Published : 03 Jul 2018 09:51 AM
Last Updated : 03 Jul 2018 09:51 AM
முறையான கல்வி பெறாதபோதிலும் அமெரிக்கா முழுவதும் பயணித்துத் தன்னுடைய உரைவீச்சுகளால் அமெரிக்காவில் நிலவிவந்த அடிமை முறைக்கு எதிராக வலுவான குரல் எழுப்பியவர் ஃபிரெட்ரிக் டக்ளஸ் (Frederick Douglas).
கறுப்பின மக்கள் வரலாற்றில், அடிமைமுறை ஒழிப்பில் ஃபிரெட்ரிக் டக்ளஸின் பங்களிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அங்கீகரித்தார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து 1776-ல் அமெரிக்கா விடுதலை பெற்றது. அதன் பின்னர் ஜூலை 4-ம் தேதி அமெரிக்காவின் சுதந்திரத் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆனால், கறுப்பின அமெரிக்கர்களுக்கு அது விடுதலை நாள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டி 1852 ஜூலை 5-ம் தேதியன்று, நியூயார்க் நகரத்தில் ‘The Meaning of July Fourth for the Negro’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை வெள்ளை அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கியது. கறுப்பினத்தவரின் அடிமைத்தளை நொறுங்கி ஒரு புதிய அமெரிக்கா பிறக்க வழிகோலியது. அந்த உரையின் சுருக்கம் இதோ…
உங்களுடையது, என்னுடையதல்ல
எனது சக குடிமக்களே! எதற்காக என்னை இன்று பேசுவதற்காக அழைத்தீர்கள் என்ற கேள்வியை எழுப்பிக்கொள்வதற்கு என்னை அனுமதியுங்கள். உங்களுடைய தேச சுதந்திரத்துக்கும் எனக்கும் அல்லது நான் பிரதிநிதிப்படுத்துபவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? சுதந்திரப் பிரகடனத்தின் அங்கங்களாக இருக்கும் மகத்தான கொள்கைகளான அரசியல் விடுதலையும் இயற்கை நீதியும் எங்களுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறதா?
மகத்தான இந்த விடுதலை நாளின் நிழலில்கூட நான் இல்லை. உங்களது உச்சபட்சமான சுதந்திரம் நமக்கிடையில் இருக்கும் கணக்கிட முடியாத தூரத்தைத்தான் காட்டுகிறது. உங்களுடைய தந்தைமார்களின் பரம்பரைச் சொத்தான நீதி, சுதந்திரம், வளம், விடுதலை ஆகியவற்றை நீங்களே பங்கு போட்டுக்கொள்கிறீர்கள். அது எங்களுடையதாகவேயில்லை. இந்த ஜூலை நான்கு உங்களுடையது, என்னுடையது அல்ல. நான் பேசிக்கொண்டிருப்பது அமெரிக்க அடிமைமுறையைப் பற்றித்தான் அன்பர்களே! இது அமெரிக்கா சுமந்துகொண்டிருக்கும் பாவமாகும்; அவமானமாகும். நான் சுற்றிவளைத்துப் பேசப் போவதில்லை.
நிரூபிக்க வேண்டுமா என்ன?
வெர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கறுப்பின மக்கள் (அறிந்தோ அறியாமலோ) இழைக்கக்கூடிய 72 விதமான குற்றங்களுக்கு இங்கே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதுவே வெள்ளைக்காரராக இருந்தால் இரண்டு விதமான குற்றங்களுக்குத்தான் அதே தண்டனை என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரு அடிமைதான் ஒழுக்கம், அறிவு, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றுச் சொல்ல வருகிறீர்களா? தெற்கு மாகாணச் சட்டங்களில், அடிமைகளுக்குப் படிப்பு, எழுத்து கற்பிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராதங்களும் தண்டனைகளும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
உங்கள் தெருவில் உள்ள நாய்கள், வானில் பறக்கும் பறவைகள், மலைகளில் உள்ள கால்நடைகள், கடலில் உள்ள மீன்கள் ஆகியவை எப்போது விலங்குகளும் மனிதர்களுக்குச் சமமாக நடத்தப்படுவதாக உணரத்தொடங்குகின்றனவோ, அப்போதுதான் அடிமை என்பவனும் மனிதனாகவே இங்குக் கருதப்படுகிறான் என்று நான் வாதிடுவேன்.
நாங்கள் நிலத்தை உழும்போது, பயிரிடும்போது, மகசூல் காணும்போது, இயந்திரங்களைப் பயன்படுத்தி வீடு கட்டும்போது, கட்டிடங்களைக் கட்டியெழுப்பும்போது, கப்பல்களைத் தயாரிக்கும்போது, படிக்க, எழுத, மதிநுட்பமான வேலைகளைக் கற்றுக்கொண்டு குமாஸ்தாவாக, வியாபாரியாக, அலுவலகத்தில் உதவியாளராகச் செயல்படும் நிலையில், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள், கவிஞர்கள், இதழாசிரியர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்களாக எங்கள் மக்கள் உருவாகி வருவதைப் பார்த்த பிறகும் உங்களுக்கு நாங்கள் சம மனிதர்கள்தான் என்று நிரூபிக்க வேண்டுமா என்ன?
அதைச் செய்யப்போவதில்லை
சுதந்திரமாக இருக்க மனிதனுக்கு உரிமை உள்ளது. தன்னுடைய உடலின் மீது அவனுக்கு உடைமை உள்ளது என்றெல்லாம் நான் வாதாட வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? ஆனால், அவற்றை நீங்கள்தான் ஏற்கெனவே பிரகடனப்படுத்திவிட்டீர்களே! அடிமை முறை கொடுமையானது என்று நான் வாதாட வேண்டுமா என்ன? குடியரசு பெற்றவர்களுக்கா இந்தக் கேள்வி? அப்படி நான் விளக்க நேரிட்டால், அது என்னை நானே கேலி செய்வதாகிவிடும். உங்களையும் அவமானப்படுத்தும். அடிமைத்தளை தவறு என்று அறியாத மனிதன் இருக்க வாய்ப்பில்லை.
அப்படியிருக்க, மனிதர்களை மூர்க்கமாக நடத்துவதற்கோ, அவர்களுடைய சுதந்திரத்தைப் பறிப்பதற்கோ, உழைப்புக்கான கூலியைத் தர மறுப்பதோ, அடித்துத் துன்புறுத்துவதோ, இரும்புச் சங்கிலியால் கை, கால்களைக் கட்டி இழுப்பதோ, பட்டினிபோட்டு அவர்களுடைய எஜமானருக்கும் முன்பாக மண்டியிட நிர்ப்பந்திப்பதோ தவறென்று நான் வாதாட வேண்டுமா என்ன? நான் அதைச் செய்யப்போவதில்லை. அதைவிடவும் முக்கியமான பணிகளும் அதற்கும் அதிகமான தர்க்கத் திறனும் எனக்கு இருக்கிறது.
நம்பிக்கை ஒளிக் கீற்று
ஒரு அமெரிக்க அடிமைக்கு ஜூலை 4 என்பது என்ன? நான் சொல்கிறேன்: அநீதி, குரூரங்களுக்குதான் தொடர் பலியாடு என்ற கொடுமையை நினைவுகூரும் நாள் இது. இத்தனை காலம் இழைக்கப்பட்ட கொடூரங்களையும் மெல்லிய முக்காடு போட்டு மூடி மறைக்கும் தினம்.
இத்தனை கறை படிந்துபோன நிலையை விவரித்தாலும் இந்தத் தேசத்தினால் நான் விரக்தி அடையவில்லை. அடிமைத்தளையை முறியடிக்கக்கூடிய சக்திகள் ஒன்றிணைந்தால் விடுதலை சாத்தியமே. ஆக, நான் எங்குத் தொடங்கினேனோ அங்கிருந்தே நம்பிக்கையோடு விடைபெறுகிறேன். அமெரிக்காவின் விடுதலைப் பிரகடனத்தில் இருந்தே எனக்கான நம்பிக்கை ஒளிக் கீற்றைக் கண்டெடுத்துக்கொள்கிறேன்.
ஐந்து சுயசரிதைகள்
1845-ல் ‘Narrative of the Life of Frederick Douglass, an American Slave’ என்ற தலைப்பில் தன்னுடைய முதல் சுயசரிதையை எழுதினார் டக்ளஸ். இதில் அமெரிக்காவின் அடிமைகளின் மாகாணமாக நிந்திக்கப்பட்ட மேரிலாண்டில் தான் அனுபவித்த கொடுமைகளைச் சித்தரித்தார். இந்தப் புத்தகம் உட்படமொத்தம் 5 சுயசரிதைகளை அவர் எழுதி இருக்கிறார்.
பெண்களின் வாக்குரிமைக்கு உரிமைக் குரல் எழுப்பிய குடியுரிமைப் போராளி அவர்.
டக்ளஸிடம் இருந்து உத்வேகம் பெற்றுத்தான் 1960களில் அமெரிக்காவில் சிவில் உரிமைகள் இயக்கம் பிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT