Published : 19 Mar 2025 12:19 AM
Last Updated : 19 Mar 2025 12:19 AM
பறவைகள் இடைவிடாமல் பறப்பதற்கு ஆற்றல் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆக்சிஜன் செறிவுள்ள ரத்தம் பறவையின் உடல் முழுவதும் கிடைக்க வேண்டும். அதற்குப் பறவையின் நுரையீரல் தொடர்ந்து செயல்பட வேண்டும். மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது மிகச் சிறந்த சுவாச மண்டலத்தைப் பறவைகள் கொண்டுள்ளன.
மனிதர்கள், விலங்குகள் நுரையீரலின் எடை அவற்றின் மொத்த எடையுடன் ஒப்பிடும்போது 1 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், பறவைகளுக்கு அவற்றின் நுரையீரல் எடை மொத்த எடையில் 4 சதவீதம் வரை இருக்கும்.
நிற்காமல் தொடர்ந்து நுரையீரலுக்குக் காற்றைக் கொடுப் பதற்காக 9-11 காற்றுப்பைகள் நுரையீரலைச் சுற்றி இருக்கின்றன. இந்தக் காற்றுப்பைகள் வாயுப்பரிமாற்றத்தில் நேரடியாக ஈடுபடு வதில்லை. ஆனால், நுரையீரலுக்குள் வரும் காற்று ஒரு திசையில் வந்து மறு திசையில் செல்வதற்கு இவை உதவிசெய்கின்றன.
இவை நுரையீரலுக்குக் காற்று எந்தத் திசையில் வர வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என்பதை வரையறுப்பதில் முக்கியப் பங்காற்று கின்றன. அதனால்தான் பறவை மூச்சை உள்ளே இழுக்கும்போதும், வெளியே விடும்போதும், எந்தவித இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து நுரையீரலுக்குக் காற்று கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
ரத்தத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை நீக்கிவிட்டு, ஆக்சிஜனை நுரையீரல் விரைவாகச் செலுத்துவதற்கும் இந்தக் காற்றுப்பைகள் உதவுகின்றன. பறவை நிற்காமல் பறந்துகொண்டிருக்கும் போது, உள்வாங்கும் காற்று குளிர்ந்ததாகவும், பறவையின் உடல் சூடாகவும் இருக்கும். பறவையின் உடல்சூட்டை வெளியே செல்லும் காற்றின் உதவியுடன் வெளியேற்றி, உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் இந்தச் சுவாச அமைப்பு உதவுகிறது.
மனிதர்களின் இதயம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் துடிக்கும். நாம் செய்யும் வேலை, பயம், படபடப்பு போன்றவற்றிற்கு ஏற்ப இதயத்துடிப்பின் அளவு ஒவ்வொரு வருக்கும் மாறுபடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதயம் துடிக்க இயலாது. சாதாரணமாக நம் ஓய்வு நிலையில் இதயம் நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கிறது. அதிகபட்சமாக நிமிடத்துக்கு 220 முறை வரை துடிக்கலாம். வயதானால் இந்த அளவு இன்னும் குறையும்.
ஆனால், பறவைகள் தங்கள் தேவைக்கு ஏற்ப இதயத்தை அதிவேகமாக இயக்கக்கூடிய திறமையைக் கொண்டுள்ளன. ஓய்வு நிலையில் இருக்கும்போது இதயம் துடிக்கும் அளவை 5-6 மடங்கு வரை அவற்றால் அதிகரிக்க இயலும். பொதுவாகச் சிறிய பறவைகளுக்கு இதயத்துடிப்பு அதிகமாகவும் பெரிய பறவைகளுக்கு இதயத்துடிப்பு குறைவாகவும் இருக்கும்.
ஓசனிச்சிட்டுகள் ஓய்வு நேரத்தில் இருக்கும்போது அவற்றின் இதயம் நிமிடத்துக்கு 300 முறை துடிக்கும். அதேநேரத்தில் வாத்து, புறா ஆகியவற்றின் இதயம் நிமிடத்துக்கு 150 முறை துடிக்கும். கழுகு போன்ற பெரிய பறவைகளுக்கு 60-100 என்கிற அளவில் இதயம் துடிக்கும்.
இந்த நிலையில் இருக்கும் இதயத்துடிப்பு, அது முழு வேகத்தில் பறக்கும்போது பல மடங்கு அதிகரிப்பதைப் பார்க்க முடியும். உலகிலேயே அதிக முறை துடிக்கும் இதயத்தைக் கொண்ட பறவையாக ஓசனிச்சிட்டுகள்தான் இருக்கின்றன. அவை நிற்காமல் பறந்துகொண்டிருக்கும் போது நிமிடத்துக்கு அவற்றின் இதயம் 1,200 முறை வரை துடிக்கிறது. அதுவே நடுத்தர எடை கொண்ட பறவைகளுக்கு 600 முறையும் பெரிய பறவைகளுக்கு 400 முறையும் இதயத்துடிப்பு இருக்கும்.
பறவைகளின் தேவைக்கு ஏற்ப: அவற்றின் சுவாச மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இமய மலையில் தரையிலிருந்து 7-8 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கும் பறவைகளும் இருக்கின்றன. நாம் உயரமாகச் செல்லச் செல்ல ஆக்சிஜனின் அளவு குறைந்துகொண்டே செல்கிறது. குறைந்த ஆக்சிஜன் உள்ள சுற்றுப்புறச் சூழ்நிலையிலும் பறப்பதற்குத் தேவை யான ஆக்சிஜனைக் கொடுக்கும் வகையில் பறவைகளின் சுவாச மண்டலம் இருக்கிறது.
அதில் காற்றுப் பைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அதே போன்று தண்ணீருக்கு அடியில் இரைதேடும் பறவை இனங்களும் இருக்கின்றன. அப்படித் தண்ணீருக்கு அடியில் செல்லும் போது காற்று கிடைக்காது. இருக்கும் ஆக்சிஜனைக் கொண்டு சிறிது நேரம் தாக்குப்பிடிக்க வேண்டி இருக்கும். அதனால் இதயத்துடிப்பின் வேகத்தைக் குறைத்துக் கொள்கின்றன.
நீரில் மூழ்கி மீனைப் பிடிக்கும் நீர்க்காகம் சராசரியாக 30-60 நொடிகள் தண்ணீருக்குள் இருக்கும். 4-10 அடி ஆழம் வரை நீருக்குள் மூழ்கும். ஓய்வு நிலையில் அதன் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 200 என்று இருக்கும். தண்ணீருக்குள் சென்றவுடன், இருக்கும் ஆக்சிஜனை வைத்து நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பதற்காக இதயத்துடிப்பின் அளவை நிமிடத்துக்கு 50-100 என்கிற அளவுக்குக் குறைத்துக்கொள்ளும். தண்ணீரில் இருந்து மேலே வந்தவுடன் மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்காக அதிகப்படியான ஆக்சிஜனைச் சுவாசிக்கத் தொடங்கும். அப்போது இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 300 வரை செல்லும்.
பெங்குவினால் 20 நிமிடங்களுக்கும் மேல் தண்ணீரில் மூழ்கி இருக்க முடியும். அரைக் கிலோமீட்டர் ஆழம் வரை செல்லவும் முடியும். பெங்குவின் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 70-80 என்கிற அளவில் இருக்கும். நீரில் மூழ்கியவுடன் இதயத்துடிப்பின் வேகத்தை 10 சதவீதத்துக்கும் குறைவாக மாற்றிக்கொள்ளும்.
நிமிடத்துக்கு 5-6 முறை மட்டுமே அதன் இதயத்துடிப்பு இருக்கும். அதனால்தான் அதிக நேரம் இவற்றால் தண்ணீரில் தாக்குப்பிடிக்க முடிகிறது. தண்ணீரில் இருந்து வெளியே வரும்போது அதன் இதயத்துடிப்பு 300 வரை அதிகரிக்கும். மீண்டும் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைத்தவுடன் அடுத்த பயணத்துக்குத் தயாராகிவிடும்.
பறவை எவ்வளவு உயரத்தில் பறக்கிறது. அங்கே ஆக்சிஜனின் அளவு என்ன, அதன் இறக்கையை அசைப்பதற்கு எவ்வளவு ஆற்றல் தேவைப்படுகிறது, எந்த வேகத்தில் பயணம் செய்கிறது, தண்ணீருக்கு அடியில் மூழ்கும்போது எவ்வளவு நேரம், எவ்வளவு ஆழம் செல்கிறது என்பது போன்ற பல காரணிகள் பறவையின் இதயத்துடிப்பைத் தீர்மானிக்கின்றன.
விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதால், அவர்களுடைய இதயத் தசைகள் வலிமை பெறுகின்றன. அதனால் ஓய்வு நிலையில் இருக்கும்போது சாதாரண மனிதர்களைவிட, விளையாட்டு வீரர்களின் இதயம் சற்றுக் குறைவான வேகத்தில் துடிப்பதை நாம் காணமுடியும். அதனால்தான் தொடர்ந்து பறத்தல் எனும் உடற்பயிற்சியைச் செய்யும் பறவைகள் மிகச் சிறந்த சுவாச மண்டலத்தைக் கொண்டுள்ளன.
(பறப்போம்)
- writersasibooks@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment