Last Updated : 26 Mar, 2025 06:29 AM

 

Published : 26 Mar 2025 06:29 AM
Last Updated : 26 Mar 2025 06:29 AM

யானையின் பழக்கடை | கதை

யானை ‘சர்க்கஸ்’லிருந்து களக்காடு காட்டுக்கு ஓடிவந்துவிட்டது. களக்காடு காட்டில் நிறைய விலங்குகள் இருந்தன. சிங்கம் கிடையாது. புலி இருந்தது. அதனால் அந்தக் காட்டுக்குப் புலிதான் ராஜா. யானை நகரத்தில் இருந்தபோது பழக் கடைகளைப் பார்த்திருக்கிறது. அதனால் காட்டில் ஒரு பழக்கடையை ஆரம்பிக்க விரும்பியது. தன் விருப்பத்தை மானிடம் சொன்னது.

“காட்டில் கடையா? இதென்ன வேடிக்கை!” என்று சிரித்தது மான். “நாட்டில் கடைகள் இருப்பதுபோல் காட்டில் ஏற்படுத்த நினைக்கிறேன்” என்றது யானை. “அது நாட்டுக்குச் சரி, காட்டுக்குச் சரியா? இங்கே எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லாமும் எல்லாருக்கும் சொந்தம்” என்றது மான். “யார் என்ன சொன்னாலும் நான் கடை ஆரம்பிப்பது உறுதி” என்றது யானை.

மா, பலா, வாழை, கொய்யா, ஆரஞ்சு, திராட்சை, நெல்லி, சப்போட்டா, பப்பாளி என்று எல்லாப் பழங்களையும் பறித்து வந்தது யானை. தன் இருப்பிடத்தைச் சுத்தம் செய்து அடுக்கி வைத்தது. கொய்யா மரத்தில் ஏறி, பசியுடன் ஓடிய அணில் திகைத்தது. கிளைகளில் ஒரு கொய்யாப்பழம் கூட இல்லை.

வாழைப் பழங்களைத் தேடிவந்த குரங்கு மொட்டையாக நின்ற மரங்களைப் பார்த்து திகைத்தது. திராட்சையைத் தேடிய நரியும் பலாப் பழத்தைத் தேடிய கரடியும் மாம்பழத்தைத் தேடிய முயலும் மரங்களில் பழங்களைக் காணாமல் ஏமாற்றம் அடைந்தன. பழங்கள் எங்கே போயின? விலங்குகள் தேடின. யானையின் இருப்பிடத்தில் எல்லாப் பழங்களும் இருப்பதைக் கண்டன.

“யானையாரே, எல்லாப் பழங்களையும் பறித்து இங்கே ஏன் வைத்திருக்கிறீர்?” என்று குரங்கு கேட்டது. “பழக்கடை வைத்திருக்கிறேன்” என்றது யானை. “பழக் கடையா? எதற்கு?” என்று முயல் கண்களை உருட்டியது. “பழங்கள் விற்பதற்கு. நீங்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டும். நாட்டில் மனிதர்கள் செய்யும் வியாபாரத்தை, காட்டில் செய்யப் போகிறேன்” என்றது யானை.

யானை சொன்னது குரங்கு, முயல், கரடி ஆகியவற்றுக்குப் புரியவில்லை. நரிக்கு மட்டும் ஓரளவு புரிந்தது. “யானை அண்ணா! எங்களுக்கு உணவை இயற்கை கொடுக்கிறது. நீங்கள் பழங்களைப் பறித்து வைத்துக்கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. இது புலி ராஜாவுக்குத் தெரியுமா?” என்று கேட்டது நரி.

“என் திட்டத்தை ராஜாவுக்குச் சொல்லப் போகிறேன். நாடுபோல் காடும் முன்னேறுவதை ராஜா விரும்புவார்” என்றது யானை. ‘ராஜா விரும்புவார்’ என்று யானை சொன்னதைக் கேட்டு விலங்குகள் திகைத்தன. புலி ராஜாவுக்கும் யானைக்கும் உள்ள நட்பை நினைத்து அவை பயந்தன. யானை சர்க்கஸிலிருந்து காட்டுக்கு வந்ததால் புலி ராஜா அதை மதித்தது. அடிக்கடி வித்தைகளைக் காட்டி, புலியை மகிழ்ச்சிப்படுத்தியது யானை.

“புலி ராஜாவிடம் யானைக்குச் செல்வாக்கு உண்டு என்கிற தைரியத்தில்தான் எல்லாப் பழங்களையும் பறித்து வைத்திருக்கிறது” என்றது நரி. “அணிலே, நீ இனிமேல் மரங்களில் ஏறி பழங்களைக் கொறிக்க முடியாது” என்று முள்ளம்பன்றி சொன்னது. “எனக்குப் பசிக்கிறது. வாருங்கள், ராஜாவிடம் முறையிடுவோம்” என்றது முயல்.

எல்லா விலங்குகளும் புலி ராஜாவைப் பார்க்கச் சென்றன. “காட்டிலுள்ள பழங்களை எல்லாம் பறித்து வைத்துக்கொண்டு யானை விலை பேசுகிறது. குரங்கு, அணில், முயல் எல்லாம் பட்டினி கிடக்கின்றன” என்று நரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ‘கீச்...கீச்...’ என்று பறவைகளின் ஒலி பெரிய அளவில் கேட்டது. மைனா, குயில், காட்டுப் புறா, காகம் போன்ற பறவைகள் எல்லாம் புலி ராஜாவின் முன்னால் வந்து இறங்கின. காட்டில் பழங்கள் இல்லாமல் பட்டினிக் கிடப்பதாகக் கூறின.

விலங்குகளும் பறவைகளும் பட்டினி என்றவுடன் புலி ராஜாவுக்குக் கவலையாகிவிட்டது. சிறிது நேரம் அங்கும் இங்கும் நடந்தது. காட்டெருமையைக் கூப்பிட்டது. யானையை அழைத்து வரும்படிக் கூறியது. யானை வந்தது. தும்பிக்கையைத் தூக்கி வணக்கம் வைத்தது. “காட்டிலுள்ள பழங்களை எல்லாம் ஏன் மொத்தமாகப் பறித்தீர்?” என்று புலி ராஜா கேட்டது.

“நாட்டில் மனிதர்கள் செய்வதுபோல் வியாபாரம் செய்ய நினைக்கிறேன். வியாபாரத்தால் நாடு முன்னேறியது. அதுபோல் நம் காடும் முன்னேறும். ராஜா, அனுமதி தர வேண்டுகிறேன்” என்றது யானை. “பழக் கடை போல் கறிக் கடையும் உண்டா?” என்று புலி ராஜா வாயில் எச்சில் வடிய கேட்டது. அதைக் கேட்டு நரி துணுக்குற்றது. “ராஜா, நாம் நாட்டில் வசிக்கவும் இல்லை, நாம் மனிதர்களும் இல்லை” என்றது நரி.

“சும்மா கேட்டேன். நரி சொல்வதுதான் சரி. மனிதர்களின் சட்டதிட்டங்கள் நமக்குப் பொருந்தாது. நமக்கான உணவை இந்தக் காடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்குகிறது. அதை ஒருவர் எடுத்துவைத்துக் கொண்டு, வியாபாரம் செய்வது பெரும் குற்றம். இனிமேல் கடை என்கிற எண்ணமே வரக் கூடாது. யானை வைத்திருக்கும் பழங்களை எல்லாரும் பங்கிட்டு, பசியாறுங்கள்” என்றது புலி ராஜா. யானை தன் தவறை உணர்ந்தது. விலங்குகள் மகிழ்ச்சியாகப் பழங்களைச் சாப்பிடச் சென்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon