Published : 19 Mar 2025 06:13 AM
Last Updated : 19 Mar 2025 06:13 AM
இது பொதுத் தேர்வுக் காலம். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்கிற மாணவர்களின் முனைப்பு ஒரு பக்கம். பெற்றோர்களுக்கோ எந்தக் கல்லூரியில், எந்தப் பாடப் பிரிவை எடுத்துப் படிக்க வைப்பது என்கிற எதிர்பார்ப்பு இன்னொரு பக்கம். இதில் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம். ஆனால், மிகவும் குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்களின் நிலை? பெரும்பாலும் 70 - 80 சதவீத மதிப்பெண்கள் எடுப்பவர்களே அதிகம்.
இவர்களுக்கு விருப்பப்பட்ட கல்லூரியில் விரும்பும் பாடப்பிரிவு கிடைப்பது பெரிய சவால். ஒரு கல்லூரில் இடம் கிடைப்பதில் நிர்வாக ஒதுக்கீடு, சுயநிதிக் கல்லூரி, கலந்தாய்வு, முதல் பட்டதாரி என்று பல அம்சங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டிதான் நல்ல கல்லூரியில் ஓரிடத்தை வாங்கி, தன் பிள்ளையைப் பெற்றோர் படிக்க வைக்கிறார்கள். ஆனால், பிறகுதான் விஷயமே இருக்கிறது.
மாணவர்களுக்கு மனதுக்குள் 12ஆம் வகுப்புவரை படிப்பு படிப்பு என்று இருந்துவிட்டோம், கல்லூரி வாழ்க்கையை 3-4 ஆண்டுகளுக்கு ஜாலியாகக் கழிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுவது உண்டு. ஆனால், பெற்றோர்களுக்கோ நல்ல கல்லூரியில் பணத்தைக் கட்டிச் சேர்த்து விட்டுள்ளோம், நல்ல படிப்பும், மதிப்பெண்ணும் இருந்தால் நல்ல வேலையை வளாக நேர்க் காணல் மூலம் கல்லூரியே வாங்கித் தந்து விடும் என்கிற எண்ணம்.
இன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது. சர்வதேசப் பொருளாதாரமும் அரசியலும் சேர்ந்து வேலைவாய்ப்புகள் பெருகும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. நிறைய நிறுவனங்களுக்குத் தகுதியான ஆள்கள் தேவைப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால், நிறுவனங்கள் எதிர்பார்க்கிற தகுதிகள், திறன்கள் மாணவர்களிடம் இருக்கின்றனவா? இவற்றைப் பெற மாணவர்கள், கல்லூரி, பெற்றோர் என மூன்று கரங்கள் இணைய வேண்டும்.
மாணவர்கள் என்ன செய்யலாம்? - இன்று மதிப்பெண்கள், சான்றிதழ்கள் எல்லாம் ஒரு பாஸ்போர்ட் போலத்தான். இவை மாணவர்களுக்குச் சுலபமாகவே கிடைத்துவிடுகின்றன. ஆனால், மதிப் பெண்ணோ சான்றிதழோ ஒரு ‘கேட் பாஸ்’ போலத்தான். வேலைதான் விசா மாதிரி.
இன்றைய நிறுவனங்கள் பலவும், மாணவர்களிடம் நல்ல படிப்பைத் தாண்டி அசாத்திய திறமையையும் எதிர்பார்க்கின்றன. அதை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு நிறைய சர்டிபிகேஷன் தேவைப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும், பாடம் தாண்டிய ஒரு சிறப்புத் துறையில ஸ்பெஷலாக ஒரு சர்டிபிகேஷன் படிப்பது நல்லது. அது எந்தத் துறையில் செய்யலாம் என ஆசிரியர்கள், பெரு நிறுவனங்களில் பணியாற்றுவோர், நிறுவனங்களில் பணிபுரியும் முக்கிய நபர்கள், இணையத்தில் தேடுதல் மூலம் அறியலாம். இதன் மூலம் உங்கள் தகுதியும் திறமையும் மட்டும் வளர்வதில்லை, கார்ப்பரேட்டுகள் எதிர் பார்க்கும் தகுதி என்கிற அடுத்தக் கட்டத் துக்கும் நகர்கிறீர்கள். எனவே, முதலாம் ஆண்டிலிருந்தே கவனமாக இதைப் பின்பற்ற வேண்டும்.
அடுத்து கல்லூரி: எல்லாக் கல்லூரிகளும் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளித்து ‘பிளேஸ் மெண்ட் செல்’லை உருவாக்குகிறார்கள். அதற்கென அலுவலரையும் நியமிக்கிறார் கள். ஆனால், அவரால் மட்டுமே மாணவர் களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தந்து விட முடியாது.
இது ஊர் கூடி தேர் இழுக்கிற கதை. இதற்காகக் கல்லூரிகளில் ஒவ்வொரு துறையும் ஒருவரைத் தனியாக நியமிக்க வேண்டும். பயிற்சி மட்டும் போதாத நிலையில் ‘மென்டாரிங்’ என்கிற சிறப்பு அணுகுமுறை தேவைப்படுகிறது.
ஓர் ஆசிரியர் 10 மாணவர்களை முதல் ஆண்டிலிருந்தே தன்னுடைய பார்வையில் வைத்து, அவர்களின் பலம், பலவீனம், திறமையை வளர்த்துக் கொள்வதைத் தொடர்ச்சியாகக் கண் காணிக்க வேண்டும். இவற்றைப் பற்றி மாணவர்களின் பெற்றோருக்கும் புரியவைக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் கல்லூரிகளில் வேலை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் கல்லூரிக்கும் நற்பெயரைப் பெற்றுத் தரும்.
பாடம் எடுப்பது மட்டுமே என் வேலை என்று கல்லூரி ஆசிரியர்கள் நினைக்காமல், தன் பிள்ளை என்றால் வேலைவாய்ப்பை எப்படித் தேடுவோமோ அதுபோல படிக்கும் மாணவர்களுக்கும் தேடித் தருவதில் ஆர்வம் காட்ட வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டி, பயிற்சி அளிக்க வேண்டும்.
அதேபோல முன்னாள் மாணவர் கள்தான் ஒரு கல்லூரியின் பலம். அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள், தொடங்கியிருக்கும் தொழில்கள் எல்லாமே அவர்கள் படித்த கல்லூரிக்குப் பெருமை. எந்த ஒரு கல்லூரியும் முன்னாள் மாணவர்களைச் சரியாக ஒருங்கிணைத்து, அவர்கள் மூலமும் வேலைவாய்ப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்குப் பெற்றுத்தர வேண்டும். இதற்காக ஆண்டுக்கு ஒருமுறை முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்ச்சி நடத்தினாலே போதுமானது.
பெற்றோர் செய்யவேண்டியது: இன்றைய பெற்றோர் பணத்தின் மதிப்பை குழந்தைகளுக்குக் கற்றுத் தராமலேயே வளர்க்கிறார்கள். எதைக் கேட்டாலும் கஷ்டப்பட்டாவது வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். அது எதிர்காலத்தில் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதிலும் பணம் சம்பாதிப் பதின் மகத்துவத்தையும் குறைத்துவிடுகிறது. பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள் என்கிற எண்ணத்தை விதைத்து விடுகிறது.
எனவே, உங்கள் மகன் / மகள் சார்ந்து கல்லூரி நிர்வாகம் எடுக்கும் நல்ல முயற்சிகளுக்குத் தடுப்பணை போடாமல் ஒத்துழைக்க வேண்டும். அடிக்கடி கல்லூரியைத் தொடர்புகொண்டு வாரிசுகளின் நிலையை அறிந்துகொள்ள வேண்டும். பணம் கட்டிப் படிக்க வைப்பதோடு கடமை முடிந்து விடாது. பிள்ளைகளை நல்ல வேலையில் உட்கார வைத்து, நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரும்வரை பெற்றோர் கடமை முடிவதில்லை. இதை உணர்ந்து பெற்றோர் செயல்பட வேண்டும்.
- கட்டுரையாளர், திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர்; karthikeyan-mba@saranathan.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment