வேளை குறைந்த உணர்திறன் கொண்டவனாக நான் இருந்திருந்தால் சூழலுக்கு ஒத்துப்போய்ப் பல்லைக்கடித்துக்கொண்டு படித்து முடித்துப் பல்கலைக்கழகப் பட்டம்வரை நகர்ந்திருக்க முடியும்.
பண்பட்ட சமூகத்தில் அடியெடுத்து வைப்பதற்காக என்னுடைய வயது ஆண்கள் அனுபவித்ததுபோலப் பள்ளி என்னும் தண்டனைக் காலத்தை நான் முழுவதுமாக அனுபவிக்கவில்லை. என்றாலும், அந்தத் துன்புறுத்தலில் இருந்து நான் முழுவதுமாகத் தப்பித்துவிடவில்லை என்பதிலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஏனென்றால், அதன் மூலமாகத்தானே தவறு குறித்த ஞானத்தை நான் அடைந்திருக்கிறேன்!
பரிவை வளர்க்கும் கல்வி வேண்டும்
இந்த உலகத்தை ஏற்றுக்கொள்ளவே நாம் வந்திருக்கிறோம், வெறுமனே அதைப் புரிந்துகொள்வதற்காக அல்ல என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம். அறிவின் மூலமாக நாம் சக்திவாய்ந்தவராக மாறலாம். ஆனால், கரிசனத்தின் மூலமாகத்தான் நாம் முழுமைபெற முடியும். நமக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமல்ல; சக ஜீவன்களோடு இணக்கமாக வாழக் கற்றுத் தருவதே உயரிய கல்வி. ஆனால், பரிவை வளர்க்கும் கல்வி பள்ளிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது; அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறது.
இயற்கையிடமிருந்து நம்மைப் பிளவுபடுத்தும் விதமாகவே சிறுபிராயத்தில் இருந்து நமக்கு அறிவூட்டப்படுகிறது, பழக்க வழக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், குழந்தைக்கு இலக்கணம் கற்பிக்க அதனிடமிருந்து மொழியைப் பிடுங்கிக்கொள்கிறோம், பூகோளம் சொல்லித்தரப் பூமியைப் பறித்துக்கொள்கிறோம். அவன் காவியம் கற்றறியும் தாகத்தில் இருக்கிறான். ஆனால், அவனுக்குத் துணுக்குகளும் தேதிகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் பேராபத்திலிருந்து மீளக் குழந்தை தன்னியல்பில் முரண்டு பிடிக்கிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்பட்டுத் தண்டனைகள் மூலம் மவுனத்துக்குள் ஆழ்த்தப்படுகிறது.
மரக்கிளையின் பாடம்
தன்னுடைய இஷ்டம்போல் சாவகாசமாக உட்கார்ந்து படிக்க தனக்கு தோதான மரக்கிளை ஒன்றைத் தேடியபடி மரம் ஏறிக்கொண்டிருந்த என்னுடைய பள்ளி மாணவன் ஒருவனைப் பார்த்து ஆச்சரியமும் எரிச்சலும் அடைந்த கண்டிப்புக்காகவே பெயர்போன ஒரு பள்ளித் தலைமை ஆசிரியர் இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறார். பின்பு, “தான் அமர்ந்து வாசிக்க வேண்டிய இடம் வரவேற்பறையின் நாற்காலியா மரக்கிளையா என்பதை குழந்தைப் பருவத்தில் மட்டும்தானே ஒரு நாகரிக மனிதன் தீர்மானிக்க முடியும். வளர்ந்த பிறகு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே அவனுக்கு இல்லையே?” என்று அவருக்கு நான் சொல்ல வேண்டி வந்தது.
மாணவர்கள் தாவரவியல் பாடமும் சிறப்பாகப் படிக்க வேண்டும் என்று அதே தலைமை ஆசிரியர் ஆசைப்படுவதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மரத்தைத் தொடாமலே தாவரவியல் பாடம் கற்க வேண்டுமாம். ஏனென்றால் அது அறிவியலாம். ஆனால், என்னுடைய மாணவர்கள் மரத்தோடு உறவாடுபவர்கள். அவர்களுக்குத் தெரியும் தங்களுடைய பளுவை எவ்வளவு தூரம் அந்தக் கிளைகள் தாங்குமென்று.
நான்கூட நகரத்தில் உள்ள ஒழுக்க விதிகளுக்கு உட்பட்ட வீட்டில்தான் வளர்க்கப்பட்டேன். ஏதோ மரங்களே இல்லாத உலகத்தில் பிறந்தவன் போலத்தான் வாழ்க்கை முழுவதும் நான் வழிநடத்தப்பட்டிருக்கிறேன். அதனாலேயே, ஏதோ கார்பனை உள்வாங்கிக்கொண்டு குளோரோஃபில்லை தயாரிப்பதற் கானவை மட்டுமல்ல மரங்கள், அவை உயிருள்ளவை என்பதை என்னுடைய மாணவர்கள் முழுவதுமாக உணர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT