Last Updated : 31 Jul, 2018 10:51 AM

 

Published : 31 Jul 2018 10:51 AM
Last Updated : 31 Jul 2018 10:51 AM

வேலை தரும் சேவை

சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனிதர்கள் அனைவருக்கும் உண்டு. அந்த எண்ணத்தின் உந்துதல் மாணவப் பருவத்தில் சற்று தீவிரமாக இருக்கும். பணத்தின் தேவை காரணமாக, சேவை மீதான ஈடுபாடு படிப்புடன் சேர்ந்தே முடிந்துவிடுகிறது. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது.

சமூகப் பணி இப்போது ஒரு தொழில்துறையாக மாறிவிட்டது. இன்று தனது சேவையைச் சேவையாற்றுபவர்களுக்கும் அது அளிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கைநிறையச் சம்பளம் அளிக்கும் பல வேலைவாய்ப்புகளைச் சமூகசேவை இன்று அளிக்கிறது.

ஏன் படிக்க வேண்டும்?

சமூகசேவைக்கு உதவும் முனைப்பும் நல்லதை நினைக்கும் மனமும் மட்டும் போதாது. உதாரணத்துக்கு,சாலை நடுவில் கிடக்கும் கல்லைத் தூக்கி ஓரமாகப் போடுவதும் ஒரு சமூகசேவைதான். ஒருமுறை மட்டும் நிகழும் நிகழ்வாக அது இருந்தால், அதை இயல்பாக எந்த மெனக்கெடலுமின்றிச் செய்துவிட்டு சென்றுவிடலாம். ஆனால், நாடு முழுவதும் இருக்கும் அனைத்துச் சாலைகளிலும் இருக்கும் கற்களை அகற்றுவதாக இருந்தால், அதற்கு முறையான பயிற்சியும் திட்டமிடலும் தேவை.

கல்லைத் தூக்கி ஓரமாகப் போடுவதற்கு எதற்குப் பயிற்சியும் திட்டமிடலும் என்று சிலர் ஏளனமாக நினைக்கலாம். ஆனால், அவை எந்த அளவு இன்றியமையாதவை என்பதைக் கீழே பார்ப்போம். இங்கு நாம் விவாதிக்க இருப்பது வெறும் கல்லாக இருக்கலாம். ஆனால் அதே அளவுகோலை எதனுடனும் பொருத்திப் பார்த்து சமூகசேவைத் துறையின் வீச்சை விளங்கிக்கொள்ள முடியும்.

திட்டமிடல்

முதலில் நாடு முழுவதும் இருக்கும் சாலைகளில் எவற்றில் எல்லாம் கற்கள் நடுவில் கிடக்கின்றன என்பதை அறியவேண்டும். பின்பு அந்தக் கற்களை அகற்றுவதற்கு நம்மைப் போன்று சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை நாம் இனம் காண வேண்டும். பின் அவர்களுக்கு, அந்தக் கல்லை எப்படி அகற்ற வேண்டும் எனப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது அகற்றிய கல்லை வீட்டின் முன்னோரக் கடையின் முன்னே போடாமல், யாருக்கும் தொந்தரவு அற்ற முறையில் எங்கே போட வேண்டும் எப்படிப் போட வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சுமூகமாகப் பேசுதல்

கற்களைச் சிலர் வேண்டும் என்றே, தங்கள் பயன்பாட்டுக்காகச் சாலையில் வைத்திருக்கலாம். அந்தக் கற்களை அகற்றும்போது அவர்கள் பிரச்சினையும் பண்ணலாம். அவர்களிடம், அந்தக் கல் வேண்டு மானால் உங்களுக்குச்சொந்தமானதாக இருக்கலாம், ஆனால், அது இருக்கும் சாலை அனைவருக்கும் சொந்தமானது என்பதை அவர்களுக்குப் புரியும் மொழியில் சினம் ஊட்டாமல் எவ்வாறு சொல்வது எப்படி என்பதைத் தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

சரி கல்லைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டுச் சென்றால் மட்டும் போதுமா? கண்டிப்பாகப் போதாது. ஏனென்றால், நீங்கள் கல்லைத் தூக்கி ஓரமாகப் போட்டு விட்டுச் சென்ற மறு நிமிடமோ மறு நாளோ மீண்டும் ஒரு கல் சாலையின் நடுவில் வருவதற்குச் சாத்தியம் உண்டு, அதைத் தவிர்ப்பதற்கு, சாலையின் நடுவில் இருக்கும் கற்களால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் இடைஞ்சல்களையும் பற்றிய விழிப்புணர்வை அங்கு வசிக்கும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் ஏற்படும் விழிப் புணர்வே சமூக சேவையின் உச்சம்.

ஒருங்கிணைப்பு

ஒரே நபரால் இவை அனைத்தையும், கண்டிப்பாக செய்ய முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நபரின் திறமையும் மாறுபடும். சிலர் கல்லை அகற்றுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சிலர் மக்களிடம் சுமுகமாகப் பேசுவதில் இயல்பாகவே திறன் மிகுந்தவர்களாக இருப்பர். சிலர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் அனைவரிடம் இருந்தும் சிறந்த முறையில் வேலை வாங்க நல்ல மேலாளர் தேவை. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மேலாளர் தேவைப்படுவார். அந்த மேலாளர்களை எல்லாம் ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைப்பாளர் தேவைப்படுவார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

கல்லை அகற்றும் ஒரு சின்ன முயற்சி, நாடு முழுவதற்கும் என்றாகும்போது, அதற்காகத் தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கையாலும் திட்டமிடலாலும்  பயிற்சியாலும் எப்படி மலைப்பூட்டும் விதமான பெரும் முயற்சி ஆகிறது என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். ஒரு சிறு முயற்சி பெரு முயற்சி ஆகும் இடத்தில்தான் NGO-க்கள் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உருவாகின்றன.

NGO-க்களின் நோக்கம் உண்மையாகவும் உன்னதமாகவும் இருந்தால், அவர்களை நம்பி தேவைக்கும் அதிகமாக நன்கொடைகளைக் கொடுக்கப் பலர் இன்று உள்ளனர். இதனால் NGO-க்களின் எண்ணிக்கை தற்போது மிகவும் அதிகமாகி விட்டது. பணம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. திட்டத்தின் வெற்றியே அவர்களுக்கு முக்கியம். இதனால், அவர்களுடைய திட்டத்தைச் செயல்படுத்தும் தகுதியான நபர்களுக்கு ‘ஐ.டி’ துறைக்கு இணையான சம்பளத்தை அவர்கள் வழங்குகிறார்கள்.

என்ன படிக்க வேண்டும்?

சமூக சேவையிலோ உளவியலிலோ பட்டம் (B.Sc Psychology, Bachelor of Social Works) பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளநிலையில் வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், ஆன்லைனில் இருக்கும் இலவச வகுப்புகளில் படித்துப் பட்டம் பெற்று சமூக சேவையில் குதிக்கலாம்.

எங்குப் படிக்கலாம்?

https://www.coursera.org/courses?query=social%20work

https://www.udemy.com/learn-social-psychology-fundamentals/

https://www.udemy.com/learn-psychology/

https://www.class-central.com/tag/social%20work

https://academicearth.org/social-work/

http://www.open.edu/openlearn/search-results?as_q=social+works

http://learningpath.org/articles/Free_Online_Social_Work_Courses_from_Top_Universities.html

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x